வெளியிடப்பட்ட நேரம்: 15:36 (19/04/2017)

கடைசி தொடர்பு:17:51 (19/04/2017)

சுகேஷ் சந்திரசேகரின் வாக்குமூலம் மூலம் தினகரனுக்கு நெருக்கடி! டெல்லி போலீஸ் வியூகம் #VikatanExclusive

சுகேஷ்

தமிழக அரசியலில் டி.டி.வி.தினகரன் எடுக்கும் முடிவுக்குப் பிறகு, டெல்லி போலீஸார் நடவடிக்கை எடுக்கக் காத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. டி.டி.வி.தினகரனின் ஒவ்வொரு அசைவையும் போலீஸார் கவனித்துவருவதாக டெல்லி போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இரட்டை இலைச் சின்னத்தை மீட்க, டெல்லி புரோக்கரும் ஒயிட் காலர் கிரிமினலுமான சுகேஷ் சந்திரசேகரிடம் கோடிக்கணக்கில் பணம் கொடுத்ததாக, டி.டி.வி.தினகரன் மீது டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில், டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த சுகேஷ் சந்திரசேகரை டெல்லி போலீஸார் கைது செய்துள்ளனர்.  அவரிடமிருந்து ஒருகோடியே 30 லட்சம் ரூபாயும், இரண்டு சொகுசு கார்கள் மற்றும் சில ஆவணங்களையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். சுகேஷ் சந்திரசேகரிடம் நடத்திய விசாரணையில், டி.டி.வி.தினகரன் தரப்புதான் இரட்டை இலைச் சின்னத்தை மீட்க கோடிக்கணக்கில் பணம் கொடுத்ததாகத் தெரிவித்துள்ளார். சுகேஷ் சந்திரசேகர், டி.டி.வி.தினகரன் ஆகியோர் இடையே நடந்த பேரம் தொடர்பான ஆவணங்களும் போலீஸாரிடம் சிக்கியுள்ளன. இது, டி.டி.வி.தினகரனுக்கு கடும் சிக்கலை ஏற்படுத்தும் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த நிலையில், டி.டி.வி.தினகரன் தரப்பில் வழக்கை எதிர்கொள்வதற்கான ஆலோசனை நடந்துவருகிறது. டி.டி.வி.தினகரன் மீது வழக்குப் பதிவானதும் சசிகலா அணியில் பிளவு ஏற்பட்டுள்ளது. அதில் பெரும்பாலானவர்கள், ஓ.பன்னீர்செல்வம் அணியினருடன் பேச்சுவார்த்தை நடத்த முயற்சித்துவருகின்றனர்.

இந்தச் சூழ்நிலையில், டெல்லி போலீஸாரிடம் சுகேஷ் சந்திரசேகர் பரபரப்பான வாக்குமூலத்தைக் கொடுத்துள்ளார். அதில், டி.டி.வி.தினகரனின் அறிமுகம், பணப் பரிமாற்றம், இந்த வழக்கில் யாருக்கெல்லாம் தொடர்புள்ளது போன்ற விவரங்களைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டெல்லி போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், "இரட்டை இலைச் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியதும், அதை மீட்க டி.டி.வி.தினகரன் தரப்பு கடுமையாக முயற்சித்துள்ளது. டெல்லியில் உள்ள சுகேஷ் சந்திரசேகரிடம் இரட்டை இலைச் சின்னம் தொடர்பாக  டி.டி.வி.தினகரன் தரப்பிலிருந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. நட்சத்திர ஓட்டலில் நடந்த பேச்சுவார்த்தையில், டி.டி.வி.தினகரன் தரப்பிலிருந்து இரண்டுபேர் கலந்துகொண்டு பேரம் பேசி முடித்துள்ளனர். 60 கோடி ரூபாயில் தொடங்கிய பேரம், கடைசியாக 50 கோடி ரூபாயில் படிந்துள்ளது. முதல்கட்ட தவணைத்தொகை சில கோடிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்தப் பணத்துடன் டெல்லியில் உள்ள நட்சத்திர விடுதியில் அறை எண் 263ல் சுகேஷ் சந்திரசேகர் தங்கியிருந்தார். அங்கிருந்தபடியே தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தும் முயற்சியில் சுகேஷ் சந்திரசேகர் ஈடுபட்டிருந்தார்.
 

சுகேஷ் சந்திரசேகரைப் பொறுத்தவரை, அவருக்கு எல்லாத் துறையினருடனும் அரசியல் கட்சியினருடனும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அந்த வகையில், பா.ஜ.க.வைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஒருவரின் மகன் மூலம் இந்தச் செயலில் ஈடுபட முடிவு செய்திருந்தார். டி.டி.வி.தினகரன் தரப்பில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவரிடம்தான் இந்த அசைமென்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள், செல்போனில் பேசியதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது. இந்தத் தகவல் உடனுக்குடன் டி.டி.வி.தினகரன் தரப்புக்கு டெல்லியிலிருந்து வாட்ஸ்அப் மூலம் பகிரப்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் டி.டி.வி.தினகரன் தரப்பு, இரட்டை இலைச் சின்னத்தை மீட்டெடுக்க பிரஷர் கொடுத்துள்ளது. அதற்கு சுகேஷ் சந்திரசேகர், இன்னும் சில நாள்களில் உங்களுக்குச் சாதகமான முடிவு தேர்தல் ஆணையத்திடமிருந்து வரும். அதற்கான அனைத்தையும் முடித்துவிட்டேன் என்று பதிலளித்துள்ளார்.

இதற்கிடையில், இரட்டை இலைச் சின்னத்தை மீட்டெடுக்க பேரம் நடக்கும் தகவல் ரகசியமாக எங்களுக்கு கிடைத்தது. உடனடியாக சுகேஷ் சந்திரசேகர், டி.டி.வி.தினகரன், மற்றும் அவரது தரப்பைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆகியோரை ரகசியமாக கண்காணித்தோம். கோடிக்கணக்கான பணத்துடன் சுகேஷ் சந்திரசேகர் டெல்லி நட்சத்திர ஓட்டலில் தங்கியிருக்கும் தகவல் எங்களுக்குக் கிடைத்தது. உடனடியாக குற்றப்பிரிவு போலீஸ் டீம், ஓட்டலின் முதல்நுழைவு வாயில் வழியாக அவர் தங்கியிருந்த அறைக்குச் சென்றோம். அப்போது கதவைத் திறந்த சுகேஷ் சந்திரசேகர், அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றார். மடக்கிப்பிடித்து அவரிடம் விசாரணையைத் தொடங்கினோம். அப்போது, நான் சுகேஷ் சந்திரசேகரே இல்லை என்று இந்தியில் தெரிவித்தார். ஆனாலும், அவர் தங்கியிருந்த அறை முழுவதும் சோதனை நடத்தினோம். அப்போது, ஒரு பேக்கில் 2,000 ரூபாய் நோட்டுக்கள் கட்டுக்கட்டாக இருந்தன. அதுகுறித்து விசாரித்தபோது, வைர வியாபாரத்தில் தனக்குக் கிடைத்த வருமானம் என்று தெரிவித்தார்.

 பறிமுதல் செய்யப்பட்ட பணம்

உடனடியாக, வருமான வரித்துறையினருக்கு தகவல் தெரிவித்தோம். அவர்களும், நாங்களும் இணைந்து அந்த ரூபாய் நோட்டுகளை எண்ணினோம். மொத்தம் ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் இருந்தது. பணத்துக்கான வருமான கணக்கை கேட்டபோது, அவர் பதில் அளிக்க முடியாமல் திணறினார். இதன்பிறகே, இரட்டை இலைச் சின்னம் விவகாரத்தை அவர் எங்களிடம் தெரிவித்தார். டி.டி.வி.தினகரன்மூலம் இந்தப் பணம் வந்ததாகவும் கூறினார். அதற்கான ஆதாரங்கள், ஆவணங்களும் எங்களுக்குக் கிடைத்தன. அவரது காரில் எம்பி., ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. அது, எப்படி அவருக்குக் கிடைத்தது என்று விசாரித்தபோது, அ.திமு.க. எம்பி., ஒருவர்மூலம் கிடைத்ததாகவும் தெரிவித்தார். அந்த எம்பி குறித்து விசாரணை நடந்துவருகிறது.

இதையடுத்து, சுகேஷ் சந்திரசேகர் மீது வழக்குப்பதிவுசெய்து சிறையில் அடைத்துள்ளோம். அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், டி.டி.வி.தினகரன் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளோம். அவரிடம் விசாரணை நடத்த முடிவுசெய்துள்ளோம். இதற்கான நடைமுறைகள் நடந்துவருகின்றன. பெங்களூருக்கு டி.டி.வி.தினகரன் செல்வதாக எங்களுக்குத் தகவல் கிடைத்ததும் உடனடியாக அங்கு சென்றோம். ஆனால், எங்களது வருகையை முன்கூட்டியே அறிந்த டி.டி.வி.தினகரன், பெங்களூரு சிறைக்கு வரவில்லை. தற்போது, தமிழகத்தில் சென்னையில் இருக்கிறார். அவரது ஒவ்வொரு நடவடிக்கைகளையும் கண்காணித்து வருகிறோம். அவரிடம் விரைவில் விசாரணை நடத்தப்படும்" என்றனர்.

பெயரைக் குறிப்பிட விரும்பாத டெல்லி போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "டி.டி.வி.தினகரனிடம் விசாரணை நடத்த தயார்நிலையில் போலீஸ் டீம் உள்ளது. தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு, அவரிடம் விசாரணை நடத்துவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. அவரே கட்சியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்துள்ளார். மேலிட உத்தரவுக்காகக் காத்திருக்கிறோம். அங்கிருந்து சிக்னல் கிடைத்தவுடன், அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். 

டி.டி.வி.தினகரன்


டெல்லியில் டி.டி.வி.தினகரன் மீதுள்ள எஃப்ஐஆர், அவரது கழுத்துக்கு மேல் கத்தியாகத் தொங்கிக்கொண்டு இருப்பதாக உள்விவர வட்டாரங்கள் தெரிவித்தன. டி.டி.வி.தினகரன், கட்சியிலிருந்து தாமாக விலகும் மனநிலைக்குத் தள்ளப்படுவதற்கும் அந்த எஃப்ஐஆர் உள்ளிட்ட சில காரணங்கள் உள்ளன. ஏற்கெனவே சசிகலா, கட்சிப் பொறுப்பைத் தொடர்ந்து, ஆட்சிப் பொறுப்பை ஏற்க முயற்சித்த நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்குச் சென்றுவிட்டார். தற்போது, டி.டி.வி.தினகரன், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் களமிறங்கியவுடன், அவருக்கு செக் வைக்கும் வகையில் அடுத்தடுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நிலுவையிலிருந்த வழக்குகள் எல்லாம் சூடுப்பிடித்துள்ளதால், டி.டி.வி.தினகரன் தரப்பு அமைதியாக ஒவ்வொன்றாக எதிர்கொண்டுவருகிறது. இதன் எதிரொலியே, கட்சியிலிருந்து ஒதுங்கிவிட்டதாக டி.டி.வி.தினகரன் ஓப்பனாகச் சொல்லியிருக்கிறார். மேலும், நான் விலகினால் நன்மை கிடைக்கும் என்றால், அதற்கும் தயார் என்று தெரிவித்த டி.டி.வி.தினகரன், தன்னுடைய ஆதரவு எம்எல்ஏ-க்களிடம் கட்சி பிளவுபடக்கூடாது என சமரசம் பேசியுள்ளார். இதில் சில எம்எல்ஏ-க்கள், மனம் மாறியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. 

- எஸ்.மகேஷ் 

 


டிரெண்டிங் @ விகடன்