வெளியிடப்பட்ட நேரம்: 11:56 (19/04/2017)

கடைசி தொடர்பு:11:56 (19/04/2017)

“சசிகலா குடும்பத்துல ஒருத்தர் கட்சில இருந்தாலும் ஆபத்து!” - லதா திலகவதி கூட்டணி

பன்னீர்செல்வம் அணி

திமுக அம்மா', 'அதிமுக புரட்சித் தலைவி அம்மா' எனப் பிளவுபட்ட இரு அணிகளையும் ஒன்றாக இணைக்கும் முயற்சிகள் வேகமான உள்ளன. இந்நிலையில் 'சசிகலா குடும்பத்தாரை எதிர்த்து, தனித்து இயங்குவதால்தான் நாங்கள் ஓபிஎஸ் மற்றும் அவரது அணிக்கு ஆதரவு தெரிவித்தோம்' எனக் கூறிவந்த நடிகை லதா மற்றும் முன்னாள் காவல்துறை டிஜிபி திலகவதி ஆகியோரிடம் தற்போதைய அரசியல் நகர்வுகள் பற்றிய கருத்துகளைக் கேட்டோம். 

நடிகை லதா: 

ஓபிஏஸ் நிலைப்பாடு குறித்து நடிகை லதா கருத்து

"அதிமுகவில் பிளவுபட்ட இரு அணிகளையும் சேர்ப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஏற்பட்டிருப்பதை அறிந்தேன். இரண்டு அணிகளுமே ஒண்ணு சேர்ந்தா ரொம்பவே நல்லது. நானும் சந்தோஷப்படுவேன். எம்.ஜி.ஆர் இரவு பகலா உழைச்சு வளர்த்த கட்சி, ஜெயலலிதா காப்பாற்றிய கட்சி, அதிமுக. இந்தக் கட்சியின் ஒரே குடும்பமா இருந்தவங்க நடுவுல வந்த பிரிவு, எல்லோருக்கும் மனக்கசப்பை ஏற்படுத்துச்சு. நடுவுல உண்டான பிரிவு சீக்கிரமே சரியாகணும்னு நாங்க எல்லோரும் நினைச்சுகிட்டு இருந்தோம். அதுக்கான சூழல் வந்திருக்கு. ஓ.பன்னீர்செல்வம் இரு அணிகளும் இணைய விருப்பம் தெரிவிச்சு இருக்காரு. 'ஜெயலலிதா மரணத்துக்கு காரணமானவங்க எனச் சந்தேகப்படும் சசிகலா குடும்பத்தைச் சேர்ந்தவங்களோடுதானே சேரப்போகிறார்னு நினைக்க வேண்டாம். 'இணையப்போகும் ஒருமித்த அதிமுகவில் சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த ஒருத்தர்கூட இருக்கக் கூடாது. ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் இல்லம் நினைவு இல்லமா ஆகணும்' என்கிற பிரதான நிபந்தனைகளை பன்னீர்செல்வம் விதிச்சிருக்கார்னு கேள்விப்பட்டேன். அதனாலதான் இந்த இணைப்புக்கு நான் வரவேற்பு தெரிவிக்கிறேன். அவர் எடுக்கும் நல்ல முடிவுக்கு நாங்க எல்லோரும் கட்டுப்படுவோம். 

ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா குடும்பத்தார் எப்போதும் நீக்கப்பட்டவர்களாகவே இருக்கணும். அதிமுக தொண்டர்களும், அதிமுக சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் எல்லோருமே ஓபிஎஸ் அணிக்குத்தான் மனதளவில் ஆதரவாக இருக்கிறாங்க. சிலர் தவிர்க்க முடியாமல், சசிகலா அணிக்கு ஆதரவு தெரிவிச்சாங்க. பிரிஞ்சுப்போன எல்லோருமே கூடிய சீக்கிரம் சந்தோஷமான மனநிலையில் திரும்பி வருவாங்க. தொடர்ந்து நாலு வருஷம் அதிமுக ஆட்சி நடக்கும்னு நம்புறேன். 'ஒரு தாய் வயிற்றில் வந்த உடன்பிறப்பில் கொஞ்சம் பிரிவு வந்தால் பின்பு உறவு வரும்'னு 'உரிமைக்குரல்' படத்தில் எம்.ஜி.ஆர் பாடி நடிச்ச ஒரு பாட்டு உண்டு. அதன்படியே கூடிய சீக்கிரம் காட்சிகள் மாறணும்னு கடவுள்கிட்ட வேண்டிக்கிறேன். எல்லோருக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன். அப்படி நடந்துச்சுன்னா, முதல் வாழ்த்து என்னுடையதாகதான் இருக்கும்." 

முன்னாள் காவல்துறை டிஜிபி திலகவதி: 

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், ஓபிஎஸ் புது பன்னீர்செல்வமாக மாறியிருக்கார்னு நாங்க நம்புகிறோம். அதை அவர் நடவடிக்கை மூலம் கவனிச்சு இருக்கேன். அந்த நம்பிக்கைஓபிஎஸ் நிலைப்பாடு குறித்து திலகவதி கருத்து பொய்யாகாத வகையில், அவர் இனியும் செயல்படுவார். பிளவுபட்ட அதிமுக அணிகளை இணைக்கும் முயற்சியில் அவர் ஈடுபடுவார். மக்களுக்கு ஊழல் இல்லாத நல்லாட்சி நடக்கும் வகையிலும், புதுசா இணையும் ஒருமித்த அதிமுக கட்சிக்குள் சசிகலா குடும்பத்தார் எந்த வகையிலும் நுழையக்கூடாது என்பதே ஓபிஎஸ்ஸூன் வேண்டுகோளாக இருக்கும்னு கேள்விபட்டேன். இதுல, சசிகலா குடும்பத்தின் ஒருத்தரை உள்ளே விட்டாலும், ஒவ்வொருத்தரா நுழைஞ்சு கட்சியை நாசம் செஞ்சிடுவாங்க. அப்படி ஒரு சம்பவம் இனியும் நடக்கக் கூடாது. இந்த விஷயங்கள் ஓபிஎஸ்ஸூக்கு நல்லாவே தெரியும். அதை நாங்களும் அவருக்கு நினைவுபடுத்துவோம். 

சசிகலா, தினகரனிடம் இருந்து எல்லா அதிமுக எம்.எல்.ஏக்களும், எம்.பிக்களும் விடுபட்டு ஓபிஎஸ் தலைமையிலான அணிக்கு வருவாங்கன்னு நம்புறேன். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் தங்கள் மீதான கரைகளை துடைக்க வெளியே வந்து ஒருமித்த அதிமுக கட்சியின் மூலம் மக்களுக்கு நல்லது செய்வாங்க. அதுக்கான முன்னெடுப்புகள் வேகமா நடந்துகிட்டே இருக்கு. தமிழக மக்களுக்கு தொடர்ந்து அதிமுக அரசு சேவை செய்யும். இரு அணிகளும் இணைந்தால், அதன் பிறகு முதல் வேலையா, ஜெயலலிதா மரணத்துக்கு காரணமானவங்களுக்கு தண்டனை கிடைக்கும்னு நம்பறேன்.'' 

- கு.ஆனந்தராஜ்


டிரெண்டிங் @ விகடன்