வெளியிடப்பட்ட நேரம்: 15:34 (19/04/2017)

கடைசி தொடர்பு:17:14 (19/04/2017)

அமைச்சர்கள் முடிவை வரவேற்ற சசிகலா குடும்பத்தினர்!

முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து செயல்படுவதை சசிகலா குடும்பத்தினர் வரவேற்றுள்ளனர்.

'அ.தி.மு.க பொதுச் செயலாளராக சசிகலா பதவியேற்ற நாளில் இருந்து, குடும்ப உறவுகளை முழுமையாக ஒதுக்கிவைத்திருந்தார் தினகரன். அவருக்கு வேண்டிய ஆட்கள் மட்டும் ஆட்சி அதிகாரத்தில் கோலோச்சத் தொடங்கினர். இதனால் எரிச்சலான திவாகரன், பெங்களூரு சிறையிலேயே சசிகலாவைச் சந்தித்து முறையிட்டார்.

இந்த நிலையில், தேர்தல் ஆணையத்தில் இரட்டை இலைச் சின்னம் பிரச்னை தீவிரமாக வெடித்ததால், இரு அணிகளும் ஒன்றுசேர்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தத் தொடங்கிவிட்டனர். இதனை எதிர்பார்க்காத தினகரன், 'நேற்றே கட்சியில் இருந்து ஒதுங்கிவிட்டேன்' எனப் பேட்டியளித்தார்.

இதுகுறித்து, ஃபேஸ்புக்கில் கருத்தைத் தெரிவித்த திவாகரன் மகன் ஜெயானந்த், 'சசிகலாவைத் தவிர அந்தக் குடும்பத்தில் இருந்து யாரும் வரமாட்டார்கள். சில மாதங்களுக்கு முன்பே இதை நாங்கள் வலியுறுத்தினோம். அப்போது இதை யாரும் ஏற்கவில்லை. தாமதமான முடிவு என்றாலும் வரவேற்கிறோம்' எனத் தெரிவித்திருந்தார்.

இதற்குப் பின்னூட்டமாக இளவரசி மகன் விவேக், 'ஸ்மைலி' சின்னத்தைப் பதிவுசெய்திருந்தார். இதையடுத்து, மற்றொரு பதிவில், 'நடப்பவை கழகத்துடைய நன்மைக்கானவை அல்ல, மாறாக, கழகம் சுக்குநூறாக ஆவதற்கான வாய்ப்பை இவை உருவாக்கும்' எனவும் விமர்சனம் செய்திருக்கிறார் விவேக்.

'தினகரனை ஒதுக்கிவைக்கும் முடிவை, குடும்பத்தினர் அனைவரும் ஏகமனதுடன் வரவேற்கின்றனர் என்பது இதன்மூலம் தெரிகிறது' என்கிறார் அ.தி.மு.க நிர்வாகி ஒருவர்.