வளைக்கப்படுகிறாரா டி.டி.வி தினகரன்?- களத்தில் டெல்லி காவல்துறை! | Is TTV Dinakaran going to be arrested by Delhi police

வெளியிடப்பட்ட நேரம்: 01:55 (18/04/2017)

கடைசி தொடர்பு:09:03 (18/04/2017)

வளைக்கப்படுகிறாரா டி.டி.வி தினகரன்?- களத்தில் டெல்லி காவல்துறை!

Dinakaran

அ.தி.மு.கவில் பரபரப்பான காட்சிகள் அடுத்தடுத்து அரங்கேறிவரும் நிலையில் மத்திய அரசும் தன் பங்குக்கு பரபரப்பை உண்டாக்க தினகரனை வளைக்க திட்டமிட்டுள்ளது. 

அ.தி.மு.கவில் ஏற்பட்ட பிரிவைத் தொடர்ந்து அ.தி.மு.கவின் இரட்டை இலைச் சின்னம் யாருக்கு என்ற கோதாவில் சசிகலா தரப்பும், பன்னீர் தரப்பும் இறங்கியது. இரட்டை இலைச் சின்னம் தங்களுக்கு வேண்டும் என்று இரண்டு தரப்புகளும் டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் முறையிட்டது. ஏப்ரல் 17-ம் தேதி வரை சின்னம் குறித்த முடிவை நிறுத்தி வைத்த தேர்தல் ஆணையம், இரட்டை இ்லைச் சின்னத்தையும் முடக்கிவைத்தது.

இந்நிலையில், இன்று தேர்தல் ஆணையத்தில் இரட்டை இலை குறித்து முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. பன்னீர் அணியின் வழக்கறிஞர்களும், சசிகலா தரப்பின் வழக்கறிஞர்களும் தேர்தல் ஆணையத்தில் இன்று ஆஜர் ஆகியிருந்தனர். ஆனால் அதற்கு முன்பு டெல்லி போலீசார் வெளியிட்ட ஒரு தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இரட்டை இலைச் சின்னத்தை தினகரன் தரப்புக்கு பெற்றுத் தர டெல்லியைச் சேர்ந்த சுகேஷ் சந்தர் ஷேகர் என்பவர் மூலம் முக்கிய அதிகாரி ஒருவருக்கு 60 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க தினகரன் முயன்றுள்ளார். சுகேஷ் சந்தர் ஷேகர் வீட்டில் டெல்லி போலீஸ் ஆய்வு நடத்தி 1.3 கோடி ரூபாய் பணத்தை கைப்பற்றியதாக போட்டோ ஆதாரத்துடன் டெல்லி போலீஸ் வழக்குப்பதிவு செய்தது. தினகரன் மீது பிணையில் வெளிவர முடியாத கிரிமினல் வழக்கும் பதிவு செய்யப்பட்டது. 

தினகரனோ சிறையில் உள்ள சசிகலாவை சந்திக்க பெங்களூரு கிளம்பிவிட்டார். பெங்களூரு செல்லும் முன் செய்தியாளர்களைச் சந்தித்த தினகரன், “சுகேஷ் சந்தர் ஷேகர் யார் என்றே தெரியாது. நான் யாரிடமும் பணம் கொடுக்கவில்லை” என்று கூறிவிட்டு கிளம்பினார். 

தினகரன் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற தகவல் இன்று பரவியது. தினகரன் தரப்பு கைது செய்வதற்கு வாய்ப்பு இல்லை என்ற தைரியத்தில் இருந்தது. ஆனால், டெல்லி காவல்துறை தினகரனை கைது செய்யும் முடிவில் இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் இருந்து காவல்துறையினர் இரண்டு குழுக்களாக கிளம்பியிருப்பதாகவும், ஒரு குழு பெங்களூருக்கும், மற்றொரு குழு சென்னைக்கு வந்துகொண்டிருப்பதாக டெல்லியில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே நேரம், சசிகலாவை காண பெங்களூரு சென்ற தினகரன் சிறைக்குச் செல்லவில்லை என்ற தகவலால் தினகரன் இப்போது எங்கிருக்கிறார் என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. 

அ.தி.மு.கவில் இரண்டு அணிகளும் இணைவதற்கான  பூர்வாங்க பணிகள் துவங்கியிருக்கும் நிலையில் தினகரன் வெளியே இருந்தால் அதற்கு முட்டுக்கட்டை போடுவார் என்பதால் மத்திய அரசு அவரை கைது செய்ய ஆர்வம் காட்டிவருவதாகக் கூறப்படுகிறது. நாளைக்குள் (18-4-17) தினகரன் கைது செய்யபட்டு டெல்லி கொண்டுவர வேண்டும் என்ற அஜெண்டா தான் இரண்டு குழுவுக்கும் கொடுக்கப்பட்டுள்ளதாம்.

அ.சையது அபுதாஹிர்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்