'நீட்' தேர்வு- தீர்மானிக்கும் கார்ப்பரேட் வணிகம்! | 'NEET' Exams are decided by corporate business

வெளியிடப்பட்ட நேரம்: 10:12 (19/04/2017)

கடைசி தொடர்பு:10:12 (19/04/2017)

'நீட்' தேர்வு- தீர்மானிக்கும் கார்ப்பரேட் வணிகம்!

நீட்தேர்வு

ரு பெரிய விஞ்ஞானியின், ஆராய்ச்சிக்கூடத்திற்கு விருந்தாளியாக ஒரு பூனை வந்து, வந்து போகும். அதற்காக  ஒரு பெரிய துவாரத்தை அந்த விஞ்ஞானி அமைத்திருந்தார். ஒருநாள் அதன் அருகிலேயே இன்னொரு சின்ன துவாரம் ஒன்றை அவர் அமைத்தார். 'சின்ன துவாரம் எதுக்குங்க?' என்று அவரின் இணையர் கேட்க, 'நம் ஆராய்ச்சிக்கூடத்திற்கு வரும் பூனை, குட்டி போட்டிருக்கு. அது வந்து போறதுக்குத்தான் இந்த சின்ன துவாரம்' என்றார். 'ஏங்க ஒரே துவாரம் வழியாகவே பூனைக்குட்டியும் வந்துட முடியும். அப்புறம் எதுக்குங்க புதிதாக ஒரு துவாரம்?' என்று தலையில் அடித்துக்கொண்டார் அவரின் இணையர். உலகப் புகழ்பெற்ற இந்தக் கதை, யாருக்குப் பொருந்துகிறதோ, இல்லையோ, தற்போது மத்தியில் ஆளும் பி.ஜே.பி-க்கு அப்படியே பொருந்தும். 

"நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்வதற்காக, தேசிய அளவில் நடத்தப்படும் தகுதித் தேர்வு 'நீட்' என்பதாகும். 'ஒரு மாணவர் அதுவரை பயின்ற கல்வியில், என்ன கற்றுக்கொண்டார் என்பது அவரின் ப்ளஸ்-டூ மதிப்பெண் மூலமே தெரிந்துவிடும். உயர் கல்விக்குப் போக, இந்தத் தேர்வே தகுதித் தேர்வாக இருக்கும்போது, கூடுதலாக எதற்கு 'நீட்' தேர்வு?" என்கின்றனர் தமிழ்நாட்டின் பிரபல கல்வியாளர்கள். நீட் தேர்வில் இருந்து, தமிழத்திற்கு விலக்களிக்க வலியுறுத்தி, சட்ட மசோதா ஒன்றை, சட்டமன்றத்தில் நிறைவேற்றியது தமிழ்நாடு அரசு. என்றாலும், வரும் மே 7-ம் தேதி நீட் தகுதித் தேர்வை நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளில் மத்திய அரசு துரிதமாக ஈடுபட்டு வருகிறது. இந்த நடவடிக்கை, மாணவர்களுக்கு எதிரானது மட்டுமல்ல; இந்திய கூட்டாட்சித் தத்துவத்திற்கும் எதிரானது' என குற்றம் சாட்டுகிறது கல்வி உரிமைப் பாதுகாப்புக்கு கூட்டமைப்பு. தொடர்ந்து, 'நீட்' தேர்வு நடத்தப்படுவதன் பின்னணியில் சர்வதேச சந்தைக்கான சுரண்டல் அரசியல் உள்ளது. 'நீட்'-ஐ எக்காரணம் கொண்டும் அனுமதிக்க மாட்டோம்' என்கிறார் கல்வி பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு. 

'நீட்' தேர்வுக்கு எதிராக அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து , ஒய்வு பெற்ற நீதிபதி ஹரி பரந்தாமன் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டிருந்த அவரிடம் பேசினோம்.

கொள்ளையடிக்கும் பயிற்சி நிலையங்கள்:

"சமூகநீதி அடிப்படையில் அனைத்துப் பிரிவு மக்களும் உயர்கல்வி பெரும் வாய்ப்பை இந்தியாவின் பிற எந்த மாநிலத்தையும்விட தமிழ்நாடு அரசு ஏற்படுத்தித் தந்துள்ளது. அப்படியிருக்க எதற்காக வேண்டும் நீட்?. முறையான பள்ளிக் கல்வியை மாற்றி, பயிற்சி நிலைய கல்வி வணிகத்தை உருவாக்கும் மோசடி இதன் பின்னணியில் உள்ளது. நுழைவுத் தேர்வு என்றாலே கூடவே பயிற்சி நிலையங்களும் உருவாகின்றன. 'மிகச் சிறந்த மருத்துவக் கல்லூரியில் சேர வேண்டுமா? நீட் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற வேண்டுமா? அதற்கு நாங்க கேரண்டி. இன்றே எங்கள் பயிற்சி நிலையத்தில் சேருங்கள்' எனும் விளம்பரங்களுடன் பயிற்சி நிலையங்கள் பரவலாக தங்கள் கடைகளைத் திறந்துள்ளன.

பிள்ளைகளுக்கு நல்ல மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இத்தகைய பயிற்சி நிலையங்களில் அடைக்கலமாகிறார்கள் பெற்றோர். இந்த எதிர்பார்ப்பை ஒட்டி, பெற்றோர்களிடம் எவ்வளவு பணம் கறக்க முடியுமோ, அவ்வளவு பணத்தை கறந்துவிடுகின்றன பயிற்சி நிலையங்கள்.

மாணவர்களுக்கோ தேர்வு என்றாலே பயம். ப்ளஸ்-டூ பொதுத்தேர்வை முடித்து நிம்மதிப் பெருமூச்சு விடுவதற்குள், மீண்டும் நுழைவுத் தேர்வு என்றதும், அவர்களின் பயம் மேலும் அதிகரிக்கும். 'படி, படி' எனும் பெற்றோர்களின் கண்டிப்பால் தோல்வி பயம் ஏற்பட்டு, தீராத மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி, அரசு நிதியுதவி பெறும் பள்ளி, மெட்ரிக் மற்றும் ஆங்கிலோ இந்தியன் பள்ளி என நான்கு வகைகள் உள்ளன. இவற்றில் 90 சதவிகிதம் மாணவர்கள், தமிழ் வழியில் பயில்பவர்களே. ஆனால் 'நீட்' தேர்வானது, அகில இந்திய அளவில் நடத்தப்படும் தேர்வு என்பதால், சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின் கீழ் வரும் பாடங்களில் இருந்து அந்தத் தேர்வில் வினாக்கள் கேட்கப்படும். இதனால், மாணவர்களால் நீட் தேர்வில் போதிய மதிப்பெண்கள் எடுப்பது சிரமமாகும். மற்றொருபுறம் நகரத்தில் உள்ள பயிற்சி நிலைய வசதிகள் கிராமப்புறங்களில் கிடைப்பது இல்லை.

நகரப்புற மாணவர்களுடன் கிராமப்புற மாணவர்கள் போட்டி போட்டு நுழைவுத்தேர்வில் வெல்வது என்பது மலையை கடக்கும் சுமை. இது மேலும் நகரம்-கிராமம் என்றும், வசதியான மாணவர்-வசதியற்ற மாணவர் என்று இரண்டு எதிர் எதிர் அடுக்காக பிரித்து, ஏற்றத்தாழ்வு உருவாக வழிவகுக்கும். ஆனால், ஒரு கல்வி என்பது சமத்துவத்தை உருவாக்குவதே அடிப்படையாக இருக்க வேண்டும். ஆனால் மேட்டுக்குடிகளும், மத்திய அரசும் தகுதி தேர்வின் மூலமே மருத்துவக் கல்வியின் தரம் உயரும்; நீட் தேர்வினால்தான் சரியான மருத்துவக் கல்வியை மாணவர்கள் நுகர முடியும் என வாதிடுகின்றனர்.

அது தவறு' எனும்போது 'இதற்கு நான் விளக்கமளிக்கிறேன்' என்று நமது உரையாடலுக்குள் நுழைந்தார் ஒய்வு பெற்ற நீதிபதி ஹரி பரந்தாமன்.

சட்ட விளக்கம்

'இந்திய அரசியலமைப்புச் சட்டம் 7-வது அட்டவணையின் அதிகார பகிர்வு லிஸ்ட் ஒன்று மத்திய பட்டியலாகும். இது நாடாளுமன்றத்தில் சட்டமியற்றப்படுவதாகும். இரண்டாவது லிஸ்ட்- மாநில பட்டியல். இது சட்டமன்றத்தில் சட்டம் இயற்றுவதாகும், மூன்றாவது லிஸ்ட் பொதுப் பட்டியலாகும். நாடாளுமன்றம், சட்டமன்றம் என இரண்டிலும் சட்டம் இயற்றலாம். ஒரே சட்டத்தை மத்திய அரசும், மாநில அரசும் இயற்றினால், சம்பந்தப்பட்ட மாநில அரசு, குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு, அந்த மசோதாவை அனுப்ப வேண்டும். பொதுப்பட்டியலில் இயற்றப்படும் மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிப்பது பொதுவான மரபு. ஒப்புதல் கிடைத்தால் அது அந்த மாநிலத்திற்கு மட்டும் பொருந்தும். இப்படித்தான் சமீபத்தில் தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கும் வகையிலான சட்டம் இயற்றப்பட்டது.

2006-சட்ட மசோதா: 

முன்பு தமிழ்நாட்டில் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் சேர சி.இ .டி (C.E.T) எனும் நுழைவுத் தேர்வு முறை இருந்தது. 2006-ல் இந்த தகுதித் தேர்வு முறையை நீக்க வேண்டும் என்ற கருத்து வளர்ந்தது. வல்லுநர்கள் குழு கொண்டு ஆராய்ந்து, அதன் பரிந்துரையில் அப்போதைய தமிழ்நாடு அரசு, நுழைவுத் தேர்வை நீக்கி சட்டமியற்றியது. இதையொட்டி சென்னை உயர் நீதிமன்றம், 'இது சமூக நீதியின்பாற்பட்டது. இது தரத்தைக் குறைக்கவில்லை' என்று நுழைவுத் தேர்வு நீக்க மசோதாவை ஏற்றுக்கொண்டு தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. இதன் தொடர்ச்சியாகவே தற்போது 2017-ல் சட்டமன்றத்தில் 'நீட்' தேர்வுக்கு விலக்களிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு, ஒரு சட்ட மசோதாவை  நிறைவேற்றியது. 'நீட்' பாடத்திட்டத்திற்கும், மாநில பாடத் திட்டத்திற்கும் வேறுபாடு உள்ளதால் விலக்களிக்க வேண்டும்' என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் சட்ட மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது' என்றார் விரிவாக.

'இந்த மசோதாவுக்கு தான் இதுவரை எந்தவித பதிலுமில்லை. இது மாநில உரிமைகளை மீறும் செயலாகும்.' என தொடர்கிறார் பிரின்ஸ் கஜேந்திர பாபு.

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக பி.ஜே.பி :

நீட்தேர்வு

"ஒப்புதல், மறுத்தால் காரணம் சொல்ல வேண்டும்; பின் நீதிமன்றம் செல்லலாம். எனவே, மத்திய அரசு மவுனம் காத்து வருகிறது. பதில் சொல்லாமல் தள்ளிப் போடுகிறது. இதன்மூலம் மக்களிடமிருந்து இப்பிரச்னையை நீர்த்துப்போகச் செய்து, நீட் தேர்வை மக்கள் ஏற்றுக்கொள்ளும்படி நிர்பந்திக்கிறது. சட்ட மசோதாவை ஏற்க வேண்டும் என்று நீதிமன்ற தீர்ப்பு இருந்தும் அதை ஏற்காமல், நீட் தேர்வை நடத்த முயற்சிப்பது, தமிழகத்தின் கோரிக்கைக்கு எதிரான மத்திய அரசின் போக்கையே வெளிப்படுத்துகிறது. 

நடைமுறைச் சிக்கல்:

இதைத் கடந்து ஒருவேளை நம் மாணவர்கள் நீட் தேர்வு எழுத வேண்டுமானால், தமிழ்நாட்டில் மொத்தம் எட்டு தேர்வு மையங்கள்தான் உள்ளன. இது போதுமானதல்ல. தேர்வு எழுதச் செல்லும் ஒரு மாணவர், நகர்ப்புறத்தில் உள்ள மையத்திற்குச் செல்ல வேண்டுமென்றால் போக்குவரத்துச் செலவு, தங்கும் செலவு, உணவு என அதிக தொகையை செலவிட நேரிடும். அந்த செலவுகளுக்கு எல்லாம் யார் பொறுப்பேற்பது? அத்தனைச் செலவுகளையும் ஓர் ஏழை மாணவரால் எப்படி சமாளிக்க இயலும்?

பின்னணியில் உலக வர்த்தகம்:

நீட் தேர்வின் பின்னணியில் உலக வர்த்தக அமைப்பின் (W.T.O) அரசியல் உள்ளது. பல நாட்டு வர்த்தகர்கள் பங்கேற்கும் அமைப்பு இது. இங்கு ஒவ்வொரு நாட்டிலும், அந்த அரசு சார்பில், வர்த்தகங்களை கண்காணிக்கும் மந்திரியும் பங்கேற்பார். இதில் 1995-ல் இருந்து கல்வியில் சந்தை வாய்ப்புகளை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அங்கு வெளிப்பட்டு வருகின்றன. டபிள்யூ.டி ஓ-வில், பங்கேற்ற வாஜ்பாய் தலைமையிலான பி.ஜே.பி அரசு, 'வர்த்தகங்களில் சேவை துறைகளை திறந்துவிடுவதற்கு விருப்பம் தெரிவித்தது. 
அதற்கு, இந்தியாவில் ஒரேவித கல்வி, தேர்வு முறை இருக்க வேண்டும். அவர்களின் வணிகச் சந்தையில் ஆடுகளம் சமமாக இருக்க வேண்டும். மாநிலத்துக்கு ஒருகல்வி முறை இருந்தால், வெளிநாட்டு வர்த்தகர்கள் இங்கு கல்வி வணிகம் செய்ய இயலாது எனக் கருதி, அவர்களுக்காகவே தற்போது நீட் தேர்வு முறை கொண்டு வரப்படுகிறது. இது,1986-ம் ஆண்டிலிருந்து கல்வியில் தனியார்மயம் அனுமதிக்கப்பட்ட அபாயத்தின் தொடர்ச்சியாகும். நீட் மற்றும் எக்சிட் போன்ற தேர்வுகள் இந்திய உயர் கல்வியை உலக வர்த்தக அமைப்புக்கு அடகு வைத்து, இந்திய கல்வியை கார்ப்பரேட் மயமாக்கக் கூடியதாகும். இதுபோன்ற கார்ப்பரேட் வணிகத்திற்காகவே நீட் தேர்வு திணிக்கப்படுகிறது.

தொடங்கட்டும் இளைஞர் எழுச்சி:

எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வில் பங்கேற்று, அதில் மருத்துவக்கல்வி பயில்பவர்களில் 50 சதவிகிதம் பேர்  படித்து முடித்தபின், வெளிநாடுகளுக்குச் சென்று விடுகின்றனர். எஞ்சியுள்ளவர்கள் மிக உயர்ந்த தனியார் மருத்துவமனைகளில் பணிக்குச் சென்று விடுகின்றனர். தற்போது நீட் தகுதித் தேர்வு நடத்தப்பட்டாலும், இதேநிலைதான் நீடிக்கும். பத்தாண்டுகளில் ஆரம்ப சுகாதார மையங்களில் சேவையாற்றும் மருத்துவர்கள் ஒருத்தரைக் கூட நாம் பார்க்க முடியாது. ஏழைகளுக்கு நல்ல மருத்துவம் கிடைக்காமல் மிகப் பெரிய அபாயத்திற்கு ஆளாக நேரிடும். இதுதான் நீட் தகுதித் தேர்வு அரசியலின் அடிப்படை.

ஆக, நீண்டகால விளைவுகளை எல்லாம் பரிசீலித்தே நீட் எதிர்ப்பு போராட்டம் தமிழ்நாட்டில் வலுத்துள்ளது. 32 மாவட்டங்களில் போராட்டம் நடைபெறவுள்ளது. நீட்-க்கு எதிராக அனைவருமே ஒன்றிணைந்துள்ளனர். தவிர, மாணவர்கள், இளைஞர்கள் உள்பட அனைத்துத்தரப்பு மக்களும் நீட் எதிர்ப்புப் போராட்டங்களில் பங்கேற்க வேண்டும். இளைஞர்கள் கூட்டம் தலைமையேற்க வேண்டும். அப்போதுதான் இப்பிரச்னையில் முழுமையான வெற்றி கிடைக்கும். புறப்படுங்கள் இளைஞர் சமூகமே" என்றார் உறுதியான முழக்கமாக.

இந்தியா முழுக்க ஒரேவிதமான உணவுமுறை, உடை மற்றும் பண்பாட்டு பழக்க, வழக்கங்கள் இல்லாதபோது நீட் தேர்வை நடத்தி ஒரே மருத்துவக் கல்வி என்பதை எப்படி ஏற்க முடியும்? இந்தியாவின் அடையாளமே பன்முகத்தன்மைதான் ஒற்றைத் தகுதித் தேர்வு முறையைக் கொண்டு அதைச் சிதைக்க வேண்டாமே!

-சே.த .இளங்கோவன்.| படங்கள்: முத்துக்குமார்


டிரெண்டிங் @ விகடன்