வெளியிடப்பட்ட நேரம்: 10:59 (20/04/2017)

கடைசி தொடர்பு:10:59 (20/04/2017)

பழனிசாமி அணியினர் கையில்தான் இருக்கிறது! பொன்னையன் நழுவல் பேட்டி

'எதிர்த் தரப்பு அணியினர் (பழனிசாமி அணி) எப்போது சொல்கிறார்களோ, அப்போது பேச்சுவார்த்தை தொடங்கும்' என்று பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த பொன்னையன் நழுவலுடன் பதில் அளித்தார்.

அ.தி.மு.க-வில் இருந்து சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோரை ஒதுக்கிவைத்துள்ளதாக முதல்வர் பழனிசாமி அணியைச் சேர்ந்த அமைச்சர்கள் அறிவித்துள்ளதோடு, கட்சியின் நலனுக்காக பன்னீர்செல்வம் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்று கூறியிருந்தனர். இதையடுத்து, நாங்களும் பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று அறிவித்தார் பன்னீர்செல்வம்.

இதனிடையே, இருஅணியினரும் பேச்சுவார்த்தை நடத்த எப்போது குழு அமைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு, அ.தி.மு.க-வினரிடையே ஏற்பட்டுள்ளது. இரு தரப்பு அணியினரும் தற்போது குழு அமைப்பதுகுறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த பொன்னையனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர், நழுவல் பதில்களையே அளித்தார்.

உங்கள் அணி தரப்பில் எப்போது குழு அமைக்கப்படும்?

நாங்கள், குழு அமைக்க வேண்டும் என்று சொல்லவில்லை. எதிரணியினர்தான் சொல்லியிருக்கிறார்கள். அவர்களிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும்.

உங்கள் தரப்பில் பேசுவதற்குத் தயாராக இருக்கிறீர்களா?

எங்கள் தலைவர் (பன்னீர்செல்வம்) பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்று அறிவித்துவிட்டார் அல்லவா.

பேச்சுவார்த்தை எப்போது தொடங்குகிறீர்கள்?

எப்போது என்று தெரியாது.

எதிரணியினர் குழு அமைத்தவுடன் பேச்சுவார்த்தை தொடங்குமா?

அவர்கள் எப்போது சொல்கிறார்களோ... அப்போது பேச்சுவார்த்தை தொடங்கும்.