வெளியிடப்பட்ட நேரம்: 14:43 (17/04/2017)

கடைசி தொடர்பு:10:39 (18/04/2017)

விஜயபாஸ்கரை வளைத்த வணங்காமுடிகள்! - ஐ.டி சோதனை பின்னணி

வருமான வரித்துறை அலுவலகம்1

நுங்கம்பாக்கம், ஆயக்கர் பவனில் உள்ள ஐ.ஆர்.எஸ் அதிகாரிகள் வழக்கத்துக்கு மாறான சுறுசுறுப்புடன் வலம் வருகிறார்கள். இன்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜராக இருக்கிறார். "ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களின் வீடுகளில் ரெய்டு நடத்தப் போகும் முன் தேடுதல் பணியில் மிகக் கவனமாக இருப்பார்கள். விஜயபாஸ்கர் விவகாரத்தில் ஆதாரங்கள் துல்லியமாகக் கிடைப்பதற்குக் காரணமே வருமான வரித்துறையின் இரண்டு அதிகாரிகள்தான்" என்கின்றனர் அதிகாரிகள். 

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை முன்வைத்து ஆட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறது மத்தியில் ஆளும் பா.ஜ.க. கடந்த டிசம்பர் மாதம் சேகர் ரெட்டி வளைக்கப்பட்ட நாளில் இருந்து வருமான வரித்துறை அதிகாரிகளின் தூக்கம் பறிபோய்விட்டது. ஒரு சோர்ஸ் கொடுக்கும் தகவலை வைத்து அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வது; ஆளும்கட்சியின் தரகர்கள்; கார்டன் வரை நீளும் பணப் போக்குவரத்து என வருமான வரித்துறையின் புலனாய்வு அதிகாரிகளின் துல்லிய தேடுதல் வேட்டையால் அதிர்ந்து போய் இருக்கிறார் அ.தி.மு.க அம்மா அணியின் டி.டி.வி.தினகரன். வருமான வரித்துறையின் உயர் அதிகாரி ஒருவரிடம் பேசினோம். "சேகர் ரெட்டி, பிரேம்குமார், சீனிவாசலு ஆகியோர் கைது செய்யப்பட்டபோதே, ஆளும்கட்சி தொடர்பான அனைத்து விவரங்களும் சேகரிக்கப்பட்டுவிட்டன. மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவருக்கு, இதுதொடர்பான தகவல்களைக் கொண்டு சேர்த்துவிட்டனர்.

ராய் ஜோஸ்வருமான வரித்துறையைப் பொறுத்தவரையில், ரெய்டு என்ற வார்த்தையைப் பயன்படுவதில்லை. அவர்களைப் பொறுத்தவரையில் இரண்டே வார்த்தைகள்தான். ஒன்று சர்வே; மற்றொன்று சர்ச். ரெய்டுக்கு ஆளாகும் நபர்களைப் பற்றிய துல்லிய விவரங்களைச் சேகரிப்பது; அதன் உண்மைத்தன்மையைப் பரிசோதிப்பது; அது தொடர்பான நிபுணத்துவம் பெற்ற ஐ.ஆர்.எஸ் அதிகாரிகளைத் துணைக்கு வைத்துக் கொண்டு ஆலோசிப்பது போன்றவை சர்வே வகைக்குள் வந்துவிடும். இதன்பின்னர், சர்ச் நடவடிக்கைக்கான நல்ல முகூர்த்தத்தைக் குறிப்பது மிக முக்கியமான பணி. இந்தப் பணியில் சிறிது சுணக்கம் ஏற்பட்டாலும், வெறும் கையோடு திரும்ப வேண்டியது வரும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், சேகர் ரெட்டி தொடங்கி விஜயபாஸ்கர் வரையில் அனைத்தும் மிக துல்லியமாக முடிவெடுக்கப்பட்டன.

வருமான வரித்துறை புலனாய்வுப் பிரிவின் இயக்குநர் ஜெனரல் முரளிகுமார் மற்றும் இயக்குநர் பவன் குமார் மேற்பார்வையில் இந்த விவகாரத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது கூடுதல் இயக்குநர்களான ஜெயராகவனும் ராய் ஜோஸும்தான். எத்தனையோ அதிகாரிகள் இருந்தாலும், மத்திய அரசு இவர்களைப் பயன்படுத்தக் காரணமே, பணியில் காட்டும் கண்டிப்புத்தன்மைதான். வழக்கமாக, தனித்தனியாக ரெய்டுக்குப் போகும் இவர்கள், விஜயபாஸ்கர் வீட்டுக்குள் இணைந்தே சென்று ஆதாரத்தை அள்ளினார்கள்" என விவரித்தவர், 

ஜெயராகவன்"நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயராகவன், வேதியியல் பொறியியல் படிப்பில் பி.டெக் முடித்தவர். மிகச் சாதாரணமான குடும்பத்தில் இருந்து ஐ.ஆர்.எஸ் பதவியை எட்டிப் பிடித்தவர். இவருக்கு முதல் பணியிடமே கர்நாடகாவில் வழங்கப்பட்டது. அங்கு மிகப் பெரிய வைர வியாபாரியை ட்ரேப் செய்து பிடித்ததில், இவரது பங்கு மிக அதிகம். பழகுவதற்கு மிகவும் இனிமையானவர். கடந்த ஐந்தாண்டுகளாக நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித்துறையின் புலனாய்வுப் பிரிவில் பணிபுரிந்து வருகிறார். தேடுதல் வேட்டை என்று வந்துவிட்டால், எந்த சமரசத்துக்கும் இடம் கொடுக்க மாட்டார். வழக்கமாக ரெய்டுக்குப் போகும்போது, எதிர் முகாமில் அதிகம் பேர் திரண்டு எதிர்த்தால், அதிகாரிகள் திரும்பிவிடுவது வாடிக்கை. இதைப் பற்றியெல்லாம் ஜெயராகவன் கவலைப்பட்டதில்லை. எந்த இடத்தில் இருந்தும் அவர் வெறும் கையோடு திரும்பி வந்ததில்லை.

அதேபோல்தான், கூடுதல் இயக்குநர் ராய் ஜோஸும். கேரளாவைச் சேர்ந்த இவருக்கு முதல் பணியிடம் ஆந்திராவில் வழங்கப்பட்டது. பி.ஏ, எம்.ஏ படிப்பில் அரசியல் அறிவியலைப் பாடமாக எடுத்துப் படித்தவர். ஜெயராகவனைவிட மூன்று வயது பெரியவர். இந்தக் கூட்டணிதான் விஜயபாஸ்கர் வீட்டைக் குடைந்து ஆதாரத்தை வெளிக் கொண்டு வந்தது. தமிழ்நாட்டில் பதவியில் இருக்கும் அமைச்சர் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டது இதுதான் முதல்முறை. அதிலும், சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் துணையோடு வெற்றிகரமாக ரெய்டை நடத்தி முடித்தனர். இப்படியொரு துணிச்சலைத்தான் மத்திய நிதித்துறை அமைச்சக அதிகாரிகளும் விரும்புகிறார்கள். வருமான வரித்துறையின் எந்தக் கேள்விகளுக்கும் பதில் சொல்ல முடியாத அளவுக்கு, விஜயபாஸ்கர் வளைக்கப்பட்டிருக்கிறார். அவர் அளிக்கும் வாக்குமூலத்தை வைத்து, ஆட்சியின் அஸ்திவாரத்தை அசைக்கும் அளவுக்கு ரெய்டு காட்சிகள் அரங்கேற இருக்கின்றன" என்றார் விரிவாக. 

'அ.தி.மு.க எஃகு கோட்டையைப் போன்றது' என்ற வார்த்தையைப் பலமுறை கட்சி விழாக்களில் கூறியிருக்கிறார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அந்த எஃகு கோட்டைக்குள் படிந்து கிடந்த ஊழல் கறையான்களை அப்புறப்படுத்துவதில் வெற்றி கண்டுள்ளனர் வருமான வரித்துறையின் புலனாய்வு பிரிவு ஐ.ஆர்.எஸ் அதிகாரிகள். 

- ஆ.விஜயானந்த்


டிரெண்டிங் @ விகடன்