வெளியிடப்பட்ட நேரம்: 15:06 (19/04/2017)

கடைசி தொடர்பு:15:28 (19/04/2017)

விசுவாசத்துக்கு இவர்தான் எடுத்துக்காட்டு! அமைச்சர் உதயகுமார் திடீர் தடாலடி பாசம்

சசிகலா அணியில் இருந்து பிரிந்துசென்ற பன்னீர்செல்வத்தைக் கடுமையாக விமர்சித்த அமைச்சர் உதயகுமார், தற்போது 'விசுவாசத்தை பன்னீர்செல்வத்தைப் பார்த்தே நாங்கள் கற்றுக்கொண்டோம்' என்று திடீரென தடாலடிப் பாசத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றுக்கொண்டார். இதையடுத்து, அ.தி.மு.க பொதுச் செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். சசிகலா முதல்வராக வரவேண்டும் என்று அமைச்சர் உதயகுமார் தலைமையில் நடைபெற்ற ஜெயலலிதா பேரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர், பன்னீர்செல்வத்துக்கு எதிராக அவர் பேட்டிகொடுக்கத் தொடங்கினார். இந்த நிலையில், முதல்வர் பதவியை பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தார். பின்னர், ஜெயலலிதா சமாதியில் 45 நிமிடம் மெளன தியானம் செய்துவிட்டு, சசிகலாவுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியதோடு, சசிகலா குடும்பத்தில் இருந்து கட்சியைக் கைப்பற்ற தர்மயுத்தம் தொடங்கப்போவதாக அறிவித்தார்.

இதனிடையே, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இரட்டை இலைச் சின்னம் கேட்டு இரு அணியினரும் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டனர். இரு தரப்பு வாதத்தைத் தொடர்ந்து, இரட்டை இலைச் சின்னம் மற்றும் அ.தி.மு.க பெயரை இரு தரப்பினரும் பயன்படுத்தத் தடைவிதித்தது. இந்தச் சூழ்நிலையில், இரட்டை இலைச் சின்னத்தைப் பெற, தேர்தல் ஆணையத்துக்கு 50 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க இருந்ததாக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவரை டெல்லி காவல்துறையினர் கைதுசெய்தனர். அப்போது, டி.டி.வி.தினகரன் பணம் கொடுத்ததாக சுகேஷ், காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்தது கட்சிக்குள் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனிடையே, தினகரன் மீது டெல்லி காவல்துறையினர் வழக்குப்பதிவுசெய்துள்ளனர். இதைத் தொடர்ந்து, தினகரனிடம் விசாரணை நடத்துவதற்காக டெல்லி காவல்துறையினர் சென்னை வந்துள்ளனர். விசாரணைக்குப் பின்னர், தினகரன் கைது செய்யப்படலாம் என்ற நிலை உருவாகியுள்ளது.

இதனிடையே, அ.தி.மு.க-வில் இருந்து சசிகலா குடும்பத்தை ஒதுக்கிவைப்பதாக முதல்வர் பழனிசாமி அணியைச் சேர்ந்த அமைச்சர்கள் திடீரென அறிவித்தனர். மேலும், பன்னீர்செல்வத்துடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாகக் கூறினர்.

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயகுமார், உள்ளாட்சித்தேர்தலில் போட்டியிட இரட்டை இலைச் சின்னம் மிகவும் முக்கியம் என்றும், எல்லோரும் ஒன்றிணைந்து இரட்டை இலையை மீட்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

பன்னீர்செல்வம் விசுவாசத்துக்கு எடுத்துக்காட்டாக இருந்தார் என்று புகழாரம் சூட்டிய உதயகுமார், 'விசுவாசத்தை பன்னீர்செல்வத்தைப் பார்த்தே நாங்கள் கற்றுக்கொண்டோம்' என்று கூறினார்.

தியாகத்துக்கு என்றுமே மறைவு கிடையாது என சசிகலா குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர், ஆட்சித் தலைமை எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் என்றும், கட்சித் தலைமைகுறித்து மூத்த அமைச்சர்கள் முடிவுசெய்வார்கள் என்றும், கட்சி ஒருங்கிணைய வேண்டியிருப்பதால் அமைச்சர்கள் தியாகம்செய்துள்ளோம் என்றும் கூறினார்.