வெளியிடப்பட்ட நேரம்: 13:28 (18/04/2017)

கடைசி தொடர்பு:14:39 (18/04/2017)

சசிகலா குறித்து பெரியகுளத்தில் பன்னீர்செல்வம் பரபர பேட்டி!

Panneerselvam

மன்னிப்புக்கடிதம் கொடுத்த பின்னர், சசிகலாவை உதவியாளராகத்தான் ஜெயலலிதா வைத்திருந்தார் என்றும், நீக்கப்பட்ட அவரின் குடும்பத்தினர் 16 பேரையும் ஜெயலலிதா மரணம் அடையும் வரை கட்சியின் உறுப்பினராகவும் சேர்க்கவில்லை, வீட்டுக்குள்ளும் அனுமதிக்கவில்லை என்றும் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கூறினார்.

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், " எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் அ.தி.மு.க-வைத் தொண்டர்கள் இயக்கமாகவும் மக்கள் இயக்கமாகவும் வளர்த்துவந்தார்கள். எந்தவொரு குடும்பத்துக்குள்ளும் அ.தி.மு.க சென்றுவிடக்கூடாது என்பதில் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் உறுதியான நிலைப்பாட்டைக்கொண்டிருந்தார்கள். அ.தி.மு.க வரலாற்றில் இது பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. ஜெயலலிதா, 2011-ம் ஆண்டு, சசிகலாவையும் அவரின் குடும்பத்தினரையும் தம் இல்லத்திலிருந்தும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் என்பதிலிருந்தும் விலக்கிவைத்தார்.

நான்கு மாதங்களுக்குப் பிறகு சசிகலா, "நான் அரசியலில் ஈடுபட மாட்டேன். அரசியலில் எந்தப் பொறுப்புக்கும் வரமாட்டேன். நாடாளுமன்ற உறுப்பினராகவோ, சட்டமன்ற உறுப்பினராகவோ நான் வரமாட்டேன். அக்காவுக்கு (ஜெயலலிதா) எங்கள் குடும்பத்தினர் செய்த சதி எனக்கு இப்போதுதான் தெரியவந்திருக்கிறது" என்று மன்னிப்புக் கடிதம் எழுதிக்கொடுத்ததனால்தான் ஜெயலலிதா, அவரை மட்டும் (சசிகலா) உதவியாளராக அனுமதித்து, அவரோடு விலக்கப்பட்ட பதினாறு பேரையும் தனது மரணம் வரை கட்சியின் உறுப்பினராகச் சேர்க்கவுமில்லை, வீட்டுக்குள் அனுதிக்கவுமில்லை என்பது, நாம் நன்றாக அறிந்தது. ஜெயலலிதாவின் உறுதியான நிலைப்பாடும் அதுதான். அதைத்தான் நாங்கள் இன்றைக்கும் சொல்லிக்கொண்டிருக்கிறோம்.

எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் இந்த இயக்கத்தை தொண்டர்கள் இயக்கமாக, மக்கள் இயக்கமாகத்தான் வளர்த்தார்கள். அதன்படிதான் இந்த இயக்கத்தை வழிநடத்திச்செல்ல வேண்டும். அவருடைய பாதையில்தான், மக்களாட்சியாகத்தான் வழிநடத்திச்செல்ல வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து சொல்லிக்கொண்டு வருகிறோம். இதில், எந்த கருத்து வேறுபாடும் கிடையாது. இரண்டு மாபெரும் தலைவர்களின் பாதையில் செல்வதுதான், ஒரு இயக்கத்துக்கு செய்கிற நன்றி. அதிலிருந்து நாம் மாறுபடுவோமானால், இயக்கத்துக்குச் செய்கிற துரோகம்.

இன்னொன்று ஜெயலலிதாவின் மரணம். அந்த மரணத்துக்கு உரிய நீதி விசாரணை உருவாக்கப்பட்டு, நீதி விசாரணையின்மூலம் ஜெயலலிதாவின் சிகிச்சை முறைகளை நாட்டு மக்களுக்கு, அதில் பொதிந்திருக்கிற மர்மத்தை வெளிக்கொணர வேண்டும் என்பதுதான் முதல் கோரிக்கையாக நாங்கள் தொடர்ந்து வலியுறுத்திவருகிறோம் என்பதை அனைவரும் நன்றாக அறிவர். கட்சியின் பொதுச் செயலாளர் தேர்வு முறையே, கட்சியின் சட்டவிதிக்குப் புறம்பானது. கட்சியின் சட்டவிதி என்னசொல்வதென்றால், கட்சியின் அடிப்படைத் தொண்டர்கள், உறுப்பினர்கள் சேர்ந்து, கட்சியின் பொதுச்செயலாளரைத் தேர்வுசெய்ய வேண்டும் என்பதுதான்.

நியமனம் என்பது கட்சியின் சட்டவிதி. பொதுச் செயலாளரைத் தேர்ந்தெடுக்கும் முறையில்லை. ஆகவே, சசிகலா  தேர்வுபெற்றது கட்சியின் சட்டவிதிப்படி செல்லாது. அவர் செய்திருக்கும் நியமனமும் செல்லாது. அவர் சில பேரை கட்சியில் இருந்து நீக்கியிருக்கிறார். அதுவும் செல்லாது என்பதுதான் நாங்கள் தொடர்ந்து வலியுறுத்திவருகிறோம். இதுகுறித்து, இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் நேற்று மனு ஒன்றைக் கொடுத்திருக்கிறோம். அந்த மனுவில், "கட்சியின் பொதுச்செயலாளர் தேர்வில் நடைபெற்றுள்ள விதியை எடுத்துக்கொண்டு விசாரித்து, கட்சி சட்டவிதி என்ன சொல்கிறதோ, அதன் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும்" என்று கூறியிருக்கிறோம். அந்த மனுவின் அடிப்படையில் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தியுள்ளோம்.

இடையில், ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அவர்கள் அணி சார்பில் டி.டி.வி.தினகரன் தேர்தல் களத்தில் நிறுத்தப்பட்டார். எங்கள் சார்பில் மதுசூதனனை வேட்பாளராக நிறுத்தினோம். வாக்காளர்களுக்கு ஒரு வாக்குக்கு நான்கு ஆயிரம் வீதம் கொடுத்து, தேர்தலில் பல்வேறு முறைகேடுகளைச் செய்தது. அதன் தொடர்ச்சியாக வருமான வரித்துறை பல்வேறு சோதனைகளை நடத்தி, சுகாதாரத்துறை அமைச்சர் வீட்டிலும், அவரது உதவியாளர் வீட்டிலும் பல கோடி ரூபாயும், ஆவணங்களும் கைப்பற்றியது. இதை, வருமான வரித்துறையும் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. தேர்தல் சின்னம் தொடர்பாக நேற்று விசாரணை நடக்கயிருந்தநிலையில், அந்த விசாரணையைத் தங்களுக்கு சாதகமாகக் கொண்டுவருவதற்காக, பல முறைகேடுகள் நடத்தத் திட்டமிடப்பட்டது. தினகரன் தரகராக இருந்து பணம் கொடுத்து, அந்தத் தீர்ப்பை வாங்குவதற்குச் செய்த முயற்சிகளெல்லாம் மத்திய உளவுத்துறைமூலமாகக் கிடைக்கப்பெற்று, தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது" என்று கூறினார்.

படம்: வீ.சக்திஅருணகிரி