வெளியிடப்பட்ட நேரம்: 08:34 (22/04/2017)

கடைசி தொடர்பு:08:37 (22/04/2017)

டெல்லி போலீஸ்முன் இன்று ஆஜர்.. சென்னையில் இருந்து புறப்பட்டார் டி.டி.வி. தினகரன்!

இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்காக சென்னையிலிருந்து டெல்லி புறப்பட்டார் டி.டி.வி. தினகரன். இன்று டெல்லி குற்றப்பிரிவு போலீஸ் முன் ஆஜராகிறார். 

TTV Dinakaran
 

இரட்டை இலைச் சின்னத்தை மீட்க, இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரிடம் கோடிக்கணக்கில் பணம் கொடுத்ததாக, டி.டி.வி.தினகரன் மீது டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவுசெய்தனர். இந்த வழக்கில்,  கடந்த 16-ம் தேதி டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த சுகேஷ் சந்திரசேகரை டெல்லி போலீஸார் கைதுசெய்தனர்.  அவரிடமிருந்து ஒருகோடியே 30 லட்சம் ரூபாயும், இரண்டு சொகுசு கார்கள் மற்றும் சில ஆவணங்களையும் பறிமுதல்செய்தனர்.

சுகேஷ் சந்திரசேகரிடம் நடத்திய விசாரணையில், டி.டி.வி.தினகரன் தரப்புதான் இரட்டை இலைச் சின்னத்தை மீட்க, கோடிக்கணக்கில் பணம் கொடுத்ததாகத் தெரிவித்துள்ளார். சுகேஷ் நேற்று முன்தினம் இரவு பெங்களூருக்கு அழைத்துச்செல்லப்பட்டார். அவருக்கு, பெங்களூருரில் பணம் வழங்கப்பட்டதாகக் கூறப்படுவதால், அங்கு அழைத்துச்சென்று விசாரிக்கிறார்கள். 

இதனிடையே, சென்னை வந்த டெல்லி குற்றப்பிரிவு போலீஸார், டி.டி.வி.தினகரனுக்கு நேரில் சம்மன் வழங்கினர். அதில், ஏப்ரல் 22-ம் தேதி (இன்று)  டெல்லி குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. விசாரணைக்கு ஆஜராக மூன்று நாள் அவகாசம் கேட்டிருந்தார் டி.டி.வி.தினகரன். இந்த அவகாசத்தை டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் நிராகரித்தனர். இதையடுத்து, இன்று காலை சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டார தினகரன். இன்று டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் முன் ஆஜராகிறார்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க