வீட்டுக்கு ஒரு நூலகம் அவசியமாகும்! ஜி.ராமகிருஷ்னன் வலியுறுத்தல் | Marxist communist party wishes over world book day

வெளியிடப்பட்ட நேரம்: 15:24 (22/04/2017)

கடைசி தொடர்பு:15:23 (22/04/2017)

வீட்டுக்கு ஒரு நூலகம் அவசியமாகும்! ஜி.ராமகிருஷ்னன் வலியுறுத்தல்

ஒவ்வொரு ஆண்டும் உலகபுகழ் பெற்ற நாடக ஆசிரியர் வில்லியம் ஷேக்ஸ்பியரின் பிறந்த நாளும், நினைவு நாளுமான ஏப்ரல் 23, உலக புத்தக தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. புத்தக தினத்தை முன்னிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து தெரிவித்துள்ளது.

g.ramakrishnan

இது குறித்து இன்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்னன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'அறிவை பொதுவாக்குகிற நெடிய பயணத்தில் புத்தக வாசிப்பு என்பது ஒரு முக்கியமான திருப்புமுனையாகும். பாறை ஓவியங்கள், பனை ஓலைச்சுவடிகள், கல்வெட்டுகள், செப்பேடுகள் என எழுத்தின் பயணம் காலத்துக்குக் காலம் மாறிவந்த நிலையில் காகிதம் மற்றும் அச்சு இயந்திரத்தின் கண்டுபிடிப்பு புத்தக உருவாக்கத்தில் பெரும் பாய்ச்சலை ஏற்படுத்தியது. தற்போது இளைஞர்களிடையே வாசிப்புப் பழக்கம் அதிகரித்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது. தமிழகம் முழுவதும் நடந்து வருகிற புத்தக திருவிழாக்களில் இளைஞர்கள், இளம்பெண்கள், மாணவ-மாணவிகள் பெருமளவில் பங்கேற்பதும், பல்துறை நூல்களைத் தேடி வாங்கி வாசிப்பதும் அதிகரித்துவருகிறது.

தமிழகத்தில் நூலகங்கள் நன்கு பராமரிக்கப்படுவதும் தேவையான நூல்களை வாங்குவதும், நூலகங்கள் இல்லாத கிராமங்களே இல்லை என்ற நிலையை உருவாக்குவதும் அவசியமாகும்.வீட்டிற்கு ஒரு நூலகம் என்ற இலக்கை நோக்கி தமிழ் சமூகம் பயணிப்பது அவசியமாகும். புத்தகங்கள் மனிதர்களை மட்டுமல்ல யுகங்களையும் இணைக்கிறது. அறிவை ஜனநாயகப்படுத்துகிறது என்ற உணர்வோடு அனைவருக்கும் புத்தக தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்' எனக் கூறியுள்ளார்.