கலகலக்குமா... சலசலக்குமா..? பன்னீர்செல்வம்- பழனிசாமி அணியினர் இன்று முதல்கட்ட பேச்சு!

சென்னையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் இன்று, ஓ.பன்னீர்செல்வம் அணி மற்றும் எடப்பாடி அணி இடையே முதல்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இதனால், சென்னை முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Opsvs Eps
 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், அ.தி.மு.க இரண்டாகப் பிரிந்தது. சசிகலா தலைமையிலான ஒரு அணியும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான மற்றொரு அணியும் உருவானது. சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்குச் சென்ற பின்னர், டி.டி.வி.தினகரன் ஆர்.கே.நகர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். சசிகலா அணியினர், தினகரன் உத்தரவுகளின் கீழ் செயல்பட்டதாகக் கூறப்பட்டது. பணப்பட்டுவாடா புகாரால் ஆர்.கே.நகர் தேர்தல் ரத்தானது. மற்றொரு புறம், இரட்டை இலைச் சின்னம் ஒதுக்கீடு தொடர்பான விசாரணை தேர்தல் ஆணையத்தில் நடைபெற்று வந்தது. இரட்டை இலைச் சின்னத்தைப் பெற, இடைத்தரகர் ஒருவருக்கு லஞ்சம் கொடுத்ததாக தினகரன் மீது வழக்குப்பதிவுசெய்தது டெல்லி போலீஸ். 

இதற்கிடையே, சசிகலா அணியும் ஓபிஎஸ் அணியும் இணைந்து இரட்டை இலைச் சின்னத்தை மீட்கப்போவதாகத் தகவல்கள் வெளியாகின. அந்தத் தகவலை உறுதிப்படுத்தும் வகையில், ’அ.தி.மு.க-வின் இரு அணிகளும் சேர்வதற்கான பேச்சுவார்த்தைக்குத் தயார்' என்று ஓ.பன்னீர்செல்வம் கடந்த சில நாள்களுக்கு முன்னர் அறிவித்தார். இதையடுத்து, சசிகலா அணியைச் சேர்ந்த அ.தி.மு.க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தனர். ஆனால், சசிகலா குடும்பத்தினரை ஒதுக்கிவைக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் நிபந்தனை ஒன்றை முன்வைத்தார். இதுகுறித்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏ-க்கள் ஆலோசனை நடத்தினர். அதன்பின், டி.டி.வி தினகரன் குடும்பத்தை ஒதுக்கிவைத்துவிட்டதாக அறிவித்தனர்.

தற்போது, இரு அணிகளும் தேர்தல் ஆணையத்தால் தற்காலிகமாக முடக்கிவைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க பெயர் மற்றும் இரட்டை இலைச் சின்னத்தை மீட்கும் முயற்சியில் இறங்கி உள்ளனர். அதற்கு முன், கட்சி இணைப்பு, பதவிகள் குறித்து இரு தரப்பிலும் ஆலோசனை நடைபெற்றுவருகிறது.

இரு அணிகளும் இன்று முதல்கட்ட பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். ஓ.பி.எஸ் அணியுடன் எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஏழு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. சென்னையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. சுமுகமாக முடிந்தால், அதிமுக இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருத்தரப்பினர் இடையே சலசலப்பு ஏற்படவும் வாய்ப்புகள் இருப்பதால், தலைமை அலுவலகம் சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!