தமிழக அரசு கேபிள் டி.வி-க்கு டிஜிட்டல் உரிமம்! | Tamilnadu govement cable got digital rights

வெளியிடப்பட்ட நேரம்: 18:43 (18/04/2017)

கடைசி தொடர்பு:19:14 (18/04/2017)

தமிழக அரசு கேபிள் டி.வி-க்கு டிஜிட்டல் உரிமம்!

தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனத்துக்கு, மத்திய அரசு டிஜிட்டல் உரிமம் வழங்கியுள்ளது. இதற்கான ஆணையை மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் நேற்று வெளியிட்டது. 

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'அரசு கேபிள் டிவி நிறுவனம், கடந்த 2007-ம் ஆண்டு துவக்கப்பட்டது. குறைந்த கட்டணத்தில் சிறப்பான கேபிள் டி.வி சேவையைப் பொதுமக்களுக்கு வழங்குவதே இதன் நோக்கம் ஆகும். இதற்கென, தஞ்சாவூர், திருநெல்வேலி, கோயம்புத்தூர் மற்றும் வேலூர் ஆகிய நான்கு இடங்களில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டன. பல்வேறு காரணங்களால் இந்த நிறுவனம் செயலிழந்திருந்தது.

TN Govement Cable


மறைந்த முதல்வர் ஜெயலலிதா, கடந்த 2011-ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர், அரசு கேபிள் டிவி நிறுவனத்தைப் புனரமைத்துப் புத்துயிரூட்டி, 'தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம்' என்று பெயர் மாற்றம் செய்தார். தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், 90-100 சேனல்களை உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் வாயிலாக பொதுமக்களுக்கு வழங்கிவருகிறது.  


குறிப்பாக, கடந்த 2011-ம் ஆண்டு, 4.94 லட்சங்கள் என இருந்த இந்த நிறுவனத்தின் சந்தாதாரர்களின் எண்ணிக்கை, தற்போது, 70.52  லட்சமாக உயர்ந்துள்ளது. அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்கு, மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம், சென்னை மாநகரப் பகுதிகளுக்கு மட்டும் முறையான பன்முக கேபிள் ஆபரேட்டர் உரிமத்தை வழங்கியது. கேபிள் டிவி நெட்வொர்க் திருத்தச் சட்டம் 2011-ன்படி, முதல் கட்டமாக சென்னை உள்ளிட்ட இந்தியாவிலுள்ள நான்கு பெருநகரங்களை 31.10.2012-க்குள் டிஜிட்டல் மயமாக்கிட வேண்டும் என்றும், நாடு முழுவதும் 31.12.2016-க்குள் டிஜிட்டல் மயமாக்கிட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் டிஜிட்டல் மயமாக்கலுக்குத் தேவையான, சென்னை பகுதிகளுக்கான உரிமம் வழங்கக் கோரி, கடந்த 2012-ம் ஆண்டு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்திடம் விண்ணப்பித்திருந்தது. இதுகுறித்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம், இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அமைப்பின் கவனத்துக்குக் கொண்டுசென்றது. இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரைகுறித்து முடிவெடுப்பதற்காக, அமைச்சகங்களின் கூட்டுக்குழுவை, கடந்த 2013-ம் ஆண்டு மத்திய அரசு அமைத்தது. 

Modi Edapadi Palanisamy


கடந்த 2014-ம் ஆண்டு, ஜெயலலிதா பிரதமரை நேரில் சந்தித்து அளித்த கோரிக்கை மனுவில்,   தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்கு, உரிமம் வழங்க வலியுறுத்தினார். மேலும்,  தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடந்த பிப்ரவரி மாதம், பிரதமர் மோடி மற்றும் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர்  வெங்கைய நாயுடுவைச் சந்தித்து,  உரிமம் வழங்குவது குறித்து  வலியுறுத்தினார்.     


இந்த நிலையில், தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்கு உரிமம் வழங்கி ஆணையிட்டுள்ளது. இந்தியாவிலேயே மாநில அரசின் நிறுவனத்துக்கு உரிமம் வழங்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும். 


வெகு விரைவில், தமிழக மக்கள் குறைந்த விலையில் உலகத் தரம் வாய்ந்த டிஜிட்டல் கேபிள் டிவி சேவையை இதன்மூலம்  பெறுவார்கள். இதையடுத்து, பிரதமர் மோடி மற்றும் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் வெங்கைய நாயுடுவுக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்."