”இது இலக்கியவாதிகளுக்கான ஆகப் பெரிய கெளரவம்!’’ விகடன் நம்பிக்கை விருது நெகிழ்ச்சி தருணங்கள் #Overview

விகடன் நம்பிக்கை விருதுகள்

விகடன் நம்பிக்கை விருதுகள் சென்னை ட்ரேட் சென்டர் அரங்கில் மார்ச் 30-ம் தேதி நடைபெற்று முடிந்தது... ஆனால், அதைப் பற்றி பெருமிதங்கள் இன்னும் முடியவில்லை.

எத்தனை பெரிய அரங்கு... எத்தனை பிரமாண்டம்... எத்தனை ஆளுமைகள்... எப்படி ஓர் இடத்தில் ஒருங்கிணைக்க முடிந்தது என்ற பரவசம் இன்னும் குறைந்தபாடில்லை.

45 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. விருது வழங்குவதற்காக பேரன்புடன் கலந்துகொண்ட ஆளுமைகள் சுமார் நூறு பேர். பத்திரிகையாளர்கள், தொலைக்காட்சி பிரபலங்கள், சினிமா நட்சத்திரங்கள் என களை கட்டியது விழா.

மகத்தான தமிழர்கள் மகுடம் சூடும் விகடன் மேடை!

விகடன் நம்பிக்கை விருதுகள்

இப்படித்தான் விழா அழைப்பிதழில் எளிமையாக அழைத்திருந்தார்கள். விருதுபெரும் தமிழர்களின் பட்டியலோ நீளமாக இருந்தது. அழைப்பிதழில் அத்தனை பேரையும் கொண்டு வருவது என்றால் ஓர் ஆனந்த விகடன் அளவுக்கு புத்தகமாக அச்சடித்துத் தர வேண்டியிருந்திருக்கும்.

‘சூல்’ நாவலுக்காக எழுத்தாளர்கள் சோ.தர்மன், ஏ.கே. செட்டியார் படைப்புகளை தொகுத்தளித்த கடற்கரய், கொஞ்சம் மனது வையுங்கள் ஃப்ராய்ட் கவிதைத் தொகுதிக்காக கவிஞர் வெய்யில், விக்கி பீடியாவில் ஒரு லட்சம் தமிழ்க் கட்டுரைகள் உருவாகக் காரணமாக இருந்த மயூரநாதன், மற்றும் மனுஷ்ய புத்திரன், சரவணன் சந்திரன் போன்ற பலர் விருது பெற்றனர். சிங்கப்பூரில் இருந்து வந்திருந்தார் எழுத்தாளர் ஜெயந்தி சங்கர். இவர் சிறுவர் இலக்கியத்துக்கான மொழிபெயர்ப்பு விருது பெற்றார். இலங்கையில் இருந்து வந்திருந்தார் மயூரநாதன்.

விழாவுக்கு வந்த பிரபலங்களின் பட்டியல் வெகு நீளமானது. அரசியல் தலைவர்கள் நல்லகண்ணு, துரைமுருகன், சி.மகேந்திரன், தொல்.திருமாவளவன், நடிகர்கள் சிவகுமார், பாக்யராஜ், பிரகாஷ் ராஜ், பார்த்திபன், நக்கீரன் கோபால், நியூஸ் 18 குணசேகரன், லேனா தமிழ்வாணன், அசோகன், பதிப்பாளர் ரவி தமிழ்வாணன், சந்தியா நடராஜன், எழுத்தாளர்கள் பிரபஞ்சன், சாருநிவேதிதா, பாலகுமாரன், எஸ்.ராமகிருஷ்ணன், வண்ணதாசன், சி.மோகன், பெருமாள் முருகன், யூமா வாசுகி, சு.வெங்கடேசன், பாஸ்கர் சக்தி, சந்திரா, சுகிர்தராணி, திரைப்பட இயக்குநர்கள் வெற்றிமாறன், கவிதாபாரதி ஓவியர்கள் வீர.சந்தானம், மணியன் செல்வன்  என அரங்கமே பிரபலங்களால் நிரம்பிக் கிடந்தது. 

விகடன் நம்பிக்கை விருதுகள்

விகடன் நம்பிக்கை விருதுகள்

விகடன் நம்பிக்கை விருதுகள்

‘’சினிமாவுக்கு நடக்கும் விழாக்களில் மட்டுமே இந்த பிரமாண்டத்தைப் பார்க்க முடியும். எழுத்தாளர்களைப் படைப்பாளிகளை கௌரவிக்கும் இந்தப் பெருமை விகடனுக்கு மட்டுமே உண்டு’’ என்றார் பிரகாஷ் ராஜ். அது உண்மைதான் என்றனர் பலரும்.
வெவ்வேறு மீடியாக்களைச் சேர்ந்த பலரும் வந்து விகடனை வாழ்த்தியதும் விகடன் விருதுகளை வழங்கிச் சிறப்பித்ததும் நெகிழ்வான தருணங்கள்.

கவிஞர் மனுஷ்ய புத்திரன் பேசும்போது, ‘’ஜெய்ப்பூரில் ஆண்டுதோறும் எழுத்தாளர்களுக்காக நடத்தப்படும் விழா போல விகடன் விழா எடுக்க வேண்டும். விகடனால் மட்டுமே அது முடியும்’’ என்றார்.

மகத்தான தமிழர்கள்... மகுடம் சூடும் விகடன் மேடை!

இந்த வாக்கியத்தில் இரண்டு பொருள்கள் உண்டு. மகத்தான தமிழர்களுக்கு விகடன் மகுடம் சூட்டியது என்பது ஒரு பொருள். மகத்தான தமிழர்களால் விகடன் மகுடம் சூடிக்கொண்டது என்பது இன்னொரு பொருள். இரண்டுமே சிறப்புதான்! இரண்டுமே உண்மைதான்!

இந்த பெருமைமிகு நிகழ்வு வரும் ஞாயிறு மதியம் 2.30 மணிக்கு சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகிறது.

- தமிழ்மகன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!