வெளியிடப்பட்ட நேரம்: 15:40 (17/04/2017)

கடைசி தொடர்பு:15:35 (17/04/2017)

முதல்வர் பழனிசாமியை சந்தித்தது ஏன்? தம்பிதுரை பரபர பேட்டி

தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை திடீரென சந்தித்துப் பேசினார்.

சசிகலா அணியைச் சேர்ந்த மக்களவை சபாநாயகரும் கரூர் எம்பியுமான தம்பிதுரை இன்று நண்பகல் 12 மணிக்கு தலைமைச் செயலகத்துக்கு திடீரென வருகை வந்தார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறைக்குச் சென்ற அவர், இரண்டு மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.

இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமது தொகுதி பிரச்னைகள் தொடர்பாக முதலமைச்சரை சந்தித்ததாகவும், கிருஷ்ணகிரியில் தடுப்பணை  கட்டுவது குறித்து ஆலோசனை நடத்தியதாகவும் தெரிவித்தார்.

டி.டி.வி.தினகரனுக்கு டெல்லி காவல்துறை சம்மன் அனுப்ப உள்ளதாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அதுகுறித்து தமக்கு ஏதும் தெரியாது என்று தம்பிதுரை தெரிவித்தார்.

தற்போது தமிழகத்தில் நிலையான ஆட்சி நடைபெற்று வருவதாகவும், அமைச்சர்களால் எந்த நெருக்கடியும் இல்லை என்று தெரிவித்த தம்பிதுரை, அ.தி.மு.க.வில் பிளவு ஏதும் இல்லை என்றும், எப்போது தேர்தல் வைத்தாலும் தாங்கள்தான் வெற்றிபெறுவோம் என்றும் குறிப்பிட்டார்.