Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

’எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்குப்பின் மாற்று நான்தான்!’ - மாதவன் தீபா ‘அடடே’ ஆவேசம்

மாதவன்

மிழகத்தில் வேறு எந்த தலைவரின் சமாதியும் இத்தனை பரபரப்புகளுக்கு அடித்தளமிட்டிருக்காது. ஜெயலலிதாவின் சமாதிக்கு பிரபலங்கள் யாராவது செல்கிறார்கள் என்றால் அரசியல் பரபரப்பு எழுந்துவிடுகிறது அந்த நிமிடம் முதல். ஒ.பி.எஸ் துவங்கிவைத்த இந்த பரபரப்பு இப்போது மாதவன் வரை வந்திருப்பது, தமிழகத்தில் இனி என்னவெல்லாம் நடக்குமோ என்ற பீதியை ஒவ்வொருவர் மனதிலும் எழுப்பியிருக்கிறது. ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் கணவரான மாதவன் இன்று ஜெயலலிதாவின் சமாதியில் போய் அமர்ந்துவிட்டு 'எம்.ஜி.ஆர் ஜெயலலிதா திமுக' என்ற புதிய கட்சியைத் துவக்கியிருக்கிறார்.

ஜெயலலிதாவின் மரணத்துக்குப்பின் சசிகலாவை எதிர்த்து ஓ.பி.எஸ் க்கு முன்னதாக போர்க்கொடி உயர்த்தியவர் தீபா. அதோடு நிறுத்தாமல் பேரவை ஒன்றையும் துவக்கி பரபரப்பு கிளப்பினார். பேரவையைத் துவக்கிய ஆரம்பநாட்களில் சுமுகமாக இருந்த கணவன்- மனைவி உறவு அடுத்துவந்த நாட்களில்  அவ்வளவாக சரியில்லை. இன்று ஒரே வீட்டில் இரண்டு அமைப்பைத் துவக்கும் அளவுக்கு இருவரது நட்பிலும் விரிசல் விழுந்துவிட்டது. சில நாட்களுக்கு முன் தீபாவின் தி.நகர் வீட்டில் இருவரது ஆதரவாளர்களும் மோதிக்கொண்டதாக சொல்லப்பட்ட நிலையில் இன்று அதிரடியாக அம்மா சமாதிக்குச் சென்று கட்சியைத் துவக்கியிருக்கிறார் மாதவன்.

புதிய கட்சி, மனைவியுடனான மோதல், கட்சியின் எதிர்காலம்(?) குறித்து மாதவனிடம் பேசினோம்.

பேரவையில் இயங்கிவரும்போது திடீரென புதிய கட்சித்துவக்கம் ஏன்?

மாதவன்தீடீர் என துவக்கவில்லை. ஏற்கெனவே திட்டமிட்டதுதான்.  தமிழகத்தில் இப்போது நடக்கும் அசாதாரண சூழலால் மக்கள் ஒன்றும் புரியாமல் விழித்துக்கொண்டிருக்கிறார்கள். அதிமுக தொண்டர்கள் யாரை ஆதரிப்பது என்ற குழப்பத்தில் இருப்பதால் அவர்களுக்கு ஒரு தெளிவான ஓர் அரசியல் பார்வையை ஏற்படுத்தவே இந்த கட்சியைத்துவக்கியிருக்கிறேன்.

பேரவையின் வளர்ச்சி இனி எப்படியிருக்கும்?

இதை அவரிடம்தான் கேட்கவேண்டும். என் அரசியல் கட்சிபற்றி கேளுங்கள் சொல்கிறேன். தீபா மேடத்துடன் ( வார்த்தைக்கு வார்த்தை மனைவி தீபாவை மேடம் என்றே அழைக்கிறார்). எனக்கு எந்த முரணும் இல்லை. பேரவையில் நான் எந்தப்பொறுப்பிலும் இதுவரை இல்லை. ஒரு கணவராக என்னிடம் யோசனை கேட்டால் சொல்வேன். இதைத்தவிர அதற்கும் எனக்கும் துளியும் சம்பந்தமில்லை.   
திறமைசாலி என்றால் இத்தனை குளறுபடிகள் ஏன் பேரவையில்?

தீபா திறமைசாலி என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவர் நம்புகிற சிலர் அப்படியில்லை. அவருடைய சிறுவயது நண்பர்களான அவர்கள் மீது அவர் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறார். அந்த நம்பிக்கையை அவர்கள் துஷ்பிரயோகம் செய்கிறார்கள். பேரவையில் நியமனங்கள் போன்ற விஷயங்களில் அவருக்கு தெரியாமலேயே முடிவுகள் எடுக்கப்படுகின்றன. அவர் கவனத்துக்கு அவை வராததால் தீபாவுக்கு கெட்டபெயர் ஏற்படுகிறது. அதுதான் அவரது ஒரே குறை. இதனால்தான் பேரவையில் இத்தனை குளறுபடிகள் ஏற்பட்டன. கணவர் என்ற முறையில் இதனை பலமுறை எடுத்துச்சொல்லியும் அவர் கேட்கவில்லை. கட்டிக்கொடுக்கிற சோறும் சொல்லிக்கொடுக்கிற சொல்லும் எத்தனை நாளுக்கு வரும். அதனால் பேரவையிலிருந்து முழுமையாக விலகிவிட்டேன். மற்றபடி தனிப்பட்ட முறையில் எனக்கும் என் மனைவிக்கும் எந்த கருத்துவேறுபாடுகளும் இல்லை. பேரவையில் அந்தக் களைகளை பிடுங்கவில்லையென்றால் பேரவை வளராது.

பேரவையில் முக்கியத்துவம் அளிக்காததால்தான் கட்சித் துவங்கி தீபாவுக்கு நெருக்கடி தருகிறீர்களா...

சத்தியமாக இல்லை. இந்தக் கட்சியே பேரவையின் வளர்ச்சிக்குத்தான். தீபாவின் கணவர் என்பதால்தான் இன்று நான் தொண்டர்களுக்கு அறிமுகமாகியிருக்கிறேன். அதனால் அவருக்கு எதிராக நான் எப்போதும் செயல்படமாட்டேன்.  தீபா ஒரு திறமைசாலி. அரசியலில் அனுபவமில்லை என்றாலும் அவரது அத்தை போல புத்திசாலித்தனமான முடிவுகளை எடுப்பவர். பேரவையில் சில விஷயங்களில் நடந்த குளறுபடிகளால் அவருக்கு கொஞ்சம் கெட்டப்பெயர் ஏற்பட்டுள்ளது. அதை துடைப்பதற்காகவே இந்தக் கட்சி. 

புதிய கட்சியில் உங்கள் மனைவியின் பங்களிப்பு என்னவாக இருக்கும்?

இதுவரை திட்டமிடவில்லை. என் கட்சியை நானே நேரடிக்கண்காணிப்பில்  வளர்ப்பேன். ஒருவேளை தீபா அவரே விருப்பப்பட்டு கட்சிக்கு வந்தால், வரவேற்பேன். அவர் கேட்டால் கட்சியையேக் கூட அவரிடம் ஒப்படைத்துவிட்டு (?!) நான் அவர் தலைமையை ஏற்று நடப்பேன். 

மாதவன்

பேரவையைப் போன்று புதிய கட்சியிலும் முந்தைய குழப்பங்கள் வராது என்பது என்ன நிச்சயம்...?

நிச்சயம் வராது. நான் தீபா போல் மற்றவர்கள் பேச்சைக் கேட்கிற ஆளில்லை. பேரவையில் செயல்பட்ட அனுபவத்தினால் எந்த எந்த வழிகளில் பிரச்னைகள் வரும், அதை எப்படி தீர்ப்பதெனவும் நல்ல அனுபவம் உள்ளது. அதனால் பிரச்னைகள் எழாது. 

அதிமுகவே பிளவுபட்டு இத்தனை களேபரங்கள் நடக்கும் சூழலில் நீங்கள் கட்சித்துவங்குவது என்ன மாற்றத்தை ஏற்படுத்தும்?

நான் ஜெயலலிதாவின் தீவிரத் தொண்டன். அரசியலில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இவர்கள்தான் சுயநலமின்றி மக்களுக்காக பாடுபட்டவர்கள். அவர்களுக்குப்பின் வந்தவர்கள் ஊழல் செய்து தாங்கள் சம்பாதித்த பணத்தை பாதுகாக்கவே அரசியலில் நீடிக்கின்றனர். எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் பாடுபட்டு உருவாக்கி இத்தனை கோடி தொண்டர்கள் பலத்துடன் வைத்துச்சென்ற கட்சியின் நிலை இன்று ஊரே சிரிக்கும் அளவுக்கு இப்படி சுயநலவாதிகளால் பாழ்பட்டுவருவதை காண சகிக்கமுடியாமல்தான் புதிய கட்சித்துவங்கும் நிர்ப்பந்தம் எனக்கு ஏற்பட்டது. ஜெயலலிதாவின் மரணத்துக்குப்பிறகு தமிழக அரசு  மக்களின் நலனுக்காக செயல்படாமல் முடங்கிக்கிடக்கிறது. அதை தட்டிக்கேட்பதற்கான தைரியம் எந்தக் கட்சிக்கும் இன்று இல்லை. அந்த வெற்றிடத்தை எங்கள் கட்சி  இட்டு நிரப்பும். அரசியலில்  எம்.ஜி.ஆர் ஜெயலலிதா உருவாக்கிய அதே நேர்மை கண்ணியத்துடன் (?) என்னுடைய கட்சி இயங்கும். அதனால்தான் அவர்களின் பெயரில் கட்சியைத்துவக்கி உள்ளேன். தொண்டர்கள் ஜெயலலிதாவின் உண்மையான வாரிசு யார் என அடையாளம் கண்டு எங்களை ஆதரிப்பார்கள்.  
 

ஜெயலலிதா

எந்த அனுபவமுமில்லாமல் கட்சித் துவங்குவது உங்களுக்கே நியாயமாகப்படுகிறதா...?

பேரவையின் பொறுப்பாளர் தீபா என்றாலும் அத்தனை தொண்டர்களையும் சந்தித்தது நான்தான். அப்போது தொண்டர்கள் ஒவ்வொருவரின் மனநிலையையும் நான் நேரடியாக அறிந்தேன். இரவு 1 மணிக்கும் பஸ் பிடித்து தீபாவைப் பார்க்க தொண்டர்கள் வீட்டுக்கு வருவார்கள். அந்த நேரத்திலும் அவர்களை உபசரித்து பேசியது நான்தான். அதனால் தொண்டர்களை எப்படி வழிநடத்துவது அவர்களின் பிரச்னைகளுக்கு எப்படி குரல் கொடுப்பது என்பது எனக்கு நன்கு தெரியும். 

உங்களையும் தீபாவையும் ஜெயலலிதா சந்திக்கக்கூட மறுத்ததாக சொல்லப்பட்ட நிலையில் அவரது வாரிசுகளாக எப்படி உங்களை தொண்டர்களிடம் கொண்டு செல்வீர்கள்...

என் மீதும் தீபா மீதும் ஜெயலலிதா கொண்டிருந்த அன்பு திட்டமிட்டு மறைக்கப்பட்டுவிட்டது. பொதுக்கூட்டங்களில் குழந்தைகளுக்கு பெரும்பாலும் தீபா என்றும் விஜயலட்சுமி என தன் அண்ணியின் பெயரையும்தான் அவர் சூட்டியிருக்கிறார் என்பதை பேரவைக்காக தமிழகம் முழுவதும் தொண்டர்களை சந்தித்தபோது அறிந்தேன். அண்ணன் குடும்பத்தினர் மீது அவர் வைத்திருந்த பாசத்திற்கு இது ஒன்றே சான்று. 

அவரைக் காண நாங்கள் பலமுறை முயற்சித்த தகவலை அவரின் கவனத்துக்கே கொண்டுசெல்லமாட்டார்கள்.  செய்தித்தாள்களில் அது செய்தியாக வந்தாலும் அதை மறைத்தே அவரிடம் காட்டுவார்கள். இப்படி திட்டமிட்டு எங்கள் உறவை அவருடன் இருந்தவர்கள் துண்டித்தார்கள். மற்றபடி ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் இவர்களின் மாற்றாக நாங்கள்தான் இனி இருப்போம்.  

அதிமுகவின் இரு அணிகளும் இணையும் சூழல் ஏற்பட்டுள்ளதே, உங்கள் கட்சிக்கான அவசியம் இல்லையே இப்போது?

பிரிந்தால் தானே இணைவதற்கு?...அதிமுக இரு அணிகளாக உடைந்தது என்பதெல்லாம் ஒரு நாடகம். சசிகலாவின் தலைமையை எதிர்த்ததோடு புதிய அமைப்பையும் தீபா துவக்கியதால் அந்த எழுச்சியை கட்டுப்படுத்துவதற்காக சசிகலா, ஓ.பி.எஸ் இருவரும் திட்டமிட்டு அரங்கேற்றிய நாடகம் இது. இப்போது நடப்பது நாடகத்தின் அடுத்த காட்சி. 

மாதவன்

கட்சிக்கான கொள்கைகள், கூட்டணிக் குறித்தெல்லாம் முடிவெடுத்துவிட்டீர்களா?

அதுபற்றி எந்த முடிவும் எடுக்கவில்லை. மக்களே யாரை நம்புவது என்ற குழப்பத்தில் இருக்கும்போது நாங்கள் அந்த முடிவை எடுக்க இன்னும் காலம் உள்ளது.

அரசியல், உங்களையும் தீபாவையும் பிரித்துவிட்ட வருத்தமிருக்கிறதா?

யார் சொன்னது நாங்கள் பிரிந்தோம் என்று?... இப்போதும் ஒரே வீட்டில்தான் இருக்கிறோம். கட்சிக்கும் பேரவைக்கும் எந்த சம்பந்தமுமில்லை. தீபாவுக்கு எதிரானதுமல்ல! நாங்கள் ஒற்றுமையாக இருந்தால் தங்களால் சம்பாதிக்கமுடியாது என்பதால் பேரவை நிர்வாகிகள் சிலரே எனக்கும் என் மனைவிக்கும் பிரச்னை இருப்பதுபோல் செய்தி பரப்புகின்றனர். தனிப்பட்ட குடும்பவிவகாரங்களை பொதுவெளியில் பேசும்  இவர்களைப்போன்றவர்களை பேரவையில் வைத்திருப்பது ஆபத்து என்பதை தீபா உணரும் காலம் வெகுசீக்கிரம் வரும். 

காலம் முழுவதையும் எந்தக் கட்சியை எதிர்த்து எம்.ஜி.ஆரும் ஜெயலிதாவும் அரசியல் செய்தார்களோ அந்தக்கட்சியுடனேயே அவர்கள் இருவரையும் இணைத்துவைத்த மாதவனைப் பாராட்டத்தான் வேண்டும்!?!

படங்கள்: ஜெரோம்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement