Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அணிகள் இணைந்தால்... இந்த ஐவருக்கு சிக்கல்!

அ.தி.மு.க வின் இரண்டு  அணிகள் இணைப்புக்குப் பிறகு பல்வேறு களேபரங்கள் நடக்க வாய்ப்புள்ளதாகவும், பன்னீர் தரப்பு பவருக்கு வரும் போது பலர் தங்கள் பவரை இழக்கப் போகிறார்கள் என்ற பேச்சு இப்போது அ.தி.மு.க இரண்டு அணிகளிலும் எழுந்துள்ளது.

அ.தி.மு.கவின் இரண்டு அணிகள் இணைப்புக்கான பூர்வாங்க பணிகள் ஆரம்பமாகிவிட்டது. இரண்டு அணியிலும் குழுக்கள் அமைக்கப்பட உள்ளன. இரண்டு அணிகளின் குழுக்களும் தான் அணிகள் இணைந்தபிறகு கட்சி மற்றும் ஆட்சியில் யாருக்கு என்ன பொறுப்பு? என்பதை எல்லாம் முடிவு செய்ய உள்ளார்கள். பன்னீர் தரப்பில், “சசிகலா குடும்பத்தை ஒதுக்கிவைப்பது மட்டும் தான் தங்கள் அணியின் நிபந்தனை” என்று சொல்லியிருந்தனர். ஆனால், இந்த ஒரு நிபந்தனை மட்டுமே பன்னீர் அணியில் இல்லை என்கிறார்கள்.

அதே போல் பழனிசாமி அணியில், “கட்சியின் நன்மை கருதி இணைந்து செயல்படுவோம்” என்று சொன்னாலும் பன்னீர் அணியின் இணைப்புக்குப் பிறகு கட்சியிலும் ஆட்சியிலும் அவருக்கு தரப்போகும் முக்கியதும் குறித்த ஐயமும் அமைச்சர்களிடம் உள்ளது. பன்னீர்செல்வம் இரண்டு மாதத்திலே கிட்டத்தட்ட ஒரு கட்சியின் தலைவர் போலவே அவரது அணியினர்  அவரை வெளிக்காட்டிவிட்டார்கள். இரண்டு அணியும் இணையும் போது பன்னீர்செல்வத்துக்கே முக்கியத்துவம் தரவேண்டும் என்பதில் பன்னீர் தரப்பினர் குறியாக உள்ளார்கள். முதல்வர் பழனிசாமியோ பன்னீருக்குக் கீழ் தான் செயல்படுவதில் எந்த சிக்கலும் இல்லை என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லியுள்ளார். ஆனால் அவரது ஆதரவு அமைச்சர்கள், 'அவசரபட வேண்டாம், முதல்வர் பதவியில் நீங்களே தொடருங்கள், பொதுச்செயலாளர் பதவியை பன்னீரிடம் கொடுத்துவிடலாம்' என்று சொல்லியுள்ளார்கள். ஆட்சியும் கட்சியும் வேறு வேறு நபரிடம் இருப்பது ஆபத்து என்கிற அச்சம் இரண்டு தரப்பிலும் உள்ளது. எனவே பன்னீர் தலைமையிலேயே ஆட்சியையும் கட்சியையும் ஒப்படைக்கலாம் என்று அமைச்சர்கள் சிலரிடமும் கருத்துகள் எழுந்துள்ளது. 

அதே நேரம் பன்னீர் தரப்பில் ஏற்கெனவே அமைச்சராக இருந்து பாண்டியராஜனுக்கும், மேலும் ஒருவருக்கும் அமைச்சர் பதவிவேண்டும் என்ற டிமாண்டை வைக்க உள்ளார்கள். தங்கள் தரப்புக்கு அமைச்சர் பதவி கேட்பதோடு இல்லாமல், தற்போதைய அமைச்சரவையில் இனி யார் இருக்கக் கூடாது என்பதையும் பன்னீர் அணி முடிவு செய்துள்ளது. தினகரனுக்கு தீவிர விசுவாசம் காட்டியவர்களை தங்களது அமைச்சரவையில் வைத்துக் கொள்வதே ஆபத்து என்று பன்னீர் தரப்பு கருதுகிறது. தினகரன் ஆதரவு அமைச்சர்களை பதவியில் நீடிக்கச் செய்வதில் முதல்வருக்கும் நெருடல் உள்ளதாம். இதனால், அணிகள் இணையும் போது ஐந்து அமைச்சர்களுக்கு சிக்கல் வரலாம் என்கிறார்கள். உடுமலை ராதாகிருஷ்ணன், செல்லுார் ராஜீ, ஆர்.பி உதயக்குமார், கடம்பூர் ராஜீ, விஜயபாஸ்கர் இந்த ஐவரையும் கழற்றிவிடும் முடிவில் பன்னீர் தரப்பு உள்ளது. இதற்கு, முதல்வர் பழனிசாமி எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார் என்கிறார்கள். அமைச்சர் விஜயபாஸ்கரை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையின் விளைவுதான் தினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் கிளம்பியதற்கு ஆரம்ப புள்ளியாக இருந்தது. எனவே இனி அமைச்சரவை மாற்றத்தில் யாரும் பிடிவாதம் காட்டமாட்டார்கள் என்று கருதுகிறது பன்னீர் தரப்பு.

இதன் விளைவு தான் அமைச்சர் ஆர்.பி உதயக்குமார், திடீரென பன்னீருக்கு ஆதரவாக கருத்து சொல்லியிருக்கிறார். அதே போல், செல்லுார் ராஜுவும் பன்னீர் மீது பரிவு காட்டியுள்ளார். ஆனால், இந்த தீடீர் மாற்றங்களை எல்லாம் பன்னீர் தரப்பு அறியாமல் இல்லை.  எனவே, உள்ளே - வெளியே ஆட்டத்துக்கான திட்டத்தை பன்னீர் தரப்பு இப்போதே வகுத்துவிட்டார்கள். இரண்டு அணிகளின் குழுக்களும் பேச்சுவார்த்தை நடத்தபடும் போது அமைச்சரவை பட்டியலும் இறுதி செய்யபட உள்ளது. இரண்டு அணியினரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் அமைச்சரவை பட்டியல் தயார் செய்யபட்டாலும், கழற்றிவிடுபவர்கள் பட்டியலில் பன்னீர் தரப்பு கறார் காட்டும் என்றே தெரிகிறது. 'பன்னீர் கைக்கு பவர் போகவேண்டும் என்பதற்காக, டெல்லி தரப்பின் தடாலடி தான் அமைச்சர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. பன்னீருடன் இணைவதை தவிற வேறு வழியில்லை என்ற நிலைக்கு அமைச்சர்கள் வந்தார்கள்'. எனவே பன்னீர்செல்வம்  கையில் பவர் செல்லும் போது  தங்கள் பதவி தப்புமா?  என்ற அச்சம் அமைச்சர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. 

-அ.சையது அபுதாஹிர்
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement