Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜெமினி சர்க்கஸ்... பாம்பே சர்க்கஸ்... எங்கே போச்சு எல்லாம்? #Nostalgic

வ்வளவு நாள் எங்கே இருப்பார்களோ... என்ன செய்வார்களோ தெரியாது. ஆனால் சரியாக கோடையில் மேடை போடத் தொடங்கிவிடுவார்கள் சர்க்கஸ்காரர்கள். முதலில் தளவாடங்கள் வந்து இறங்கும். பின்னே யானைகள் வந்து இறங்கும். 'ஐஐஐ... சர்க்கஸ் போடப் போறாங்க’ என மனம் குதூகலிக்கும். அந்தக் கோமாளிகளை நினைத்தாலே சிரிப்பு பீறிடும். ஆனால், சர்க்கஸைப் பார்ப்பதைக் கூட கேவலமாக நினைக்கும் நாகரீக காலம் இது. அதற்கேற்ப, சர்க்கஸ் கூடாரங்களும் அருகிக் கொண்டிருக்கின்றன. செல்போனும் கையுமாக உலவுவர்களுக்கு மத்தியில் அந்த கலை உயிர்ப்புடன் இருப்பதே அரிதான விஷயமே!

சர்க்கஸ்

இந்தியாவைப் பொறுத்த வரை தலசேரி நகரம்தான் சர்க்கஸின் தாய்வீடு. 1888ம் ஆண்டில் இருந்து தலசேரியில் சர்க்கஸ் கலை வளரத் தொடங்கியது. இந்திய சர்கஸின்  தந்தை என்று கருதப்படும் கீழ்சேரி குன்னிகண்ணன் பிறந்த மண் அது. அவர்தான் முதன்முதலில் சர்க்கஸ் கலைஞர்களுக்கு தனியாக பயிற்சி மையம் தொடங்கியவர். 'சர்க்கஸ் ட்ரெயினிங் ஹால்' என்பது அதன் பெயர். களரி முதல் குஸ்தி வரை அங்கு கற்றுக்கொடுக்கப்பட்டது. இந்த அகாடமி உருவாக்கிய சர்க்கஸ் நிறுவனங்கள்தான் கிரேட் லயன் சர்க்கஸ், ஈஸ்டர்ன் சர்க்கஸ், ஜெமினி சர்க்கஸ், பாம்பே சர்க்கஸ். சினிமா தவிர பொழுது போக்குகள் இல்லாத காலக்கட்டத்தில் சர்க்கஸ் நிறுவனங்களும் லாபகரமாகவே இயங்கி வந்தன. காலப்போக்கில் மக்கள் மனமாற்றம் சர்க்கஸ் கலையை அழிவை நோக்கிப் போகவைத்தது. ஏராளமான சர்க்கஸ் நிறுவனங்கள் காணாமலேயே போய் விட்டன. ஜெமினி, பாம்பே சர்க்கஸ் போன்ற ஒரு சில நிறுவனங்களே எதிர்நீச்சல் போட்டுக் கொண்டிருக்கின்றன. 

பல சர்க்கஸ் அகாடமிகள் தலசேரியில் செயல்பட்டு வந்தன. நாமெல்லாம் படிப்பைத் தேடி நகரங்களுக்கு இடம்பெயர்வது போல, சர்க்கஸ் மீது காதல் கொண்டவர்கள் இந்த அகாடமிகளில் வந்து சேர்ந்தார்கள். சர்க்கஸ் கலை அழிவை நோக்கி செல்லத் தொடங்க இந்த அகாடமிகளும் ஒவ்வொன்றாக மூடப்பட்டு வந்தன. கடைசியாக மூச்சை  நிறுத்தியது கேரள சர்க்கஸ் அகாடமி.

சர்க்கஸ் கலையைக் காப்பாற்ற கேரள அரசு இந்த அகாடமியைத் தோற்றுவித்தது. கடந்த 2010ம் ஆண்டு 10 பயிற்சியாளர்களுடன் இந்த அகாடமி தொடங்கப்பட்டது. காலை, மாலை இரு வேளைகளில் குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்கப்படும். சர்க்கசுக்குத் தேவையான சாதாரண பயிற்சியில் இருந்து, Vaulting table, Beam, Parallel bars, Uneven bars, High bars, Rings and Pommel horse என ஒவ்வொரு பிரிவிலும் தனித்தனியாக பயிற்சி அளிக்கப்பட்டது. 

circus

இதுதவிர, டென்ட் அடிப்பது, உணவு தயாரிப்பது, இசைப்பயிற்சி, உடைகள் தைப்பது என சர்க்கசுக்குத் தேவையான அத்தனை பயிற்சிகளும் வழங்கப்பட்டன. இடைப்பட்ட நேரத்தில் பள்ளிக்கு சென்றும் படிக்க வேண்டும். கடந்த 6 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த, கேரளா சர்க்கஸ் அகாடமி அழிந்து வரும் சர்க்கஸ் கலை போலவே மிக விரைவாகவே இழுத்துமூடப்பட்டது. கடந்த மார்ச் மாதத்தில் சரியான வரவேற்பு இல்லாத நிலையில் அகாடமிக்கு பூட்டு போட்டது கேரள அரசு.  சர்க்கசின்போது, காயம்பட்டு நடக்க முடியாமல், நிற்க முடியாமல் படுத்த படுக்கையாக கிடப்பவர்களும் தலசேரியில் அதிகமாக இருக்கிறார்கள். மனதளவிலும் உடலளவிலும் காயம்பட்டு கிடக்கும் அவர்களது  நல்வாழ்வுக்கான கேரள அரசு நேற்றுதான் 1.13 கோடி ஒதுக்கியுள்ளது. இதனைக் கொண்டு அவர்களுக்கு பென்ஷன் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

சர்க்கஸ் நிறுவனம் நடத்துவது என்பது யானையைக் கட்டித் தீனி போடும் விஷயம். பல நகரங்களுக்கு பயணித்துக் கொண்டே இருக்க வேண்டும். அந்த பிரமாண்ட கூடாரத்துடன் அரங்கை தீர்மானிப்பதே இன்ஜீனியரிங் சமாச்சாரம்தான். சற்று வேகமாக காற்றடித்தாலோ... கன மழை பெய்தாலோ கூடாரம் ஒரு பக்கம் கிழிந்து விடும்.  ‛சே... எவ்வளவு கஷ்டப்பட்டு கூடாரம் அமைச்சாங்க இப்படி ஆயிடுச்சே’ என மனம் வேதனையுறும்.

CIRCUS

யானைகள், புலிகள், சிங்கங்கள், அழகு நிறைந்த பறவைகள், பேசும் கிளிகள், சைக்கிள் ஓட்டும் குரங்குகள், வித்தை காட்டும் பப்பிகள் எல்லாவற்றையும் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு வருவதும் சவால் நிறைந்தது. போக்குவரத்துக்கே மிகப் பெரிய தொகை செலவாகும். தற்போது, மிருக வதைச் சட்டம் காரணமாக சர்க்கஸ்களில் விலங்குகள் பயன்படுத்தப்படுவதில்லை விலங்குகள்தான் சர்க்கஸின் கூடுதல் அட்ராக்ஷன். அதனையும் சர்க்கஸ் நிறுவனங்கள் இழந்து விட்டன.

கடந்த இரு வருடங்களுக்கு முன், மைசூரில் சர்க்கஸ் நடத்திய கம்பெனி ஒன்று, 5 யானைகளை அநாதையாக தவிக்க விட்டு ஓடிப்போன கதையும் நிகழ்ந்துள்ளது. அமெரிக்காவில் 146 ஆண்டு காலம் இயங்கி வந்த புகழ்பெற்ற ரிங்லிங் பிரதர்ஸ் நிறுவனம் வருகிற மே மாதத்துடன் மூடப்படுகிறது. கடந்த 1871ம் ஆண்டு தொடங்கப்பட்ட சர்க்கஸ் கம்பெனி இது. பீட்டாவுக்கு எதிராக 36 ஆண்டு காலம் போராடி முடியாமல் நிறுவனத்தை மூடும் முடிவுக்கு வந்துவிட்டது.

எத்தனை எத்தனை கலைஞர்கள்... எத்தனை எத்தனை வித்தைகள், வண்ண வண்ண உடைகள், சிரிக்க வைக்கும் கோமாளிகள், இசைக் கலைஞர்கள், தீபா கம்ராகரை நினைவுபடுத்தும் பெண் கலைஞர்கள், விலங்குகளுக்கு உணவு, பயிற்சியாளர்கள், துணைக் கலைஞர்கள், இதர ஊழியர்கள் தவிர மின்சார செலவு,  மாநகராட்சி வாடகைக் கட்டணம், சாப்பாடு செலவு, விளம்பர செலவு, சம்பளம் போக கூட்டிக் கழித்துப் பார்த்தால் மிஞ்சுவது மிக சொற்பமே!

சினிமா மால்கள் பெருகிய காலம் இது. கையில் வைத்திருக்கும் செல்போன்களே நமக்கு பொழுதுபோக்காகி விட்டது . இப்போதும்... அந்த கிழிந்த கூடாரங்கள் எங்காவது தென்பட்டால் அது வாழ்வியலுக்கான போராட்டம் என்பதை தவிர வேறு என்னவாக இருக்க முடியும்? 

-எம்.குமரேசன்
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close