கோடிக்கணக்கில் பண மோசடிப் புகார்: தீபாவிடம் போலீஸ் விசாரணை! | Police investigates Deepa

வெளியிடப்பட்ட நேரம்: 21:31 (23/04/2017)

கடைசி தொடர்பு:09:23 (24/04/2017)

கோடிக்கணக்கில் பண மோசடிப் புகார்: தீபாவிடம் போலீஸ் விசாரணை!

பணம்  மோசடி செய்த புகாரில், தீபாவிடம் போலீஸார் விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

Deepa


ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அவரது அண்ணன் மகள் தீபா, 'எம்.ஜி.ஆர் அம்மா தீபா' என்ற பேரவையைத் தொடங்கினார். இதற்கு நிர்வாகிகளை நியமனம் செய்ததில் அவருக்கும் அவர் கணவர் மாதவனுக்கும் பிரச்னை ஏற்பட்டது. இதனால், அவரது கணவர் கடந்த சில நாள்களுக்கு முன் புதுக் கட்சி துவங்கினார். 


இந்த நிலையில், நெசப்பாக்கத்தைச் சேர்ந்த ஜானகிராமன் என்பவர், விண்ணப்பப் படிவம் பெற, தீபா பணம் வசூலித்ததாகவும், பேரவை அங்கீகாரம் ரத்தானதையும் மறைத்து, தீபா பணம் வசூலித்துவருவதாகவும், கடந்த சில நாள்களுக்கு முன் போலீஸில் புகார் அளித்தார். குறிப்பாக, 20 கோடி ரூபாய் வரை அவர் பண மோசடியில் ஈடுபட்டதாக ஜானகிராமன் புகாரில் கூறி இருந்தார்.


மேற்கு மாம்பலம் காவல் நிலையத்தில் இந்தப் புகார் அளிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து, இது தொடர்பாக மாம்பலம் போலீஸார், தீபாவிடம் விசாரணை நடத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த தீபா, "புகார் அளித்தவர் யார் என்றே எனக்குத் தெரியாது.  இரண்டு காவலர்கள் என் வீட்டுக்கு வந்து சென்றுள்ளனர். விடுமுறை தினத்தன்று அவர்கள் வரவேண்டிய அவசியம் என்ன?. போலீஸ் என்னிடம் நேரடியாக விசாரணை நடத்தவில்லை. தவறான புகாரின் அடிப்படையில் காவலர்கள் வந்தனர். அரசியலில் இருந்து என்னை விரட்ட சதி நடக்கிறது. சசிகலா குடும்பம் அ.தி.மு.க-வை விட்டு விலகவில்லை. இரட்டை இலைச் சின்னத்தை மீட்பதற்காக நாடகம் நடத்துகின்றனர்.

சசிகலா குடும்பத்தின் வழிநடத்தல்படியே அ.தி.மு.க  இயங்குகிறது. இந்த ஆட்சி கலைக்கப்பட்டு, தமிழகத்தில் தேர்தல் நடத்த வேண்டும். அ.தி.மு.க-வில் இருந்து யார் அழைப்பு விடுத்தாலும் செல்ல மாட்டேன். என் கணவர் கூறியதாக வதந்திகள் பரப்பப்படுகிறது" என்றார்.