’நீங்கள்தான் நிஜ ஹீரோ!’ அற்புதம்மாளிடம் உருகிய வெற்றிமாறன் #AnandaVikatanNambikkaiAwards | "You are the real hero" Vetrimaaran praises Arputhammal #AnandaVikatanNambikkaiAwards

வெளியிடப்பட்ட நேரம்: 16:42 (22/04/2017)

கடைசி தொடர்பு:16:41 (22/04/2017)

’நீங்கள்தான் நிஜ ஹீரோ!’ அற்புதம்மாளிடம் உருகிய வெற்றிமாறன் #AnandaVikatanNambikkaiAwards

வெற்றிமாறன்

தோல்விகளுக்குப் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், ஒவ்வொரு வெற்றிக்குப் பின்னும் ஒரு தாய் இருப்பார். அம்மா என்றால் அன்பு மட்டுமல்ல... ஆசிரியரும்கூட. சமூகத்தில், பிள்ளைகளைச்  சிறந்த அடையாளமாக வளர்த்தெடுப்பது தாய்மையின் அறமாகும். அந்த அறத்தின் வழி நின்று மூன்று முத்தான தங்க மகன்களைப் பெற்ற சரோஜா, அற்புதம்மாள், சித்ரா ஆகிய தாய்மார்களை, தமது நம்பிக்கை விருதுகள் மேடையில் ஏற்றி அழகு பார்த்து  கௌரவித்துள்ளது 'விகடன்'.

'விகடன் நம்பிக்கை விருதுகள் 2016' விழா, நம்பிக்கை மனிதர்களால் மட்டுமல்ல, அவர்கள் குடும்பத்தினர், நண்பர்கள் சூழ் அன்புக் கூட்டங்களால் நிரம்பிவழிந்தது. அங்கு ''நான் மாற்றுத் திறனாளி அல்ல, மாற்றத்தின் அடையாளம்'' என ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பனை, 'நம்பிக்கை விருதுக்கான நட்சத்திரமாக' தொகுப்பாளர்கள் அறிவிக்க, அவர் பெயர் உச்சரித்த நொடியிலிருந்து அரங்கமே அதிரும் வகையில் கைத்தட்டல்களும், விசில் சத்தமும் பிளிறியது. எளிய உடையில், வலிமையான புன்னைகையோடு அந்த விருதை தங்கமகன் மாரியப்பன் தாயார் சரோஜா பெற்றுக்கொண்டார்.பின் மைக் பிடித்த அவர், தன் இயல்பில் பேசத் தொடங்கினார்.

''சாருங்களுக்கு வணக்கம்! மாரியப்பன் சின்ன வயசா இருக்கயிலே, அவங்கப்பா விட்டுட்டுப் போயிட்டாரு. அப்புறம், சைக்கிள்ல காய் வித்துக்கிட்டு இருந்தேன். கூலி வேலைதான். மூணு பசங்க, ஒரு பொண்ணு. ஒரு விபத்துல மாரியப்பனுக்கு கால் போச்சு. ஜன்லாஸ்பத்திரிக்குக் (ஜெனரல் ஹாஸ்பிட்டல் என்பது மருவி இப்படி ஆகிவிட்டது. இது, சேலம் வட்டார வழக்குமொழி) கூட்டிப் சரோஜாபோனோம். ஆனா, ஒண்ணும் பண்ண முடியாதுன்னுட்டாங்க. அவங்கப்பாவும் இல்லை, பையனுக்கும் இப்படி ஆச்சு. இனி எப்படி பொழைக்கிறது? பேசாம இறந்துடலாமானு அழுதேன்.  

'அழாதம்மா, நான் இருக்கேன்'னான் மாரி. சொன்னமாதிரியே சாதிச்சுக் காட்டினான்'' என்றார் கண்கள் பனிக்க. அந்தக் கண்ணீர்த் துளிகளின் பெருமிதம் அரங்கைக் குளிரச்செய்தது. தாய் சரோஜா கரங்களில் விருதை அளித்த மாஃபா பாண்டியராஜன், ''எனக்குத் தெரிந்து, அம்மா ஜெயலலிதா எழுதிய கடைசி ஸ்டேட்மென்ட் இவருக்காகத்தான் இருக்கும். 'விதியை மாற்றி எழுதிய உன்னதமான தாவல்' என்று எழுதினார். மாரியப்பனைவிட நீங்க சாதிச்சது பெரிய விஷயம். முப்பது ரூபா சம்பாதிச்சு வந்து, மாரியப்பன் கனவுக்கு வடிவம் தந்தவர் நீங்கள்தான். உண்மையில் விருது உங்களுக்கும் தரவேண்டும்'' என மாரியப்பன் தாயாரை வாழ்த்த, அதை ஆமோதிக்கும் வகையில் அரங்கமே கைதட்டியது.

மாரியப்பனுக்கான தனது போராட்டப் பயணத்தினூடாக, பொது வெளியில் அதிகம் அறியப்படாத சேலம் வட்டார மொழியையும் மேடையேற்றி அழகு பார்த்தார் சரோஜா.இவரின் போராட்டமும் அப்படித்தான். 'தன் மகன்மீது சுமத்தப்பட்ட பழி உண்மையில்லை. அவரைச் சிறையிலிருந்து மீட்டே தீருவேன்' என தனது மகன் பேரறிவாளனுக்காக 26 ஆண்டுகளாகப் போராடிக்கொண்டிருக்கிறார். பல்வேறு நெருக்கடிகள், தோல்விகள் என எது வந்தும், தமது பயணத்தின் வேகம் குறையவில்லை. ''போராட்டம் எங்கள் லட்சியமல்ல, தேவை'' எனும் 'தீண்டாத வசந்தம்' நாவலின் வரிகளைப்போல, போராட்டத்தை தம் இயல்பாகக் கொண்டிருக்கும் தாய் அற்புதம்மாள், இயக்குநர் வெற்றிமாறனுக்கு நம்பிக்கை விருதளிக்க மேடையேறினார். அவரும் மேடையேற, இருவரையும் கரவொலி எழுப்பி வரவேற்றது அரங்கம். அன்பில் அணைத்து, ''உன்னின் வெற்றியை மிகப்பெரியதாக பார்க்கிறேன்'' என வெற்றிமாறனை வாழ்த்தினார் அற்புதம்மாள்.

''என் வாழ்க்கையில் நானும் ஒருமுறை கைதாகியுள்ளேன். போலீஸ் நடந்துகொள்ளும் முறை குறித்த அனுபவம் எனக்குண்டு. எனக்கு அற்புதம்மாள் மூலம் விருது பெற்றதில் பெருமை. அது அளவில்லாத மகிழ்ச்சி. ஏனெனில், இவர் ரியல் லைஃப் ஹீரோ. மகனை மீட்க அவர்கள் செய்து வரும் போராட்டம் அளப்பரியது. அதில், அம்மா சீக்கிரம் வெற்றி பெறுவார்கள்'' என்றார் உறுதியாக. அந்த நம்பிக்கை மொழியில் உருகினார் அற்புதம்மாள். இவரைத் தெரியாத இந்த இளசுகள் இருக்கமாட்டார்கள். சர்வதேச அளவிலும்கூட இளைஞர் கூட்டத்தின் ஆதரவைப் பெற்றவர். இவரின் சுழலில் விழாத விக்கெட்களே இல்லை. ஆனால், இவரோ தமது தாயார் சித்ராவின் அன்புச் சுழலில் எப்போதும் வீழ்ந்துவிடும் விக்கெட்.மிக விரைவில் பல விக்கெட்களைச் சாய்த்து, இந்திய கிரிக்கெட்டின் நம்பிக்கை வீரராக இருக்கும், 'நம்ம சென்னை பையன்' என அன்போடு அழைக்கப்படும் அஸ்வினுக்கான விருதைப் பெற அவர் தாயார் மேடையேறினார். 

அற்புதம்மாள் வெற்றிமாறன்

சுட்டிப் பையனான அஸ்வினை ஒரு நேர்கோட்டில் பயணிக்கவைத்தது இவரின் அன்பு. அம்மாவின் அன்புக்கு மட்டுமே அடங்கிப்போவார் அஸ்வின். அந்தச் செல்ல தாய் சித்ரா, காய்க்குழந்தையாக இருக்கும் தனது பேரனான அஸ்வினின் மகனுடன் வந்து விருதை பெற்றுக்கொண்டார். அப்போது, அஸ்வின் குறித்த காணொலி ஒளிபரப்பப்பட்டபோது, ''அப்பாவைப் பாருடா'' என அவரின் பாட்டி கொஞ்சியதும், மகன் ஸ்க்ரீனைப் பார்த்ததும் 'குழந்தை கவிதை'யாக விரிந்தது.''அஸ்வினுக்கு எத்தனையோ விருதுகள் வந்திருக்கு. ஆனா, தமிழ்நாட்டிலிருந்து வரும் முதல் விருதே, 'விகடன்' விருதாக இருப்பதில் பெரு மகிழ்ச்சி'' என்றார் புன்னகையோடு.

'விகடன்' விழா மேடையேறிய, இத்தாய்மார்களின் அனுபவங்கள், அன்பில் குழைத்த அமிர்தமாய் பார்வையாளர்களை இனிக்கச் செய்தது. அவர்கள் பிள்ளைகள் மட்டுமல்ல, அவர்களைச் சிறந்த ஆளுமைகளாக வளர்த்தெடுத்த இந்தத் தாய்மார்களும் முன்மாதிரியே.

(ஆனந்தவிகடன் நம்பிக்கை விருதுகள் நிகழ்வு நாளை மதியம் 2.30-க்கு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது)

சே.த இளங்கோவன்.


டிரெண்டிங் @ விகடன்