“வீட்டை விட்டு வராதீங்க!” - அலெர்ட் செய்யும் அரசு... கோடையை எப்படி சமாளிப்பது? #HeatWaves | Tips to beat this summer heat waves

வெளியிடப்பட்ட நேரம்: 08:27 (18/04/2017)

கடைசி தொடர்பு:14:03 (18/04/2017)

“வீட்டை விட்டு வராதீங்க!” - அலெர்ட் செய்யும் அரசு... கோடையை எப்படி சமாளிப்பது? #HeatWaves

 கோடை

தமிழகத்தில் ஏப்ரல் 17 மற்றும் 18-ம் தேதிகளில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும், அனல் காற்று வீசும், இதனால் பகல் 12 முதல் மாலை 3 மணிவரை பொதுமக்கள் யாரும் வெளியில் செல்ல வேண்டாம் என தமிழ்நாடு பேரிடர் மேளாண்மை ஏஜென்சி அவசர அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. தமிழகத்தில் வெப்பம் அதிகமாக உள்ள  18 மாவட்டங்களில் உள்ள ஆட்சியர்களுக்கு இது குறித்து அவசர உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு உடனடியாக அறிவிப்பு செய்யவும், மக்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடைகாலத்தை சமாளிக்க பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.

சென்னையில் உள்ள தமிழக பேரிடர் மேலாண்மை இயக்குநர் லதா ஐ.ஏ.எஸ் அவர்கள், “சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 18 மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும். ஆகவே பொதுமக்கள் யாரும் வெயில் நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்” என  மக்களுக்கு அறிவுறுத்துமாறு 18 மாவட்ட ஆட்சியர்களுக்கு அவசர அறிவிப்பு ஒன்றை அனுப்பியுள்ளார்.  

கடந்த 137 ஆண்டுகளில் வெப்பம் அதிகமாக உள்ள இரண்டாவது மாதமாக கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டுள்ளது. உலகின் உள்ள 6300 இடங்களில் இருந்து புள்ளிவிவரங்கள் பெறப்பட்டு, அதன் அடிப்படையில் இந்தத் தகவலை அமெரிக்க வானியல் ஆய்வு மையமான நாசா வெளியிட்டுள்ளது. 

கோடை

தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த 24 மணிநேரத்தில் பதிவான வெப்ப நிலையைப் பொறுத்தவரை அதிகபட்சமாக வேலூரில் 42.9 டிகிரி செல்சியஸ் (107 டிகிரி பாரன்ஹீட்), இதற்கு அடுத்தபடியாக திருச்சிராப்பள்ளி, வேலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூரில் 41 டிகிரி செல்சியஸ் (105 டிகிரி பாரன்ஹீட்) வெப்பம் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் கோடைக்காலம் ஆரம்பித்ததிலிருந்தே அதிகமான வெப்பம் பதிவாகிய கரூர் பரமத்தியில் 107 டிகிரி பாரன் ஹீட்டுக்கும் அதிகமான வெப்பம் பதிவாகியுள்ளது. 

தற்போது இந்த அளவுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதற்கு பருவமழை பொய்த்துப் போனது ஒரு முக்கியமான காரணமாக சொல்லப்படுகிறது. வறண்ட வானிலை நிலவுவதாலும், வெப்பம் அதிகமாக இருப்பதாலும் காற்றில் இருக்கும் ஈரப்பதத்தை காற்று உறிஞ்சி எடுத்துக் கொள்கிறது. வெப்பச்சலனத்தின் காரணமாக உள்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், கடலோட மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வர்தா புயலும் ஒரு காரணமாக இருக்கலாம்.

 தமிழக பேரிடர் மேலாண்மை ஏஜென்சியின் உத்தரவுப்படி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா அவர்கள் காஞ்சிபுரம் மாவட்ட பொதுமக்களுக்கு சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார். 

  1. தினமும் பருகும் குடிநீரை விட அதிகமாக பருக வேண்டும்.
  2. இரவு நேரங்களில் வீட்டில் உள்ள ஜன்னல் கதவுகளை திறந்து வைக்க வேண்டும். அவ்வாறு திறந்து வைப்பதால் வெயிலின் தாக்கம் குறைவாக இருக்கும் 
  3. கால்நடைகளை கொட்டகையில் வைத்து பராமரிக்க வேண்டும். 
  4. உடுத்தும் ஆடைகள் எடைகுறைவாகவும், வெளீர் நிறத்தில் தளர்வாகவும் இருக்க வேண்டும். பருத்தி ஆடைகளையே உடுத்துவது உடலுக்கு நல்லது.
  5. வெளியில் செல்லும்போது குளிர் கண்ணாடி, காலணி மற்றும் தொப்பி அணிந்து செல்ல வேண்டும். குடையை எடுத்துச் செல்லவும் தயங்க வேண்டாம்.
  6. அவசிய பணிநிமித்தமாக வெளியில் செல்ல நேரும்போது, ஈரமான துணியினை முகம், கழுத்து மற்றும் மூட்டுகளில் படுமாறு போட்டுக் கொண்டு வெளியே செல்ல வேண்டும். 
  7. டீ, காபி, கார்பனேட் குளிர்பானங்கள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.
  8. ஓஆர்எஸ் பவுடர், நீர் ஆகாரம், மோர், எலுமிச்சை சாறுகலந்த நீர் மற்றும் இதர வெயிலுக்கு ஏற்ற பானங்களை அவ்வப்போது பருகி வெயிலின் தாக்கத்தை குறைத்துக் கொள்ள வேண்டும்.
  9. உடல் மிகவும் சோர்வுற்றாலோ, வெயிலின் தாக்கத்தினால் ஏற்படும் பாதிப்புகள் அதிகமிருந்தாலோ அருகில் உள்ள மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்று வருவது நல்லது.

ஒவ்வொருவரும் முடிந்தவரை தங்கள் வீட்டில் உள்ள முதியவர்களைப் பாதுகாக்க வேண்டும். மற்றவர்களுக்கும் இதை தெரிவித்து அவர்களுக்கும் உதவலாமே!

- பா.ஜெயவேல்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close