வெயில் பாதிப்பிலிருந்து மாணவர்களைக் காக்கும் அரசுப் பள்ளியின் 'வாவ்' முயற்சி! | This Government school provide Fruits for students

வெளியிடப்பட்ட நேரம்: 09:35 (19/04/2017)

கடைசி தொடர்பு:10:21 (19/04/2017)

வெயில் பாதிப்பிலிருந்து மாணவர்களைக் காக்கும் அரசுப் பள்ளியின் 'வாவ்' முயற்சி!

அரசுப் பள்ளி

கோடை வெயிலின் தாக்கத்தை, பெரியவர்களாலேயே தாங்கிக்கொள்ள முடியவில்லை. பள்ளிக்குச் செல்லும் மாணவர்களுக்கு இன்னும் சிரமம்தான். உற்சாகமாக விளையாடும்போது அதிக எனர்ஜியை இழக்கவும் செய்வார்கள். அவர்களின் உடல்சூடு அதிகமாவதையும் தவிர்க்க முடியாது. மாணவர்களின் கல்வியில் மட்டுமல்ல உடல்நிலையிலும் அக்கறைக் காட்டுகிறது நல்லம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி.  காஞ்சிபுரம் மாவட்டம், வண்டலூர் அருகே உள்ளது நல்லம்பாக்கம் அரசுப் பள்ளி.

"எங்கள் பள்ளிக்கு நிழலையும் குளிர்ந்த சூழலையும் தந்துகொண்டிருந்த ஏழு மரங்கள் சில மாதங்களுக்கு முன் வீசிய வர்தா புயலில் விழுந்துவிட்டன. அதனால் இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. அதனால் மாணவர்களில் பலர் சோர்ந்துவிடுவதைப் பார்த்தேன். தர்பூசணி மேலும், இந்தப் பகுதியில் பலருக்கும் 'அம்மை நோய்’ வருவதாக கேள்விப்பட்டேன். அதனால் மாணவர்களை வெயிலின் பாதிப்பிலிருந்து காப்பாற்ற, தினந்தோறும் பழங்கள் கொடுக்கலாம் என்று முடிவெடுத்தேன். இந்த யோசனையை ஆசிரியர்களோடு கலந்து ஆலோசித்தபோது, ஓரிரு வகுப்புகளுக்கு என்றில்லாமல் பள்ளியில் படிக்கும் 200 மாணவர்களுக்கும் பழங்கள் கொடுக்கலாம் என்றனர்.

அதன்படி, நேற்று முன்தினம் (ஏப்ரல் 17) அனைத்து மாணவர்களுக்கு தர்பூசணி பழக்கீற்றுகளை வாங்கித்தர முடிவுசெய்தோம். அதற்காக தர்பூசணி வியாபாரம் செய்பவரை அழைத்தோம். அவர், ஒவ்வொரு மாணவருக்கும் தர்பூசணிக் கீற்றை அழகாக நறுக்கிக் கொடுத்தார். மாணவர்களும் ஆசிரியர்மகிழ்ச்சியோடு சாப்பிட்டனர். எங்கள் பள்ளி வளாகத்திலேயே அங்கன்வாடி மையம் இருக்கிறது. அங்கு படிக்கும் 20 மாணவர்களுக்கும் தர்பூசணிக் கீற்றுகளைக் கொடுத்தோம். சுவையான தர்பூசணியைக் கொடுத்தவரிடம் விலையைக் கொஞ்சம் குறைத்துகொள்ளுங்கள் என்று கேட்க நினைத்தோம். ஆனால், அவரோ, பணமே வேண்டாம் என்றுக்கூறி ஆச்சர்யத்தை அளித்தார். 'பசங்களுக்குனு நீங்க நல்ல விஷயம் செய்யறீங்க. அதற்கு என்னோட பங்களிப்பாக இன்னைக்கு கொடுத்த தர்பூசணி இருக்கட்டுமே' என்றார். எவ்வளவு வற்புறுத்தியும் அவர் பணம் பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். அவரின் மகன் எங்கள் பள்ளியில்தான் படிக்கிறான்.

இந்தச் செய்தி தெரிந்த பலரும் தாங்களும் இதற்கு உதவுதாக கூறி வருகின்றனர். ஒருவர், இளநீர் வாங்கித்தருவாக கூறியிருக்கிறார். கனடாவில் வசிக்கும் ஒருவர் பள்ளியின் இறுதி நாளன்று அனைத்து மாணவர்களுக்கும் பிரியாணியும் அவர்களுக்கு ரொம்ப பிடித்த ஐஸ்கிரீமோடு விருந்தளிப்பதாகக் கூறினார். ஆனால், தன் பெயரை எங்கும் சொல்லக்கூடாது என்று கண்டிப்புடன் கூறினார். நேற்று, அனைத்து மாணவர்களுக்கும் திராட்சை பழங்கள் வாங்கிதந்தோம். இதற்கு ஆசிரியர்களின் ஒத்துழைப்பைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்" என்று மகிழ்ச்சியின் பூரிப்போடு பகிர்ந்துகொண்டார் பள்ளியின் தலைமை ஆசிரியர் சந்தோஷ் ராஜ்குமார்.

அரசுப் பள்ளி

பள்ளியின் வராண்டாவில் ஒன்று முதல் எட்டு வகுப்புகள் வரையிலான மாணவர்கள் அமர்ந்து சாப்பிடும் காட்சியே பேரழகாக இருக்கிறது. மாணவர்களுக்கு உதவுவதற்கான வெளியிருந்து மட்டுமல்ல, பள்ளிக்குள் இருந்தும் ஒருவர் முன் வந்திருக்கிறார். அதுவும் அங்கு படிக்கும் மாணவர்.

" ஆமாம். அந்தப் பையன் பேர் ரஞ்சித். ஆறாம் வகுப்பு படிக்கிறான். தன் வீட்டிலிருந்து தயிரும் மோரும் எடுத்து வருகிறேன். அதை எல்லோருக்கும் கொடுக்கலாம் என்றான். அவன் அப்படிச் சொன்னது நெகிழ்வான தருணம். ஒரு நல்ல விஷயம், மற்றவர்களையும் அதில் ஈடுபடச் செய்யும் என்பது உண்மை என்பது இது ஓர் எடுத்துக்காடு. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உதவும் எண்ணம் பலருக்கும் இருக்கிறது. அவர்கள் தாங்களாகவே முன்வருவது உதவுவது மகிழ்ச்சியான விஷயம்." என்கிறார் அந்தப் பள்ளியின் ஆசிரியை நா.கிருஷ்ணவேணி.

அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நல்லதொரு அன்பு பரிமாற்றம் நிகழ்வது ஆரோக்கியமான தலைமுறைக்கு வித்திடுவதாக அமையும். இதுபோன்ற அரசுப் பள்ளிகளை வாழ்த்துவதும் உதவுவதும் அவசியம்.

- வி.எஸ்.சரவணன்.


டிரெண்டிங் @ விகடன்