Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மக்களின் நிதியுதவி... சிறந்த பள்ளியாக ஜொலிக்கும் கிராமத்து அரசுப் பள்ளி!

தனியார் பள்ளிக்கு இணையான அரசுப் பள்ளி


'ந்தப் பள்ளியா..? வேண்டாம்'' என பொதுமக்கள் ஒதுக்கிய ஓர் அரசுப் பள்ளியை ஐந்தே ஆண்டுகளில் 'வாவ்!' என வியக்கும் நிலைக்கு உயர்த்தி விருதுகள் வாங்க வைத்துள்ளார் ஓர் ஆசிரியர். பல லட்சம் ரூபாய் செலவில் தனியார் பள்ளிக்கு இணையான கட்டமைப்பு வசதிகளுடன் சிறந்த கல்வித் தரத்துடனும் மிளிர்கிறது அந்தக் கிராமத்து அரசுப் பள்ளி.

விழுப்புரம் மாவட்டம், வல்லம் ஒன்றியம் பள்ளிகுளம் கிராமத்தில் இருக்கும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி. ஊர்கூடித் தேர் இழுத்தால் விரைவாகப் பலன் கிடைக்கும் என்பதற்கு மிகச் சரியான உதாரணத்துடன் விளங்குகிறது. கிராம மக்களின் பங்களிப்புடன் இந்தப் பள்ளியின் நிலையை மாற்றியிருக்கும் ஆசிரியர் தமிழரசனின் கண்களில் உற்சாகம் மிளிர்கிறது. 

“விழுப்புரம் மாவட்டத்தின் கடைக்கோடியில் இருக்கும் இந்தப் பள்ளிக்கு 2012-ம் வருடம் கணித ஆசிரியராக வந்தேன். அப்போது, இந்தப் பள்ளியில் மாணவர் சேர்க்கை ரொம்பவே குறைவாக இருந்துச்சு. இங்கே படிக்கும் பசங்களிடம் ஒழுக்கம் குறைவு, கல்வித் தரம் சரியில்லை என ஊர்மக்களிடம் பரவலான எண்ணம் இருந்துச்சு. அதனால், மாணவர்களை நல்வழிப்படுத்தி, அவர்களின் கல்வித் தரம் உயரவும், பள்ளியின் கட்டமைப்பை மேம்படுத்தவும் முடிவுசெஞ்சேன். 

அசத்தும் அரசுப் பள்ளி

முதல் கட்டமாக, பிள்ளைங்க எப்படிப் படிக்கிறாங்கன்னு பெற்றோர்களுக்குத் தெரியப்படுத்த திட்டம் போட்டேன். அதுக்காக, தனியார் பள்ளி மாதிரியே 6 முதல் 8-ம் வகுப்புஅரசுப் பள்ளி ஆசிரியர் தமிழரசன் வரையான மாணவர்களுக்கு டைரி முறையைக் கொண்டுவந்தேன். நோட்டுப் புத்தகத்தையே டைரியாக பயன்படுத்தி, தினமும் ஒவ்வொரு மாணவர்களும் படிக்கும் விஷயத்தை எழுதி, பெற்றோரிடம் கையெழுத்து வாங்கிட்டு வரச் சொன்னேன். இந்த முயற்சி நல்ல பலனைக் கொடுத்துச்சு. இப்போ, எங்கள் பள்ளியின் பெயரிலேயே டைரியை அச்சிட்டு எல்லா வகுப்பு மாணவர்களுக்கும் கொடுத்திருக்கோம். மாணவர்கள், பெற்றோர், பள்ளிக்கிடையே ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்த, 2012-ம் வருஷம் முதல் ஆண்டு விழா நடத்திட்டு வர்றோம். இதன் மூலம், தங்கள் பிள்ளைகளின் திறமைகளைப் பெற்றோர் நேரில் பார்த்து சந்தோஷப்படுறாங்க. 

முதல் வருஷத்தின் ஆண்டு விழாவின் நிகழ்ச்சிகளுக்கு இடையிடையே பள்ளியின் நிலை, செய்ய வேண்டிய மாற்றங்கள் பற்றி பெற்றோர்களுக்குச் சொன்னேன். நடுநிலைப் பள்ளியாக இருக்கும் நம் பள்ளியை ஒரு லட்சம் ரூபாயை அரசுக்குக் கொடுத்து உயர்நிலைப் பள்ளியாக மாற்றலாம். அதன் பிறகு, பள்ளிக்கான பல தேவைகளைப் பூர்த்தி செய்யும் எனச் சொன்னேன். மக்களும் சொன்னதை புரிஞ்சுகிட்டு, அடுத்த நாளே நிதியுதவிக்காகப் பலரிடமும் அழைச்சுட்டு போனாங்க. ஒரே நாளில் ஒரு லட்சம் ரூபாய் கிடைச்சதும், சந்தோஷத்தில் திகைச்சுட்டேன். அந்தத் தொகையை உடனே அரசுக்கு அனுப்பிவெச்சோம்" என்கிற தமிழரசன், அடுத்தடுத்த மாற்றங்களைக் கூறுகிறார். 

அசத்தும் அரசுப் பள்ளி

"பல லட்சம் செலவில் டிஜிட்டல் போர்டு, கணினி, ஏசியுடன் ஸ்மார்ட் கிளாஸ், பெரிய அளவிலான நூலகம், அறிவியல் ஆய்வகம், நவீன ஓவியங்களுடன் கூடிய வகுப்பறைகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், ஆங்கில சிறப்புப் பயிற்சி, மாணவர்களின் பிரச்னைகளை தீர்க்கும் 'கருத்து சுதந்திரப் பெட்டி' எனப் பல விஷயங்களைச் செய்தோம். இதனால், மாணவர்கள் ஆர்வத்தோடு படிக்க ஆரம்பிச்சாங்க. அடுத்தடுத்த வருஷங்களில் மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கையும் அதிகமாச்சு. மக்களின் கூட்டு முயற்சியோடு செய்த உழைப்புக்குப் பலன் கிடைச்சது. மாவட்டத்தின் சிறந்த நடுநிலைப் பள்ளியாக போன வாரம் எங்கள் பள்ளி தேர்வாகி இருக்கு. மேலும், தமிழ்நாடு அரசு சார்பில் காமராஜர் விருதும், 50 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகையும் பள்ளிக்கு கிடைச்சு இருக்கு. இந்தத் தொகையில் முதல் மற்றும் இரண்டாம் வகுப்புகளுக்குச் சேர், டேபிளை வாங்கினோம்" என்கிற ஆசிரியர் தமிழரசன், பள்ளி சார்பில் வென்ற மற்றொரு சிறப்பான விருது பற்றியும் கூறுகிறார்.

அசத்தும் அரசுப் பள்ளி

''தமிழ்நாடு அரசின் எஸ்.எஸ்.ஏ திட்டத்தில் பல்வேறு ஆசிரியர்கள் தேர்வுசெய்யப்பட்டு, பி.பி.எல் (project based learning) என்ற செயல்திட்டத்தை செயல்படுத்த ஊக்குவிக்கிறாங்க. அதுக்காக, என் வழிகாட்டுதல் மூலம் ஐந்து மாணவ, மாணவிகள் சேர்ந்து, எங்கள் பள்ளியில் பிரதான பிரச்னைக்கு தீர்வு கண்டுபிடிச்சோம். குழந்தைகளுக்கு அரசு இலவசமாக கொடுத்திருக்கும் செருப்புகளை, சின்ன வகுப்பின் பல குழந்தைகள் ஸ்கூல் ப்ரேயரின்போது விட்டுட்டுப் போயிருவாங்க. மற்ற வகுப்பறை வாசலில் இருக்கும் செருப்புகளை விளையாட்டா எடுத்துகிட்டுப் போய் வேற இடத்துல போட்டுருவாங்க. இந்தப் பிரச்னைக்கு தீர்வாக, ஒவ்வொரு வகுப்பு மாணவரின் செருப்புக்கும் ஒவ்வொரு கலர் பெயிண்ட் அடிச்சு, ஒவ்வொரு செருப்பிலும் அந்த மாணவரின் சீரியல் நம்பரை எழுதினோம். இதனால், செருப்பு மிஸ்ஸானாலும் யாருதுன்னு ஈஸியா அடையாளம் தெரிஞ்சுக்க முடிஞ்சுது. உலக அளவில் குழந்தைகளிடம் இருக்கும் திறமைகளைப் பாராட்டி விருது வழங்கும் குஜராத்தைச் சேர்ந்த 'டிசைன் ஃபார் சேஞ்ச்' தனியார் அமைப்புக்கு இந்த புராஜெக்ட் பற்றி அனுப்பிவெச்சோம். 100 சிறந்த புராஜெட்டுகளில் எங்களுடைய புராஜெக்ட்டுக்கும் விருதும் பத்தாயிரம் பரிசும் கிடைச்சு இருக்கு.

இந்தப் பள்ளியின் மாற்றங்களுக்கு பத்து லட்சத்துக்கும் அதிகமா செலவாகி இருக்குது. இதில், கணிசமான தொகையைக் கொடுத்தவங்க கிராமத்து மக்கள்தான். மக்கள் ஆசிரியர்களாகிய எங்கள் மேலே வைத்த நம்பிக்கையை காப்பாத்தி இருக்கோம். எங்களின் இந்தப் பணி தொடரும்'' என்று புன்னகைக்கிறார் ஆசிரியர் தமிழரசன். 

- கு.ஆனந்தராஜ்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement