தீபா ஸ்டேட்டஸ் என்ன? ஒரு நேரடி விசிட்!

தமிழக அரசியலில் ஏற்பட்ட திடீர் திருப்பங்களால், அடுத்து என்ன நடக்குமோ... என்ற பரபரப்பில் மக்கள் இருக்கின்றனர். இது ஒருபுறம் இருக்க, ஜெயலலிதா மறைவுக்குப் பின் அ.தி.மு.க -வில் ஏற்பட்ட பிளவை மையமாகவைத்து அரசியலுக்கு வந்த தீபாவின் நிலைமைதான் தற்போது பரிதாபமாக உள்ளது. 

Deepa house

 

ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியாகவும், சசிகலா தலைமையில் ஒரு அணியாகவும் அ.தி.மு.க பிரிந்தபோது, ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா, 'எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவையை'த் தொடங்கினார். ஆரம்பத்தில், தொண்டர்கள் படை என்னவோ அவர் வீட்டை தினமும் முற்றுகையிட்டு வந்தது உண்மைதான். ஆனால், ஒரு சரியான நிர்வாகத் திறன் இல்லாத காரணத்தாலும், திடீர் திடீரென எடுக்கப்பட்ட முடிவுகளாலும் தொண்டர்கள் பலருக்கு தீபாவின் மீது அதிருப்தி ஏற்பட்டது. அதனால், அவரைவிட்டு விலக ஆரம்பித்தனர். இதனிடையே, உள்கட்சி பூசல் மற்றும் குடும்பப் பிரச்னையால் தீபாவின் கணவர் மாதவன் தனியாகக் கட்சி ஆரம்பிக்கப்போகிறேன் என்று சென்றுவிட்டார். இதனால், மீதமிருந்த கொஞ்ச தொண்டர்களில் சிலர், தீபா பக்கமும் சிலர் மாதவன் பக்கமும் சென்றனர். 

மாதவன், தனியாக கட்சி ஆரம்பிக்கப்போகிறேன் என்று தனியாகச் சென்ற பின்னரும், சில தொண்டர்கள் எப்போதும்போல தீபாவின் வீட்டுக்குப் போய்க்கொண்டிருந்தனர். இந்த நிலையில், டி.டி.வி. தினகரன் இன்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில், 'அ.தி.மு.க அம்மா அணியிலிருந்து ஒதுக்கப்பட்டதற்காக நான் வருந்தவில்லை. நேற்று இரவே கட்சியிலிருந்து ஒதுங்கிவிட்டேன்.' என்று அறிவித்து இருந்தார். இதனால், தற்போது பன்னீர்செல்வம் அணியும் எடப்பாடி பழனிசாமி அணியும் பல ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகின்றது.

டி.டி.வி. தினகரனின் இந்த முடிவால் தீபா நிலை எப்படி இருக்கிறது என்று அவர் வீட்டுக்கு விசிட் செய்தோம். எப்போதும் தீபாவின் வீட்டின் முன்பு 10 தொண்டர்களாவது இருந்து வந்தார்கள். ஆனால் டி.டி.வி தினகரனின் இந்த அறிவிப்புக்குப் பிறகு தீபா வீட்டின் முன்பு அவரது பௌன்சர் பாய்ஸ்களும், அவர்களின் அருகே ஒரு சைக்கிளில் டீ விற்கும் ஒருவரும் தான் இருந்தார்கள். இந்த திடீர் முடிவு பற்றி உங்களுடைய கருத்து என்ன என்பதை கேட்கலாம் என்று அவர் வீட்டின் முன் காத்திருக்க அவர் கடைசிவரை வீட்டை விட்டு வெளியே வரவில்லை. 

தமிழகத்தில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், யார் வேண்டுமானாலும் முதலமைச்சர் ஆகலாம் என்று நினைத்து அரசியலில் குதித்த தீபாவின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருக்குமோ? 

 

- ஜெ.அன்பரசன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!