வெளியிடப்பட்ட நேரம்: 21:56 (19/04/2017)

கடைசி தொடர்பு:09:22 (20/04/2017)

டெல்லி: தமிழக விவசாயிகளின் போராட்டம் தற்காலிக வாபஸ்!

'டெல்லியில் நடைபெற்று வந்த விவசாயிகளின் போராட்டம், தற்காலிகமாக வாபஸ் பெறப்படுகிறது' என்று போராட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர். 

டெல்லியில், தமிழக விவசாயிகள் சுமார் 35 நாட்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். இந்த நிலையில், விவசாயிகளின் பிரதிநிதிகள் மத்திய இணைஅமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்துப் பேசினர். அதற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், 'போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை 6-வது முறையாகச் சந்திக்கிறேன். விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக அந்தந்தத் துறை அமைச்சர்களைச் சந்தித்து வலியுறுத்திவருகிறேன். மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும். அதேபோல மாநில அரசும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். விவசாயிகளின் போராட்டத்தைக் கைவிட வேண்டும்' என்று தெரிவித்திருந்தார்.

அப்போது பேசிய போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் அய்யாக்கண்ணு, 'எங்களது கோரிக்கைகள் குறித்து மத்திய அமைச்சரிடம் தெளிவாகக் கூறியுள்ளோம். கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அவர் உறுதி அளித்தார்' என்றார்.

இதைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மற்ற விவசாயிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக்குப் பிறகு, போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ்பெறுவதாக போராட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர். இரண்டு நாட்களுக்கு போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ்பெறுவதாகவும், ஏப்ரல் 22-ம் தேதிக்குள் மத்திய அமைச்சரிடம் இருந்து உறுதிமொழிக் கடிதம் கிடைத்தால் போராட்டம் முழுமையாக வாபஸ் பெறப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.