வெளியிடப்பட்ட நேரம்: 16:22 (20/04/2017)

கடைசி தொடர்பு:16:22 (20/04/2017)

'ஒதுங்கித்தான் இருக்கிறார் தினகரன்...விலக மாட்டார்!' - ரித்தீஷின் புது குண்டு

கட்சிப்பணிகளிலிருந்து டி.டி.வி.தினகரன் ஒதுங்கித்தான் இருக்கிறார். கட்சிப் பதவியிலிருந்து சசிகலாவும், டி.டி.வி.தினகரனும் விலக மாட்டார்கள் என்று நடிகர் ரித்தீஷ் தெரிவித்தார். 

நடிகர் ரித்தீஷ்டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்களில் ஒருவர் முன்னாள் எம்பி. நடிகர் ரித்தீஷ். இவர், இன்று டி.டி.வி.தினகரனைச் சந்தித்து பேசினார். அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம். 

டி.டி.வி.தினகரனிடம் என்ன பேசினீர்கள்?

இன்றைய அரசியல் சூழ்நிலையைக் குறித்து டி.டி.வி.தினகரனிடம் பேசினேன். சாதாரண கவுன்சிலர்கூட பதவியிலிருந்து விலக ஆயிரம் தடவை யோசிப்பார்கள். ஆனால், டி.டி.வி.தினகரன், கட்சி பிளவு ஏற்படக்கூடாது என்று கருதி தானே முன்வந்து ஒதுங்கிவிட்டதாகச் சொல்லியிருக்கிறார். இந்த மனம் வேறுயாருக்கும் வராது. டி.டி.வி.தினகரன், கட்சிப்பணிகளிலிருந்துதான் ஒதுங்கி இருக்கிறார். ஆனால், அவர் வகித்துவரும் துணைப் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து விலகவில்லை. அதுபோல சசிகலாவும் கட்சியின் பொதுச் செயலாளராகவே இருக்கிறார். 
 
 அ.தி.மு.க.வின் இரண்டு அணிகள் இணையுமா?

அதற்கான வாய்ப்புகள் குறைவு. ஏனெனில் இரண்டு அணிகளைச் சேர்ந்தவர்கள் முதலில் பேச்சுவார்த்தை நடத்தட்டும். அதன்பிறகு வரும் பிரச்னைகளுக்கு அவர்கள் தீர்வு கண்டபிறகே அணிகள் இணையும். ஆனால், இருஅணிகள் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதில் சிக்கல்கள் உள்ளன. 

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி கவிழுமா?

"தற்போது நடந்துவரும் ஆட்சியை கவிழ நாங்கள் விடமாட்டோம். ஏனெனில் சசிகலா, டி.டி.வி.தினகரனுக்குப் பின்னால்தான் கட்சியினர் உள்ளனர். அவர்களின் ஆதரவு இருக்கும்வரை எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி கவிழாது. என்னைப் பொறுத்தவரை நான் என்றுமே சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்தான். " என்றார்

டி.டி.வி.தினகரன்

அ.தி.மு.க.வில் நிலவும் அரசியல் சூழ்நிலை குறித்து டி.டி.வி.தினகரன், அவரது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திவருகிறார். அதில், அடுத்தக்கட்ட முடிவு குறித்து ஆலோசனை நடந்துவருகிறது. இந்தச் சூழ்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் அணியில் உள்ள கே.பி.முனுசாமி, சசிகலா அணியிலிருந்தவர்களைக் கடுமையாக விமர்சித்துள்ளார். அதில், 'தேர்தல் ஆணையத்திடம் சசிகலாவை பொதுச் செயலாளராக ஏற்றுக் கொள்கிறோம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். அதை திரும்ப பெற வேண்டும். அடுத்து தினகரனை வெளியேற்றப்பட்டதன் பின்னணியில் நடராஜன் இருக்கிறார். எங்களுக்கு முதல் அமைச்சர், பொதுச் செயலாளர் பதவி வேண்டாம். தேவையில்லாத கருத்துகளைக் கூறி பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டை போடுகின்றனர் அமைச்சர்கள். மக்கள் தலைவராக ஓ.பன்னீர்செல்வம் உள்ளார். இப்போது, தேர்தல் நடந்தால்கூட ஓ.பன்னீர்செல்வம்தான் முதல்வர். குறிப்பாக சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த 30 பேரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும். ஜெயலலிதா மரணத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் ஆகிய  இரண்டு கோரிக்கைளை நிறைவேற்றினால் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தப்படும்' என்று முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தடாலடியாக அறிவித்துள்ளார். இந்த கோரிக்கைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பேச்சுவார்த்தைக்கு முயற்சி எடுத்த அமைச்சர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பது தெரியவில்லை. இது எல்லாம் நடந்த பிறகுதான் அ.தி.மு.க.வில் பிரிந்த இரண்டு அணிகளும் ஒன்றுசேரும் சூழ்நிலை ஏற்படலாம். இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் அணிக்கும், அவருடன் பேச்சுவார்த்தை நடத்த முயற்சித்த அமைச்சர்களுக்கும் இடையே நிலவும் கருத்துவேறுபாடுகள், நிச்சயம் தங்களுக்கு சாதகமாக அமையும் என்று கருதுகின்றனர் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள். 

- எஸ்.மகேஷ்