மதுக்கடைக்கு எதிராக போராட்டத்தில் இறங்கிய 2-ம் வகுப்பு சிறுவன்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மதுக்கடையை திறக்கக்கூடாது என்று வலியுறுத்தி இரண்டாம் வகுப்பு மாணவன் தனியாக நடைப் பயணத்தில் ஈடுபட்ட செயல் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. 


காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் வட்டத்தில் அமைந்துள்ளது படூர் கிராமம். அந்த படூர் கிராமத்தில் அமைந்துள்ள மதுக்கடையை மூட வலியுறுத்தி சில நாள்களுக்கு முன்னர் கிராம மக்கள் போராட்டம் நடத்தி, கடையையும் அடித்து நொறுக்கினர். அந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்தக் கடையை மீண்டும் திறக்கக் கூடாது என்று வலியுறுத்தி ஆகாஷ் என்ற இரண்டாம் வகுப்பு மாணவன் 'குடியை விடு படிக்க விடு' என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திய படி போராட்டத்தில் ஈடுபட்டான்.

அந்த மாணவச் சிறுவன் கடை அமைந்திருக்கும் பகுதிக்கு ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து பதாகையை ஏந்தியபடி நடந்தே சென்றான். பள்ளிச் சீருடையுடன் சென்ற அந்தச் சிறுவன் அங்கிருந்த அனைவரது கவனத்தையும் ஈர்த்தான். மதுக்கடை அருகே சென்ற சிறுவனிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். கடை மூடியிருப்பதைச் சுட்டிக் காட்டி ஆகாஷை பள்ளிக்குச் செல்ல அறிவுறுத்தினர். அதனையடுத்து ஆகாஷ் பள்ளிக்குச் சென்றான். ஏற்கெனவே ஹெல்மெட் பாதுகாப்பு, கருவேல மரம் அகற்றுதல் உள்ளிட்ட போராட்டங்களில் ஆகாஷ் பங்கேற்றதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!