வெளியிடப்பட்ட நேரம்: 19:08 (17/04/2017)

கடைசி தொடர்பு:19:08 (17/04/2017)

அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்படுகிறார் விஜயபாஸ்கர்?

Vijayabaskar

ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்னை வந்துள்ள நிலையில், அமைச்சர் பதவியில் இருந்து விஜயபாஸ்கர் நீக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த 7-ம் தேதி வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை செய்தனர். இந்த சோதனையின்போது முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, விஜயபாஸ்கருக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பியது. இதைத்தொடர்ந்து கடந்த 10-ம் தேதி,  நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் விஜயபாஸ்கர் ஆஜராகி, கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து விளக்கம் அளித்தார். அப்போது, அவரிடம் பல கிடுக்கிப்பிடி கேள்விகள் கேட்கப்பட்டன.

இந்நிலையில், ஏப்ரல் 17-ம் தேதி (இன்று) ஆஜராகும்படி விஜயபாஸ்கருக்கு வருமான வரித்துறை மீண்டும் சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால், விஜயபாஸ்கர் ஆஜராகவில்லை. அவர் தனது உதவியாளரிடம் ஆவணங்களை கொடுத்தனுப்பி சமர்ப்பிக்க வைத்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது. அமைச்சர் பதவியில் இருந்து விஜயபாஸ்கரை நீக்க வேண்டும் என்று டெல்லியில் இருந்து தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதனிடையே, தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமியை இன்று தம்பிதுரை திடீரென இரண்டுமுறை சந்தித்துப் பேசினார். இரண்டு மணி நேரத்துக்கு மேல் இந்த ஆலோசனை நடைபெற்றது. அப்போது, விஜயபாஸ்கரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவது குறித்து பேசியதாகத் தெரிகிறது. முன்னதாக, தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று சென்னை வந்துள்ளார். விஜயபாஸ்கர் நீக்கம் குறித்த அறிவிப்பு ஆளுநர் மாளிகையில் இருந்த இரவு வரலாம் என கூறப்படுகிறது.