வெளியிடப்பட்ட நேரம்: 16:31 (21/04/2017)

கடைசி தொடர்பு:16:31 (21/04/2017)

முழு அடைப்புக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆதரவு!

தமிழகத்தில் வரும் 25ம் தேதி அனைத்துக்கட்சி சார்பில் நடைபெற உள்ள முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்ரமராஜா, அன்றைய தினம் கடைகள் அடைக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.


வறட்சி நிவாரணம் வழங்குதல், வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லியில் பல்வேறு நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், மத்திய அமைச்சரின் வாக்குறுதியை ஏற்று போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளதோடு, இரண்டு நாள்களாக மெளனமாக இருந்து வருகின்றனர். இதற்கிடையில் விவசாயிகள் பிரச்னை தொடர்பாக தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ், இடது சாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன.

அந்தக் கூட்டத்தில் ஏப்ரல் 25-ம் தேதி மத்திய அரசைக் கண்டித்தும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், போராட்டத்தில் பங்கேற்பது குறித்து பேசிய தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்புத் தலைவர் விக்ரமராஜா, 'ஏப்ரல் 25-ம் தேதி நடைபெறும் கடையடைப்பு போராட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு பங்கேற்கும். விவசாயிகளுக்கு ஆதரவாக அனைத்து மாவட்டங்களிலும் கடைகள் அடைக்கப்படும். கோயம்பேடு மார்கெட், பூ மார்கெட் உள்ளிட்ட இடங்களில் கடைகள் அடைக்கப்படும்' என்று தெரிவித்தார்.