வெளியிடப்பட்ட நேரம்: 13:08 (19/04/2017)

கடைசி தொடர்பு:11:51 (20/04/2017)

ஜல்லிக்கட்டுக்குக் குரல் கொடுத்த ஊர்காவல்படை வீரரின் நிலை என்ன? #ShockToKnow #VikatanExclusive

சென்னை மெரினா, அலங்காநல்லூர் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுக்கான மாணவர் போராட்டத்தில், போலீஸார் சிலர் உணர்ச்சி வசப்பட்டுப் பேசினார்கள். அதேபோல், திருச்சி மாணவர் போராட்டத்தின்போது, கொட்டும் மழையில்  நனைந்தபடி பாதுகாப்பு பணிக்கு வந்த  திருச்சி உறையூர் மேட்டுத் தெருவைச் சேர்ந்த ஊர்க்காவல் படை வீரர் பெல்சன், உணர்ச்சி மிகுதியில் திடீரென போராட்டக்காரர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக மைக் பிடித்து பேச ஆரம்பித்துவிட்டார் (சென்னையிலும் ஒரு காவலர் இதுப் போல செய்தார்). அவரது பேச்சைக் கேட்டதும், ஜல்லிக்கட்டுக்காக போராடிய மாணவர்கள், பொதுமக்கள் எனப் பலரும், பெல்சனை தூக்கி வைத்துக் கொண்டாடியதுடன், கட்டி அணைத்தும் ஆர்ப்பரித்தார்கள்.

பெல்சன் - ஜல்லிக்கட்டு

ஆனால், ஊர்க்காவல்படை வீரர் பெல்சன், இப்படிப் பேசியதற்காகவே, கடந்த 3 மாதங்களாக அவருக்கு பணி ஏதும் வழங்காமல், வஞ்சித்து வருகிறது திருச்சி காவல்துறை. இதனால் அவர், தனியார் மருத்துவமனை ஒன்றில் செக்யூரிட்டியாக பணி செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

பெல்சனை நேரில் சந்தித்தோம்.

“எனக்குச் சொந்த ஊர் லால்குடியை அடுத்த செம்பரை. எங்க குடும்பத்தில், அப்பா, தாத்தா என எல்லோரும் ராணுவத்தில் பணி புரிந்தவர்கள். அதனால் இயல்பாகவே நாட்டுப்பற்று கொஞ்சம் அதிகம். அப்பா ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றபிறகு, அவருக்கு ஓய்வூதியம் கிடைப்பதில் சிக்கல் இருந்தது.

அதனால்  அப்போது  குடும்பத்தில் ஏற்பட்ட வறுமை காரணமாக, என்னால் 10-ம் வகுப்புக்கு மேல் படிக்க முடியவில்லை. ஆனாலும் மிலிட்டரி அல்லது காவல்துறை பணியில் சேர்ந்து, ‘மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்’ என முடிவு செய்தேன். அதற்காக பல முறை முயற்சி செய்தேன். கிடைக்கவில்லை. அதனால்தான் ஊர்க்காவல் படையில் சேர்ந்தேன். கடந்த 16 வருடங்களாக வேலை பார்த்து வந்தேன்.

சில வருடங்களுக்கு முன்னால், திருச்சி வண்ணாரப்பேட்டையில் உள்ள குடிசைகளில் தீ விபத்து ஏற்பட்டு குடிசைகள் பற்றி எரிந்தது. அதில்  சிக்கிய பலரின் உயிரைக் காப்பாற்றினேன். அதேபோல், ஶ்ரீரங்கம் கோவில் திருவிழாவின்போது, ஈரோட்டைச் சேர்ந்த 7 வயது சிறுவன் கூட்ட நெரிசலில் சிக்கி உயிருக்குப் போராடினான். அதைப் பார்த்த நான், அந்தச் சிறுவனை மீட்டெடுத்து தோளில் சுமந்தவாறே மருத்துவமனைக்கு கொண்டு சென்று அவனது உயிரைக் காப்பாற்றினேன். இதேபோல் உறையூர் வெக்காளியம்மன் கோவில் மின் விபத்தின்போதும் துரிதமாக செயல்பட்டு பலரின் உயிர்களைக் காப்பாற்றி இருக்கிறேன். அதற்காக இதுவரை 4 முறை கலெக்டரும், ஒருமுறை போலீஸ் கமிஷனரும் நேரில் அழைத்துப் பாராட்டி சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள். இதுமட்டுமல்லாமல், மரங்கள் வளர்ப்பதற்காகவும், ரத்ததானம் குறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்தியதற்காகவும் ரோட்டரி கிளப் உள்ளிட்ட அமைப்பினர் என்னைப் பாராட்டி இருக்கிறார்கள்.

பெல்சன் - ஜல்லிக்கட்டுசின்ன வயதில் இருந்தே எனக்கு ஜல்லிக்கட்டு ரொம்பப் பிடிக்கும். காளையை அடக்கப்போய் காயங்கள் ஏற்பட்டு, உயிர் பிழைத்துள்ளேன். இப்போதுதான் மாடுபிடிக்கப் போவதில்லை.

கடந்த ஜனவரி மாதம் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில், படிக்கிற மாணவர்கள் மழை-வெயில் பார்க்காமல் வீதியில் இறங்கி போராடினார்கள். அவர்களது தியாகமும் உற்சாகமும் எனக்குள்ளும் உத்வேகத்தை ஏற்படுத்தியது. அதனால் மைக் பிடித்து, ‘ஜல்லிக்கட்டு எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஜல்லிக்கட்டு நமது பாரம்பரியம். ஜல்லிக்கட்டு நடக்காமல் இருப்பது வேதனையாக இருக்கிறது. என்னைப் போல் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக உள்ள பல போலீசார் இங்கு இருக்கிறார்கள். ஜல்லிக்கட்டுக்கு காவல்துறை எதிரி இல்லை. அதனால் காவலர்கள் சொல்வதை மதித்து நடந்து கொள்ளுங்கள். காவலர்கள் தொடர்ச்சியாக உங்களுக்கு உதவி செய்கிறார்கள். காவலர் உங்கள் நண்பர்கள். இப்போது ஜல்லிக்கட்டுக்காகப் போராடும் நீங்கள் விவசாயத்துக்காகவும் போராட வேண்டும். மழை பொய்த்துப்போனது மரம் வையுங்கள்' எனப் பேசினேன்.

அப்படி பேசிய என்னை, கண்டோன்மெண்ட் ஸ்டேசனில் மணிக்கணக்கில் விசாரித்தார்கள். அப்போது நான், ‘எனக்கு சம்பளம் 150 ரூபாய்தான் சார், படிக்கிற பசங்க போராடுவதைப் பார்த்து 500 ரூபாய்க்கு பாய் வாங்கிக்கொடுத்தேன். ஆர்வத்தில் பேசினேன்’ என அனைத்தையும் சொன்னேன். இதையடுத்து எனக்கு டியுட்டி போடவே இல்லை. அதனால் சில நாட்கள் கழித்து, திருச்சி போலீஸ் கமிஷனரை நேரில் பார்த்து, 'ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின்போது ஆர்வத்தில் பேசிவிட்டேன். அதனால் பணி வழங்காமல் இருக்கிறார்கள்' என முறையிட்டேன். அப்போது கமிஷனர், 'உன்னை யார் இப்படி பேச சொன்னா? உன்னை அரஸ்ட் பண்ணாமல் விட்டாங்கன்னு சந்தோசப்படு. அங்கே என்ன பேசினீர்கள் என்று எழுதிக் கொடுத்துட்டுப் போங்க' என்றார். அப்படியே விளக்கக் கடிதம் ஒன்றை எழுதிக் கொடுத்துவிட்டு வந்தேன். ஆனாலும் வேலை கொடுக்கவில்லை. அடுத்து கலெக்டர், அமைச்சர் எனப் பலரிடமும் இதுகுறித்து மனுக்கொடுத்தேன். ஆனால் வேலை தரவில்லை.

நான் வேலைக்குச் சேரும்போது, 35ரூபாய் சம்பளம்; இப்போது 150 ரூபாய் சம்பளம். இந்தச் சம்பளம் முக்கியமில்லைங்க. ‘அப்பா, தாத்தா நாட்டுக்காக உழைத்ததைப்போல, காக்கி சட்டைப் போட்டுக்கொண்டு என்னாலும் இந்த நாட்டுக்கு உதவ முடியுதே’ என்கிற மனநிறைவில் 16 வருடங்களாக உழைத்தேன். அதை பறிச்சிட்டாங்களேன்னுதான் வருத்தமாக இருக்கு சார்.

ஜல்லிக்கட்டுக்காகப் போராடிய மாணவர்களையும், போலீஸாரையும் முதல்வர் உள்ளிட்ட அனைவரும் பாராட்டினார்கள். ஆனால் என்னை இப்படி வஞ்சிக்கிறார்களே நியாயமா சார்?'' என்று நம்மிடம் கேள்வி கேட்டபடியே செக்யூரிட்டி பணியைக் கவனிக்கத் தொடங்கினார்.

-சி.ய.ஆனந்தகுமார்
படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்