பொதுமக்களிடம் சிக்கிக்கொண்ட அமைச்சர் தங்கமணி! இதுதான் காரணம்

நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் ஆலம்பாளையத்தில் குடிநீருக்காக போராட்டம் நடத்திய பொதுமக்களிடம் அந்த வழியாக காரில் வந்த அமைச்சர் தங்கமணி சிக்கிக்கொண்டார். அவரை காவல்துறையினர் பத்திரமாக மீட்டுச் சென்றனர்.

தமிழகம் முழுவதும் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. பயிர்கள் கருகி வருவதால் வேதனையில் விவசாயிகள் தற்கொலை செய்து வருகின்றனர். பயிர்கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி தமிழக விவசாயிகள் டெல்லியில் ஒரு மாதத்துக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளவேயில்லை.

இதனிடையே, மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. பல கிலோ மீட்டர் தூரம் மக்கள் கால்நடையாகவே சென்று தண்ணீர் கொண்டு வருகின்றனர். பல இடங்களில் தண்ணீர் கிடைக்காததால் மக்கள் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் ஆலம்பாளையத்தில் குடிநீர் கேட்டு இன்று பொதுமக்கள் காலிக்குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக அமைச்சர் தங்கமணி இன்று காரில் வந்தார். இதனை பார்த்த பொதுமக்கள், அமைச்சரின் காரை முற்றுகையிட்டனர். அவர்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினார் அமைச்சர். ஆனால், நாங்கள் குடிநீருக்காக பல நாள்களாக கஷ்டப்படுகிறோம். உடனடியாக எங்களுக்கு தண்ணீர்வேண்டும் என்று போர்க்கொடி தூக்கினர். அமைச்சர் எவ்வளவு பேசியும் பொதுமக்கள் கேட்காததால் அவரிடம் இருந்து அமைச்சர் தங்கமணியை, பாதுகாப்பு காவலர்கள் மீட்டுச் சென்றனர். பிரச்னைக்கு தீர்வு காணாமல் அமைச்சர் சென்றது பொதுமக்களை வேதனையடைய வைத்தது.

போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் அமைச்சர் தங்கமணி சிக்கிக்கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!