இரட்டை இலைச் சின்னம்! மாவட்டச் செயலாளர்களுக்கு முக்கிய உத்தரவு!

இரட்டை இலைச் சின்னத்தை மீட்பது தொடர்பாக,  பிரமாணப்பத்திரங்களைத் தலைமை அலுவலகத்தில் மூன்று நாள்களுக்குள் தாக்கல்செய்ய வேண்டும்' என்று மாவட்டச் செயலாளர்களுக்கு அ.தி.மு.க அம்மா அணி உத்தரவிட்டுள்ளது.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், அ.தி.மு.க மூன்றாகப் பிரிந்தது. கட்சிப் பெயர் மற்றும் சின்னத்தைக் கைப்பற்றும் முயற்சியில் சசிகலா அணியினரும் பன்னீர்செல்வம் அணியினரும் தீவிரம் காட்டிவருகின்றனர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது, இரு அணிகளும் இரட்டை இலைச் சின்னத்தைக் கேட்டதால், கட்சியையும் சின்னத்தையும் தேர்தல் ஆணையம் முடக்கியது. சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளியான சசிகலாவும் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து, அ.தி.மு.க அம்மா கட்சியை டி.டி.வி.தினகரன் வழிநடத்திவந்தார். இதனிடையே, கட்சியையும் சின்னத்தையும் மீட்க, டி.டி.வி.தினகரனை கட்சியிலிருந்து ஒதுக்கிவைப்பதாக முதல்வர் பழனிசாமி அணியினர் அறிவித்ததோடு, பேச்சுவார்த்தைக்கு வருமாறு பன்னீர்செல்வம் அணிக்கு அழைப்பு விடுத்தனர். டி.டி.வி.தினகரனுக்கு எதிரான நடவடிக்கையை வரவேற்ற பன்னீர்செல்வம், பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்றார்.

இரு அணி தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்த குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவினர், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று பேச்சுவார்த்தை நடத்தயிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, இரட்டை இலைச் சின்னத்தை மீட்பது தொடர்பாக அனைத்து மாவட்டச் செயலளார்களுக்கும் அ.தி.மு.க. அம்மா கட்சியைச் சேர்ந்த முதல்வர் பழனிசாமி இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதில், இரட்டை இலைச் சின்னத்தை மீட்பது தொடர்பாக, பிரமாண பத்திரங்களைத் தாக்கல்செய்ய ஏற்கெனவே உத்தரவிடப்பட்டிருந்தது. ஏப்ரல் 25, 26, 27 ஆகிய தேதிக்குள் பிரமாணப்பத்திரங்களைத் தாக்கல்செய்ய வேண்டும். இந்தப் பிரமாணப் பத்திரங்களைக் கட்சியின் அவைத்தலைவர் செங்கோட்டையனிடம் ஒப்படைக்க வேண்டும்' என்று மாவட்டச் செயலாளர்களுக்கு கூறப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!