சைலன்ஸ்!’ சசிகலா, டி.டி.வி.தினகரனின் ‘அமைதி’ பின்னணி!

 டி.டி.வி.தினகரன்

சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இரண்டு அணிகள் இணைவதற்கான முயற்சிகள் நடந்துவருவதற்கு சசிகலா, டி.டி.வி.தினகரன் தரப்பிலிருந்து எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கப்படவில்லை. அவர்கள் இருவரும் அமைதியாக இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. 

ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அ.தி.மு.க. பொதுக்குழு, செயற்குழுவில் சசிகலா பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அடுத்து, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். முதல்வராகும் முயற்சியில் சசிகலா ஈடுபட்டார். இந்தச் சூழ்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, சிறைக்குச் சென்றதால் முதல்வராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.

இதற்கிடையில், சசிகலாவுடன் ஏற்பட்ட அதிகார மோதலால் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தனி அணி உருவானது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சசிகலா அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் போட்டியிட்டது. இரண்டு அணிகளும் இரட்டை இலைச் சின்னத்துக்கு உரிமைகோரியதால் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. சின்னத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் சசிகலா அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்த விவகாரத்தில் தேர்தல் நிறுத்தப்பட்டது. அடுத்து, அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் எம்.பி.சிட்லபாக்கம் ராஜேந்திரன், டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவளித்த சமக தலைவர் சரத்குமார், துணை வேந்தர் கீதாலட்சுமி ஆகியோரது வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இது, சசிகலா அணியினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அமைச்சர் விஜயபாஸ்கர், கீதாலட்சுமியிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் துருவி, துருவி விசாரணை நடத்தினர். அமைச்சர் விஜயபாஸ்கரைத் தொடர்ந்து இன்னும் சில அமைச்சர்கள் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தவுள்ளதாக தகவல்கள் பரவின.

இந்தச் சூழ்நிலையில் தமிழ்புத்தாண்டையொட்டி சென்னையில் உள்ள துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமையில்சசிகலா ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில் அமைச்சர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர். வருமான வரித்துறை சோதனை குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது, அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிராக சில அமைச்சர்கள் பேசினர். துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனைக்கூட சிலர் எதிர்த்து பேசியதாகவும் சொல்லப்படுகிறது. கூட்டத்தில் இரட்டை இலைச் சின்னத்தை மீட்டெடுக்க ஓ.பன்னீர்செல்வம் அணியை நம்முடன் இணைப்பதே நிரந்தரத் தீர்வு என்று ஆறு அமைச்சர்கள் பேசியுள்ளனர். இதற்கு, டி.டி.வி.தினகரன் தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 17-ம் தேதி  குறுக்குவழியில் இரட்டை இலைச் சின்னத்தை மீட்டெடுக்க பிரபல புரோக்கர் சுகேஷ் சந்திரசேகரிடம் டி.டி.வி.தினகரன் தரப்பு ஒருகோடியே 30 லட்சம் ரூபாய் பணம் கொடுத்ததாக டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டார். டி.டி.வி.தினகரன் மீதும் மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடத்தவுள்ளதாக டெல்லி போலீஸார் தெரிவித்தனர். இதன்பிறகு டி.டி.வி.தினகரன் தரப்பு அமைதியாகிவிட்டதாம்.

இதன்பிறகு ஆறு அமைச்சர்கள், ஓ.பன்னீர்செல்வம் அணியை இணைப்பது தொடர்பாக தீவிர முயற்சியில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் சீனியர் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர். பன்னீர்செல்வத்துடன் பேச்சுவார்த்தை நடத்த சசிகலா அணியிலிருந்து அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன், ஓ.எஸ்.மணியன், திண்டுக்கல் சீனிவாசன், சண்முகம், வேலுமணி, தங்கமணி மற்றும் எம்.பிக்கள் வைத்தியலிங்கம், வேணுகோபால் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. தற்போது, ஓ.பன்னீர்செல்வம் சொந்த ஊரில் இருக்கிறார். அந்த அணி தரப்பிலும் சசிகலா அணியுடன் பேச்சுவார்த்தை நடத்த குழு அமைக்கப்படவுள்ளது. இந்த இரண்டு குழுக்களும் இன்று அல்லது நாளை பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதற்கிடையில் டி.டி.வி.தினகரனைச் சந்தித்த மூத்த அமைச்சர்கள், அமைச்சர் விஜயபாஸ்கர் விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்தியுள்ளனர். அப்போது, டி.டி.வி.தினகரன், அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சப்போர்ட்டாக பேசியதாக கூறப்படுகிறது. இதற்கு மூத்த அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்தாகச் சொல்லப்படுகிறது. சசிகலா அணியில் உள்ள தீவிர விசுவாசிகள், சசிகலாவைச் சந்தித்துப் பேச முடிவு செய்துள்ளனர். இதற்காக அவர்கள் பெங்களூருக்குச் சென்றுள்ளனர். சசிகலாவிடம் ஆலோசனை நடத்தியப்பிறகு தீவிர விசுவாசிகள் முடிவு எடுக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

சசிகலா அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி ஆகியவை இணைவதற்கான ஆரம்பக்கட்ட முயற்சிகள் நடந்து வருவதை தீபா அணியினர் அதிர்ச்சியுடன் பார்த்துவருகின்றனர். அதேநேரத்தில் அ.தி.மு.க. தொண்டர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். விரைவில் இரட்டை இலைச் சின்னம் மீட்டெடுக்கப்படவுள்ளதால் தமிழகம் முழுவதும் உள்ள இரண்டு அணிகளைச் சேர்ந்த கட்சியினர் மீண்டும் அரசியல் பேசத் தொடங்கிவிட்டனர். 

ஓ.பன்னீர்செல்வம், சசிகலா

இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் அணியினர் கூறுகையில், "இரட்டை இலைச் சின்னத்தை மீட்டெடுக்க இரண்டு அணிகள் ஒன்று சேர முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எங்கள் அணி தரப்பில் ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் முதல்வராக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளோம். அதற்கு சசிகலா அணியினர் சம்மதம் தெரிவித்துள்ளனர். இதனால் தற்போதுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு துணை முதல்வர் பதவி வழங்க அந்த அணியினர் தெரிவித்தனர். அதற்கு நாங்களும் சம்மதம் தெரிவித்துள்ளோம். இதுபோல கட்சிப்பதவிகளிலும் மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. இவையெல்லாம் பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்படும். எங்களின் குறிக்கோளான சசிகலா, டி.டி.வி.தினகரன் என ஒருகுடும்பத்தின் பிடியில் கட்சி இருக்கக்கூடாது. அதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுக்கப்படும்" என்றனர். 

 சசிகலா அணியினர் கூறுகையில், "ஓ.பன்னீர்செல்வம் அணியினருடன் பேச்சுவார்த்தை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு எடுக்கும் முடிவுக்கு அனைவரும் கட்டுப்படுவோம். சசிகலா, டி.டி.வி.தினகரனிடம் ஓ.பன்னீர்செல்வம் அணியினருடன் இணைவது குறித்து ஆலோசித்துள்ளோம். இன்றைய அரசியல் சூழ்நிலையில் இதுதான் நல்லமுடிவு என்று சசிகலா, டி.டி.வி.தினகரன் தரப்பினரும் கருதுகின்றனர். விரைவில் அ.தி.மு.க.வின் இரண்டு அணிகள் இணைந்து இரட்டை இலைச் சின்னம் மீட்டெடுக்கப்படும். அமைச்சரவையிலும் சில மாற்றங்கள் ஏற்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தையின்போது முடிவு செய்யப்படும்" என்றனர். 

- எஸ்.மகேஷ் 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!