நாளை முழு அடைப்புப் போராட்டம் : யாரெல்லாம் ஆதரவு?

விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் நாளை நடைபெற உள்ள முழு அடைப்புப் போராட்டத்தில்... வணிகர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் திரையுலகினர் பங்கேற்கின்றனர். 

TN Bandh
 

விவசாயிகள் பிரச்னை தொடர்பாக, ஏப்ரல் 16-ம் தேதி அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலத் தலைவர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலப் பொதுச்செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், காங்கிரஸ் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில், 'ஏப்ரல் 25-ம் தேதி மத்திய அரசைக் கண்டித்தும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் முழுக் கடையடைப்புப் போராட்டம் நடத்தப்படும்' என்று அறிவிக்கப்பட்டது. அதற்கான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், தி.மு.க சார்பில் மாநிலம் முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ள முழுக் கடையடைப்புப்  போராட்டத்துக்கு வணிகர்கள், தொழிற்சங்கத்தினர் மற்றும் திரையுலகினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். 

முழுக் கடையடைப்புப்  போராட்டத்துக்கு  ஆதரவு தெரிவித்து, நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சுமார் 55,000 மணல் லாரிகள் ஓடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் யுவராஜ், இந்த  அறிவிப்பை வெளியிட்டார்.

இதையடுத்து, வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா, வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன் ஆகியோர் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்தனர். எனவே, தமிழகம் முழுவதும் நாளை கடைகள் அடைக்கப்படுகின்றன. மேலும், தொழிற்சங்கங்களைச் சேர்ந்த ஆட்டோ, சரக்கு வாகனங்களும் நாளை இயங்காது. விவசாயிகளுக்காக நடத்தப்படும் இந்தப் போராட்டத்துக்குத்  திரையுலகமும் ஆதரவு தெரிவித்துள்ளதால், திரையரங்குகளில் பகல் காட்சிகள் நாளை ரத்துசெய்யப்படுகின்றன. படப்பிடிப்புகளும் நாளை ரத்து செய்யப்படுவதாக நடிகர் சங்கம் அறிவித்துள்ளது.

இந்த முழு அடைப்புப் போராட்டத்தில் அ.தி.மு.க, பா.ஜ.க, த.மா.கா, பா.ம.க  ஆகிய அரசியல் கட்சிகள் பங்கேற்கவில்லை. இந்த முழு அடைப்புக்கு தமிழக அரசு ஆதரவு அளிக்காத நிலையில், நாளை  அரசுப் பேருந்துகளை போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்போவதாக போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!