Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வருமானவரித்துறை சோதனையில் சிக்கிய நயினார் முகமது யார்?

வருமானவரித்துறை

வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா நடந்ததாகத் தெரிவித்து, கடந்த 6-ம் தேதி இரவு, சென்னை ஆர்.கே.நகர்த் தொகுதி கலவரமும், பரபரப்பும் நிறைந்த பகுதியாக மாறியது. அந்தப் பரபரப்பு அடங்குவதற்குள் அடுத்தநாள் (ஏப்ரல் 7-ம் தேதி) காலை வருமான வரித்துறையினர் அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அவரது உறவினர்களின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தி அரசியல் களத்தையே அதிரச்செய்தனர். முன்னாள் எம்.பி. சிட்லப்பாக்கம் ராஜேந்திரன், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதா லட்சுமி ஆகியோரின் வீடுகளிலும் வருமான வரித்துறையின் சோதனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வருமான வரித்துறையினர் சோதனையில் விஜயபாஸ்கரின் உதவியாளர்கள் நயினார் முகமது, கல்பேஷ் ஆகியோரின் வீடுகளும் விடுபடவில்லை. இதில், நயினார் முகமது வீட்டில் இருந்து 3.5 கோடியும் ரூபாயும், கல்பேஷ் வீட்டிலிருந்து ஒரு கோடி ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமானவரித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். விஜயபாஸ்கர், சரத்குமார், கீதா லட்சுமி, சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் ஆகியோரின் பெயர்கள் மட்டுமே ஊடகங்களில் பெரும்பாலும் வெளியான நிலையில், அமைச்சரின் உதவியாளர்கள் பெயர்கள் தொடர்பாக பெரிய அளவில் ஊடகங்களில் எந்தத் தகவலும் வெளியாகவில்லை. எனினும் நயினார் முகமது, கல்பேஷ் ஆகிய இருவரின் ரோல் அமைச்சருக்கு மிக முக்கியமானது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

நயினார் எண்ட்ரி!

இதுதொடர்பாக சென்னை தலைமைச் செயலக அரசு அதிகாரி ஒருவரிடம் பேசியபோது, "திருவல்லிக்கேணி  பிரிண்டிங் பிரஸ் சொசைட்டி என்ற அச்சகத்தை வைத்துள்ளவர் நயினார். இந்த அச்சகத்துக்கு நேரடியாக காண்ட்ராக்ட் கொடுக்கலாம் என்று விதிமுறை உள்ளது. அந்த அடிப்படையில் அரசு சார்பில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கான அழைப்பிதழ் மற்றும் புத்தகங்கள் அச்சடிப்பதற்கான காண்ட்ராக்ட் எடுப்பவர்தான் இந்த நயினார். அரசு அலுவலகங்களுக்குத் தேவையான சில ஸ்டேஷனரி பொருட்களும் இவரிடம் இருந்துதான் சப்ளை செய்யப்படுகின்றன. அதற்கான தொகை தமிழக அரசிடம் இருந்து தாமதமாகத்தான் வரும். ஒரு ரிம் டி.என்.பி.எல் பேப்பர்  600 ரூபாய் என்றால், 1,600 ரூபாய் பில் போட்டு வாங்குவார் நயினார். சொசைட்டி என்பதால் எந்தக் கேள்வியும் எழாமல் நயினாருக்கு சேர வேண்டிய தொகை போய் விடும். அப்படியே அக்கவுண்ட் பிரிவில் இருந்து கேள்வி எழுந்தாலும், அவர்களுக்கு பணத்தைக் கொடுத்து சரிக்கட்டி விடுவார். காண்ட்ராக்ட் எடுக்கும்வரை, 'சிறப்பாக செய்து தருகிறேன்' என்று சொல்வார். ஆனால், அரைகுறையாகத்தான் பிரிண்டிங் செய்து கொடுப்பார். தலைமைச்செயலயத்துக்குள் அப்படி நுழைந்தவர் சுகாதாரத் துறையிலும் பிரிண்டிங் செய்து தருவது, ஸ்டேஷனரி பொருட்கள் வழங்குவது என நுழைந்தார்" என்று தெரிவித்தார்.

அமைச்சர் கொடுத்து வைத்த பணம்?!

மேலும், "இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி அமைச்சர் விஜயபாஸ்கரை நெருங்கிய நயினார் முகமது, காலப்போக்கில் அவருக்கு முழுநேர புரோக்கராக மாறிப் போனார். மருத்துவத்துறை தொடர்பான ஒப்பந்தங்கள், இடமாற்றம், மருத்துவக் கல்லூரிகளில் சீட் வாங்கிக்கொடுப்பது  என நயினாரின் ராஜ்யம் கொடிகட்டிப் பறந்தது. அது மட்டுமன்றி சினிமாவிலும் இவர் நடித்துள்ளார். அமைச்சரின் உதவியாளர்களாக அஜித், சரவணன் என இருவர் இருந்தும் நயினார் முகமது மிக நெருக்கமானவராகத் திகழ்ந்தார். கமிஷன் வாங்கிக் கொடுக்கும் மிகப்பெரிய ரோலுக்குச் சொந்தக்காரர் ஆனார். பணம் ஒரே இடத்தில் இருந்தால் பிரச்னை ஏற்படும் என்று ஒரு பகுதியை நயினாரிடம் விஜயபாஸ்கர் கொடுத்து வைத்திருந்ததாகச் சொல்கின்றனர். அதனால்தான் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையின்போது, திருவல்லிக்கேணியில் உள்ள நயினார் முகமதுவின் இருப்பிடத்திலும் சோதனை நடத்தப்பட்டது. இந்தச் சோதனை திடீரென்று நடத்தப்படவில்லை. விஜயபாஸ்கருக்கு நெருக்கமானவர்கள் யார், யார் என்பதை எல்லாம் நீண்ட நாட்களாக கண்காணித்த பின்னரே, வருமானவரித்துறையினர் இந்த  சோதனையை நடத்தியுள்ளனர். நயினாரைப் பொறுத்தவரை, அரசியல்வாதிகளுடன் நெருங்குவதில் கைதேர்ந்தவர். முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவுக்கும் வேண்டியவராகத் திகழ்ந்தார்" என்றார் அந்த அதிகாரி.

"தி.மு.க-வுக்கு ஒருமுறை பிரசார பாடலை தயாரித்துக் கொடுத்தவர் நயினார் முகமது" என்றும் சொல்கிறார்கள்.
எது எப்படியோ நேர்மையான அதிகாரிகளை அமைச்சர்களுக்குப் பிடிப்பதில்லை. கமிஷன் வாங்கித் தருபவர்களையும் கண்ட்ராக்ட் பிடித்து தருபவர்களையும்தான் பிடிக்கிறது என்ற உண்மை தற்போது வெளிச்சத்துக்கு வரத் தொடங்கியுள்ளது.

- கே.புவனேஸ்வரி

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement