வெளியிடப்பட்ட நேரம்: 07:47 (20/04/2017)

கடைசி தொடர்பு:07:49 (20/04/2017)

தவிக்குதே... தவிக்குதே..! தாகத்தில் கதறும் சென்னை

சென்னை

சென்னை மாநகர மக்களுக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர் மட்டம் அதளபாதளத்துக்குப் போய்விட்டது. எனவே, குடிநீர் வழங்கும் அளவை  குடிநீர் வாரியம் குறைத்து விட்டது. தேவைக்கும் பாதி அளவுதான் இப்போது குடிநீர் வழங்கப்படுகிறது. இதனால், வடசென்னையில் மீனவர் குடியிருப்புகளில் குடிநீருக்குக் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

வற்றிப்போன ஏரிகள்

வீராணம் ஏரிசென்னைக்குக் குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம், ரெட்ஹில்ஸ், செம்பரம்பாக்கம் என 4 ஏரிகளிலும் சேர்த்து 970 மில்லியன் கன அடி தண்ணீர்தான் இருக்கிறது. கடந்த ஆண்டு (2016 ஏப்ரல் 19-ம் தேதி) 6,144 மில்லியன் கன அடி தண்ணீர் நான்கு ஏரிகளிலும் இருந்தது. ஏறக்குறைய கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தண்ணீர் இருப்பு  5 மடங்கு குறைந்துள்ளது. சென்னைக்கு தண்ணீர் தந்த வீராணம் ஏரியும் இப்போது வறண்டு போயிருக்கிறது.

கடந்த ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரை பெய்ய வேண்டிய வடகிழக்குப் பருவமழை பொய்த்துப் போனதால், ஏரிகளில் புதிய நீர் வரத்து இல்லை. சென்னையைப் பொறுத்தவரை வடகிழக்குப் பருவமழை 79 செ.மீ பெய்ய வேண்டும். ஆனால், கடந்த ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரை 34 செ.மீ மழை மட்டும்தான் பெய்துள்ளது. இது இயல்பை விட 57 சதவிகிதம் குறைவான மழையாகும்.  

தேவைக்கும் பாதி அளவு

மாநகரின் குடிநீர் தேவை என்பது 1100 மில்லியன் லிட்டர். ஆனால், கடந்த சில மாதங்களாகவே ஏரியில் நீர் இருப்பு படிப்படியாக குறைந்து வருவதால், கடந்த 18-ம் தேதி வரை சென்னை நகருக்கு தினமும் 830 மில்லியன் லிட்டர் குடிநீரை குடிநீர் வாரியம் விநியோகம் செய்து வந்தது. ஏரிகளில் தண்ணீர் இருப்பு மேலும் குறைந்ததை அடுத்து திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து விவசாயகிணறுகளில் குடிநீர் எடுக்கப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டம் ஆரணி, கொசஸ்தலை ஆற்றுப் படுகைகளின் அருகே உள்ள கிராமங்களில் இருக்கும் 273 விவசாயக் கிணறுகளில் இருந்து  குடிநீர் எடுக்க விவசாயிகளுடன் சென்னை குடிநீர் வாரியம் ஒப்பந்தம் செய்துள்ளது.

அதே போல நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் இருந்தும் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. இவ்வாறு பெறப்படும் தண்ணீரைக் கொண்டுதான் சென்னை மக்களுக்கு நேற்று முதல் (19-ம் தேதி) தினமும் 550 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்படுகிறது என்று சென்னைக் குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. சென்னை நகருக்குத் தேவைப்படும் குடிநீரில் பாதி அளவு மட்டுமே இப்போது விநியோகிக்கப்படுகிறது. கோடைகாலம் முடியும் வரை இதே அளவுக்கு தொடர்ந்து குடிநீர் வழங்கப்பட உள்ளது.

வீடுகளில் உள்ள குழாய் இணைப்புகளில் மட்டும் இன்றி, டேங்கர் லாரிகள் மூலமும் இப்போது தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. இப்போது சென்னையில் 750 டேங்கர் லாரிகள் மூலம் தினமும் 6,500 முறை (டிரிப்) தண்ணீர் வழங்கப்படுகிறது.

சென்னை

கடும் தட்டுப்பாடு

வடசென்னை பகுதியில் உள்ள மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்கப்படுவதில்லை. குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வருகிறது. இப்போது குடிநீர் பற்றாக்குறையால் வட சென்னை மக்கள் மிகவும் தவித்துப் போயிருக்கின்றனர். குறிப்பாக மீனவக்குடியிருப்புகளில் கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தென் சென்னையில் அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது.

நிலத்தடி நீரை பாதுகாக்க அறிவுரை

குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி குடிநீர் வாரியம் அறிவுறுத்தி உள்ளது. போர்வெல் மூலம் நிலத்தடி நீரை உறிஞ்சுபவர்கள் ஒன்பது மணிநேரம் இடைவெளி விட்டு அதாவது காலையில் ஒரு முறை, மாலையில் ஒரு முறை மட்டும் மோட்டாரை இயக்கித் தண்ணீர் எடுக்கலாம் என்று சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறி உள்ளனர். இடைவெளி விடாமல் நிலத்தடி நீரை உறிஞ்சுவதன் மூலம் நிலத்தடி நீர் ஊறும் தன்மை பாதிக்கப்படும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். இது தவிர தேவையில்லாத சமயங்களில் குடிநீர் குழாயை மூடி வைக்க வேண்டும் என்றும், குழாய்களில் கசிவு இன்றி பார்த்துக்கொள்ளும்படியும் சென்னை குடிநீர் வாரியம் அறிவுறுத்தி உள்ளது.

கேன் குடிநீர் விற்பனை

சென்னையில் கடந்த 2002-ம் ஆண்டு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. அப்போதே சென்னையில் சில பகுதிகளில் பாட்டில் குடிநீர் வாங்கிப் பயன்படுத்தும் பழக்கம் தொடங்கி விட்டது. சென்னையில் இப்போது தினமும் 40 ஆயிரம் லிட்டர் அளவுக்கு கேன் குடிநீரைப் பொதுமக்கள் பயன்படுத்துகின்றனர்.

 -கே.பாலசுப்பிரமணி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்