வெளியிடப்பட்ட நேரம்: 20:59 (17/04/2017)

கடைசி தொடர்பு:20:59 (17/04/2017)

சக்தி வாய்ந்த இந்தியர்கள் பட்டியலில் ரஜினி, கமல், சந்திரசேகரன், ஷிவ் நாடார்!

ந்தியாவின் சச்தி வாய்ந்த 50 நபர்கள் பட்டியலில், தமிழகத்தைச் சேர்ந்த என். சந்திரசேகரன், ஷிவ் நாடார், கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் உள்ளிட்ட 6 பேர் இடம் பிடித்துள்ளனர். 

 சக்தி வாய்ந்த இந்தியர்கள் சந்திரசேகரன்

அண்மையில் டாடா சன்ஸ் போர்டு தலைவராக நியமிக்கப்பட்ட என். சந்திரசேகரன் பத்தாவது இடம்பிடித்துள்ளார். இந்தப் பட்டியலில் அவர் இடம்பிடிப்பது இதுவே முதன்முறை. சந்திரசேகரன், நாமக்கல் மாவட்டம் மோகனூரைச் சேர்ந்த விவசாயி நடராஜனின் மகன். சந்திரசேகரனின் தந்தை இப்போதும் மோகனூரில் விவசாயம் செய்து வருகிறார். ஹெச்.சி.எல். தலைவர் ஷிவ் நாடாருக்கு பட்டியலில் 16வது இடம். கடந்த ஆண்டும் அவர் அதே இடத்தில்தான் இருந்தார்.

நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் முதன்முறையாக இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். ரஜினி 33-வது இடத்திலும் கமல் 45-வது இடத்திலும் உள்ளனர். சுப்ரமணியன் சுவாமிக்கு 20வது இடம். எழுத்தாளர் குருமூர்த்திக்கு 30-வது இடம் கிடைத்துள்ளது. கடந்த முறை அவர் 24வது இடத்தில் இருந்தார். 

சக்தி வாய்ந்த இந்தியர்கள் பட்டியலில் புதியதாக 17 பேர் இடம்பிடித்துள்ளனர். ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற பேட்மின்டன் வீராங்கனை சிந்து முதன்முறையாக பட்டியலில் இடம் பெற்றுள்ளார். அவருக்கு 36-வது இடம். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு 11-வது இடம். கடந்த முறை 29-வது இடத்தில் இருந்த கோலி இந்த முறை 18 இடங்கள் முன்னேறியுள்ளார். புனே அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா முதன்முறையாக  பட்டியலுக்குள் புகுந்துள்ளார். இவருக்கு 27வது இடம். 

சக்தி வாய்ந்த இந்தியர்கள் ஷிவ் நாடார்

அகில இந்திய அளவில்  ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி முதலிடம் பெற்றுள்ளார். கடந்த ஆண்டும் இவர் முதலிடத்தில்தான் இருந்தார். டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடாவுக்கு இரண்டாவது இடம். கடந்த ஆண்டு ஆறாவது இடத்தில் இருந்தார். ஆதித்யா பிர்லா குழுமத் தலைவர் கே.எம். பிர்லாவுக்கு மூன்றாவது இடம். கடந்த முறை இரண்டாவது இடத்தில் இருந்த அதானி குழுமத் தலைவர் கௌதம் அதானி நான்காவது இடத்துக்கு பின்தங்கியுள்ளார். பாபா ராம்தேவ் ஒன்பதாவது இடத்தில் இருந்து ஐந்தாவது இடத்துக்கு முன்னேறியிருக்கிறார். மகிந்த்ரா குழுமத் தலைவர் ஆனந்த் மகிந்த்ரா ஒரு இடம் முன்னேறி ஆறாவது இடத்தைப் பெற்றிருக்கிறார். திலீப் சங்வி  ஒன்பதாவது இடத்தையும் ஆஷிம் பிரேம்ஜி பத்தாவது இடத்தையும் பெறுகின்றனர். 

சுனில் மிட்டலுக்கு 14-வது இடம். பாலிவுட் நட்சத்திரம் அமிதாப்பச்சனுக்கு 15-வது இடம். எஸ்.பி.ஐ தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா 19-வது இடம். அனில் அம்பானிக்கு 25-வது இடம். கடந்த ஆண்டு அனில் அம்பானி ஐந்தாவது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. நீதா அம்பானி 28வது இடத்தையும் சல்மான்கான் 29வது இடத்தையும் வகிக்கின்றனர். ஷாருக்கானுக்கு 44வது இடம். அக் ஷய் குமார் புதுமுகமாக பட்டியலுக்குள் நுழைந்து 44வது இடத்தை பெற்றுள்ளார். அமீர் கானுக்கு 47வது இடம். 

சக்தி வாய்ந்த இந்தியர்கள் ரஜினி, கமல்

மீடியாவைப் பொறுத்த வரை டைம்ஸ் குழும மேலாண் இயக்குநர் வினீத் ஜெயின் 23வது இடத்தையும் ஜீ தொலைக்காட்சி ( Essel Group) அதிபர் சுபாஷ் சந்திரா 31வது இடத்தையும் பிடித்துள்ளனர். 

டாடா குழுமத் தலைவராக இருந்த சைரஸ் மிஸ்திரி, வாழும் கலை அமைப்பு நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் ஆகியோர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களில் முக்கியமானவர்கள். டாடா குழுமத்தில் சைரஸ் மிஸ்திரியால் ஏற்பட்ட பிரச்னை காரணமாகவும்  குழுமத் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாலும் அவர் மவுசு இழந்தார். யமுனை நதியை பாழ்படுத்திய விவகாரத்தில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கருக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டு, அவரும் பட்டியலில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். தொழிலதிபர்கள்  29 பேரும் கலைத்துறைச் சேர்ந்த 9 பேரும் அதிகபட்சமாக இடம் பெற்றுள்ளனர். இரு அரசியல்வாதிகளுக்கு மட்டுமே இடம் கிடைத்துள்ளது. 50 பேர் கொண்ட பட்டியலில் இருவர்தான் பெண்கள். 

கடந்த 2003-ம் ஆண்டில் இருந்து வெளியிடப்படும் இந்த பட்டியலில் ரிலையன்ஸ் அதிகர் முகேஷ் அம்பானி  முதல் அல்லது இரண்டாவது இடத்தை பிடித்துவிடுகிறார். ரத்தன் டாடா, அமிதாப், ஷாருக்கான் போன்றவர்களும் ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் இடம் பெறுகின்றனர். 

-எம்.குமரேசன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்