மீண்டும் ஐ,டி விசாரணை... விஜயபாஸ்கர் அமைச்சர் பதவி பறிப்பா?! | Will Minister Vijayabaskar be dismissed ? IT Enquiry Continues

வெளியிடப்பட்ட நேரம்: 15:38 (18/04/2017)

கடைசி தொடர்பு:15:38 (18/04/2017)

மீண்டும் ஐ,டி விசாரணை... விஜயபாஸ்கர் அமைச்சர் பதவி பறிப்பா?!

விஜயபாஸ்கர்

மிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விரைவில் பறிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும் என்று ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விஜயபாஸ்கரின் வீட்டில் கடந்த 7-ம் தேதி வருமான வரித்துறையினர் தீவிர சோதனை நடத்தினர். அப்போது, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்காக, 89 கோடி ரூபாய் பணம் யார் யாரிடம் வழங்கப்பட்டுள்ளது என்பதற்கான ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதற்காக, மூத்த அமைச்சர்களுக்கு எவ்வளவு பணம் வழங்கப்பட்டது என்பன குறித்த தகவல்கள் அந்த ஆவணங்களில் இடம்பெற்றிருந்தன. இதுதொடர்பாக, விஜயபாஸ்கரை நேரில் அழைத்து வருமான வரித்துறை அதிகாரிகள் ஏற்கெனவே விசாரணை நடத்தியுள்ளனர். இந்நிலையில், அவர் நேற்று இரண்டாவது முறையாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜரானார். அவரின் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், வருமான வரித்துறை அதிகாரிகள், விஜயபாஸ்கரிடம் 3 மணி நேரம் விசாரணை நடத்தியதாக வருமான வரித்துறை அதிகாரிகளை மேற்கோள்காட்டி செய்திகள் தெரிவிக்கின்றன.

விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்தச் சென்றபோது, வருமான வரித்துறை அதிகாரிகளிடம் அவரது உதவியாளர் நடந்து கொண்ட விதம் குறித்து போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது. அந்தப் புகாரின் அடிப்படையில், போலீஸார் வருமான வரித்துறை அலுவலகத்திற்குச் சென்று அதிகாரிகளிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அதன்படி விஜயபாஸ்கரின் உதவியாளர் விரைவில் கைது செய்யப்படுவார் என்று தெரிகிறது.

மேலும், விஜயபாஸ்கர் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், மருத்துவப் பல்கலைக்கழக துணை வேந்தர் கீதா லட்சுமியின் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். கீதா லட்சுமிக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. வருமான வரித்துறை அலுவலகத்தில் நேற்று இரண்டாவது முறையாக ஆஜரான கீதா லட்சுமியிடமும் அதிகாரிகள் சுமார் மூன்றரை மணி நேரம் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணையின்போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில், மேல் நடவடிக்கை எடுக்க வருமான வரித்துறை ஆயத்தமாகி வருவதாகக் கூறப்படுகிறது.

இதுஒருபுறமிருக்க, கடந்த சில தினங்களுக்கு முன் அ.தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வீட்டில் நடைபெற்ற ஆலோசனையின்போது, விஜயபாஸ்கரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று மூத்த அமைச்சர்கள் தெரிவித்ததாகவும், ஆனால், அதற்கு தினகரன் மறுப்பு தெரிவித்ததாகவும் செய்திகள் வெளியாகின.

விஜயபாஸ்கர்மத்தியில் ஆளும் பி.ஜே.பி தலைமையிலான அரசின் நெருக்கடியில் இருந்து தப்ப வேண்டுமானால், விஜயபாஸ்கரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியே தீரவேண்டும் என்பது மூத்த அமைச்சர்களின் கருத்தாக உள்ளது. இதனிடையே, அந்நியச் செலாவணி வழக்கு, இரட்டை இலை சின்னத்தை திரும்பப்பெற லஞ்சம் கொடுத்ததாகக் கூறப்படும் வழக்கில், தினகரனுக்கு எதிரான பிடி இறுகுவதன் மூலம், சசிகலா குடும்பத்தினரின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு செயல்படுவதாக அ.தி.மு.க-வின் சில நிர்வாகிகள் குறைகூறி உள்ளனர்.

இத்தகைய சூழலில், ஓ.பன்னீர் செல்வம் அணி, தங்கள் அணியுடன் இணைய விரும்பினால் வரவேற்போம் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். அவர், சென்னையில் நேற்று இரு முறை, முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துப் பேசியுள்ளார். தனது கரூர் தொகுதிக்குத் தேவையான திட்டங்கள் குறித்து முதல்வரைச் சந்தித்ததாக தம்பிதுரை தெரிவித்தாலும், அ.தி.மு.க-வில் அடுத்தடுத்த மாற்றங்களுக்கான முயற்சிகள் தீவிரமாக நடைபெறுவதாகவே பலரும் தெரிவித்துள்ளனர்.

விஜயபாஸ்கரை அமைச்சர் பதவியில் இருந்து விடுவித்தால் மட்டுமே எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசுக்கு நெருக்கடி இருக்காது என்பதே பெரும்பாலான அமைச்சர்களின் கருத்தாக உள்ளது. அமைச்சர் பி. தங்கமணி வீட்டில் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் கூடி ஆலோசனை நடத்தியுள்ளனர். அப்போது, விஜயபாஸ்கரை அமைச்சர் பதவியில் இருந்து விடுவித்து, அரசைக் காப்பாற்றலாம் என்ற ரீதியில் ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

எனவே, விஜயபாஸ்கரை அமைச்சரவையில் இருந்து விடுவிக்குமாறு, தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி விரைவில் பரிந்துரை செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜயபாஸ்கர் மீதான வழக்கை அவர் சட்டப்படி சந்திக்கட்டும்; அப்போதுதான் அ.தி.மு.க-வுக்கு எதிர்காலம் உண்டு என்று மூத்த அமைச்சர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருவதால், இந்த நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று கருதப்படுகிறது. விஜயபாஸ்கரை அமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்க தினகரன் முதலில் எதிர்ப்பு தெரிவித்தாலும், வேறு வழியில்லை என்பதால், தற்போது சம்மதம் தெரிவித்து விட்டதாகவே தெரிகிறது.

எனவே, விஜயபாஸ்கரின் அமைச்சர் பதவி பறிப்பு பற்றிய அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்!

-சி.வெங்கட சேது

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்