வெளியிடப்பட்ட நேரம்: 16:56 (20/04/2017)

கடைசி தொடர்பு:16:56 (20/04/2017)

‘‘ஏன் டாஸ்மாக்குக்கு எதிராக போராடுகிறோம் தெரியுமா’’ - தமிழக பெண்கள் சார்பில் ஒரு மடல்!

பெண்கள் போராட்டம்

டாஸ்மாக்... இந்த வார்த்தையக் கேக்கும்போதே எங்க மனசுல வெஷம் பாய்ச்சின மாதிரி இருக்கு. இது எத்தனை பொண்ணுகள விதவையா, வாழாவெட்டியா ஆக்கி வீதியில வீசியிருக்கு தெரியுமா? புருஷன் குடிச்சிட்டு வர்ற வீட்டுல அவனுக்கு வாக்கப்பட்ட பெண்டாட்டியும், அவனை நம்பிப் பொறந்த புள்ளையும் படற வேதனை எவ்வளவு கொடூரமானது தெரியுமா?இப்போ இத்தனை பொம்பளைங்க தமிழ்நாட்டுல வீதியில இறங்கி போராடுறோமே ஏன் தெரியுமா..? 

புருஷன் ஒவ்வொரு நாளும் வேலை முடிஞ்சி வீட்டுக்கு வரும்போதே குடிச்சிட்டுத்தான் வருவான்னு தெரிஞ்ச பொம்பள மனசு படுற பாடு, சென்மச் சாபம். அவன் வீதியில ஆடை வெலகிக் கெடக்குற கோலத்த, பார்த்தவங்க வீட்டுல வந்து பகடியா சொல்லிட்டுப் போக, ஓடிப்போயி அவனத் தோள் சொமையாத் தூக்கியாந்து வீட்டுக்குள்ள போட்டு, சாப்பிட்டானோ இல்லையோனு வயித்துக்கு ஆகாரம் வெச்சு, அவன் போதையில ஒறங்கிப்போக, பாவி மகளுக்கு தூக்கம் ஒரு கேடா? பாவம் கொட்டக் கொட்டக் முழிச்சிருப்பா. சில பேருக்கு போதையில இருக்கும்போது பொண்டாட்டிய அடிக்கிறது வழக்கமாகிச்போச்சு. அவன் கண்ணுல பட்டா அடிப்பான், உதைப்பான், 'இன்னும் குடிக்கக் காசு கொடுடீ'ன்னு தலைமுடியப் புடிப்பான். அதவிட, கண்ணுமண்னு தெரியாம அவன் ஏசுற வார்த்தைங்க பெருசா வலிக்கும் அவளுக்கு. அதனாலயே புருஷனுக்கு போதை குறையுற வரைக்கும் அவன் கண்ணுல பட்டுடக் கூடாதுன்னு தன் குழந்தைய முந்தானையில ஒளிச்சிக்கிட்டு ஏதோ ஒரு வீட்டுத் திண்ணையில கெடக்குற அவளோட அவஸ்தைய என்னன்னு சொல்ல? 

பாவி மக அவன கட்டினத தவிர வேறு எந்தப் பாவத்தையும் பண்ணலையே? சோம்பேறியா, ஒதவாக்கரையா அவனுக்குக் கட்டுனவன் வாய்ச்சிருந்தா, விதிச்சது அதுதான்னு விடலாம். ஆனா, ஓடா ஒழைக்குற மனுசன், அப்படி ஒழச்ச காசையெல்லாம் நேரா சாராயக் கடையில கொண்டு கொடுத்து கரியாக்குற கொடுமைய, அவ மனசு எப்படித்தான் ஏத்துக்கும்? அஞ்சையும் பத்தையும் அவ யோசிச்சு யோசிச்சு செலவளிச்சு அஞ்சறப் பெட்டியில சேர்த்துவெக்க, அவனோ கொல்லுற குடிக்க நோகாம காச நீட்டிட்டு வர்ற பாதகத்தை பார்த்துப் பார்த்துப் பழகித்தான் போயிட்டா போக்கத்தவ. ஆனாலும், புள்ளைங்க பசியாத்த முடியாத வறுமையிலயும் புருஷன் குடியை விடாமக் கெடக்குறதைக் காணச் சகிக்காம, அந்த கொடூரத்தை வாழச் சகிக்காம ஊருக்கெணரு, ஒரு மொழம் கயிறுனு உசுரை மாய்ச்சுக்கிட்ட பொம்பளைக கதையையெல்லாம் கேட்டிருக்கோம்தானே? குடி, குடிக்கிறவன் ஒடம்ப மட்டுமா கெடுக்குது? அவன் வீட்டுப் பொம்பளைக மானம், நிம்மதி, சந்தோஷம், உயிருனு அம்புட்டையும் பறிச்சுப் போடுது. அவங்க செத்துச் செத்துப் பொழைக்கிறாங்க, இல்ல செத்தே போறாங்க. 

கட்டிக்க நல்ல துணி இல்ல. நல்ல நாளு கிழமையில மத்த பொம்பளைங்களப் போல வீதியிட நடமாட முடியல. நல்லது கெட்டதுக்கு பக்கத்துல வாங்கின கடன அடைக்க முடியல. இப்படி திரும்பின பக்கம் எல்லாம் ஏச்சும், பேச்சும் அவள குனிக் குறுக வெச்சு, குமுறி அழகுறோமே?. இந்தப் பொழப்புக்கு தான் பொம்பளையா பொறந்தமான்னு ஒவ்வொரு நிமிஷமும் உசுற உலுக்குதே. எங்க வலி யாருக்கும் புரியலையா? 

ஈரக்கொல செத்து, வயிறெல்லாம் புண்ணாகி, வாழ நாதியத்து அவன் படுக்கையில கெடக்குறப்போ தாலிய காப்பாத்த நாங்க படுற பாடு சொல்லிமாளுமா? பொம்பள உடம்பையும், மனசையும் கல்லா இறுக வெச்ச அவன காப்பாத்த எத்தனையோ இடத்துல கையேந்துறோம். ஆஸ்பத்திரி ஆஸ்பத்திரியா அலைஞ்சு தாலிய அடகு வச்சி வீட்டுக்கு கொண்டாறோம். எந்திரிச்சி நடக்க உடம்புல தெம்பு வந்ததும் நேரா ‘டாஸ்மாக்’ கடைக்குத் தானே போயித் தொலைக்கிறான். நாங்க பட்ட பாடெல்லாம் வீணாப் போகுதே! எம் புள்ளையும் குட்டியும் நடுத்தெருவுல நிக்குதே. எங்க கண்ணீர தொடக்கணும்னு யாருக்கும் தோணலையா? 

பொம்பளையா பொறந்துட்ட பச்ச மண்ணு கூட இங்க வாழ முடியலையே. குடிச்சி தொலைக்கிறவன் தன்னோட வெறிய தீத்துக்க வீட்ட உடைச்சு சின்னப் புள்ளைங்கள சிதைச்சு சாவடிச்சி வேலியில எறியுரானே, சொல்லாத உறுப்புல தீ வைச்சுக் கொல்லுறானே. அந்த புள்ளைங்க என்ன பாவம் செஞ்சிச்சு. அந்த நேரத்தில எப்படித் துடிச்சிருக்கும், என்ன நெனச்சி கதறியிருக்கும்.  பொம்பளையா பொறந்தது அது செஞ்ச குத்தமா? இப்படி எத்தனை குழந்தைங்க, பொண்ணுங்க இந்த மண்ண விட்டுப்போச்சோ...அந்த கதறல் எதுவும் உங்க காதில் விழலையா? 

எல்லாரும் ஓட்டுப் போட்டு உக்கார வெச்ச அரசாங்கம் தானே டாஸ்மாக்   கடைய நடத்துது. படிப்படியா கடைகள மூடுறேன்னு கண்ணாமூச்சி காட்டுது. குடியிருக்குற வீட்டுக்குப் பக்கத்தில கடைய தெறந்தா பொம்பளைங்களும் குழந்தைங்களும் தெருவுல நடக்க முடியுமா? குடிக்கிறவன் வீட்டுல உலை கொதிக்குமா. குடிச்சிக் குடிச்சே எத்தனை குடும்பம் நாதியத்துப் போகுமோ? எத்தன குழந்தைங்க நடுத்தெருவுக்கு வருமோ? 

எங்க குழந்தைங்க படிக்க வழியில்லாம வேலைக்கு போகுது. சின்ன வயசுலயே அப்பனப் பார்த்து அதுவும் குடியில அழியுது. போதையில சிக்கி அடுத்த தலைமுறையும் அழிஞ்சி போறது அரசாங்கத்துக்கு தெரியாதா? இந்தப் பணத்துலதான் எங்கள வாழ வைக்கிறதா அரசாங்கம் சொல்லுது. இப்படியொரு வாழ்க்க எங்களுக்கு எதுக்கு? பொறந்த பொறப்புக்கும், பெத்துப் போட்ட பிள்ளைக்குன்னும் அல்லாடுற பொழப்புன்னு கெடந்து சாவுறோம். 

தீபாவளி, பொங்கல், தேர்தலுன்னா கொட்டுற டாஸ்மாக்கு வருமானத்தை செய்தியாப் போடுறாங்க. டிவி பொட்டியில இருந்து ஆடு, மாடு வரை அரசாங்கம் கொடுக்குற இலவசமெல்லாம் இந்த வருமானத்துலதான்னு சொல்லிக்குறாங்க. இந்தக் குடிக்கு புருஷனை சாகக் கொடுத்த பொம்பளைங்க, தகப்பனைத் தூக்கிக்கொடுத்த புள்ளைங்க, புள்ளையை தூக்கிப்போட்ட பெத்தவங்கனு... இவங்களுக்கு எல்லாம் என்ன நியாயம் சொல்லும் இந்த அரசாங்கம்? அப்ப நீங்க போடுற திட்டங்க, அள்ளிக் கொடுக்குற இலவசங்க எல்லாத்துக்கும் மூலதனம் பொம்பளைங்க கண்ணீருதானா? 

எல்லாத்தையும் சகிச்சிக்க நாங்க என்ன ஏமாளிப் பொம்பளைங்களா? அரசாங்கம் எங்களுக்கு வாழ்க்க தர வேணாம். எங்கள வாழ விட்டாப் போதும். இலவசமா எதுவும் தர வேணாம். அரைவயித்துக் கஞ்சியாவது நிம்மதியா குடிக்கனும். கசிங்கின சேலையக்கூட கவுரவமாக கட்டிக்கிட்டு நடக்கணும்.  இவன் பொண்டாட்டின்னு பெருமையா சொல்லிக்கனும். எம் புருஷன் குடியில செத்து அழியாமா என் குடும்பம் ஒவ்வொரு கவள சோத்தையும் சந்தோஷமா விழுங்கணும். 

எங்க வாழ்க்கைய அரசாங்கம் காப்பாத்தும்னு நம்பி இத்தன நாளா ஏமாந்தது போதும். இனியும் பார்த்துகிட்டு சும்மா இருக்க முடியாது. திருப்பூருல ஈஸ்வரி கன்னத்துல அடிவாங்கினப்போ அத்தனை பொம்பளைக்கும் அடி வயிறு எறிஞ்சது. இப்போ சாமளாபுரம் டாஸ்மாக் கடைய மூடிட்டதா கேள்விப்பட்டதும் அடி மனசு குளிறுது. குடிச்சிட்டு வர்ற கணவன் கிட்ட அடி வாங்கி தினம் தினம் சாவறத விட ரோட்டுல இறங்கி போராடி டாஸ்மாக்க மூடுறதுனு முடிவெடுத்துட்டோம். வறுமையிலும் கொடுமையிலும் இறுகின மனசுக்கு போராட்ட வலி ஒண்ணும் புதுசில்ல. பொம்பள வீதியில இறங்கின அப்புறம் வெற்றிய பாக்காம வீடு திரும்பினதில்லை. புலிய முறத்தால அடிச்ச தமிழச்சிங்க  இப்போ டாஸ்மாக்க இழுத்து மூடுறதுக்காகவும் ஓங்கி அடிப்போங்க... உயிரையும் கொடுப்போங்க. எங்க பிள்ளைங்களாவது குடியில அழியாம கவுரவமா வாழட்டும். 

யாழ் ஸ்ரீதேவி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்