Published:Updated:

`அலட்சியமாக விடப்பட்டிருந்த 8,737 ஆழ்துளைக் கிணறுகள்!’ -அதிரடி காட்டிய வேலூர் கலெக்டர்

அரசின் வழிகாட்டுதலைப் பின்பற்றாமல், ஆழ்துளைக் கிணறுகளை அமைக்கும் நபர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆழ்துளைக் கிணற்றை எட்டிப்பார்க்கும் குழந்தைகள்
ஆழ்துளைக் கிணற்றை எட்டிப்பார்க்கும் குழந்தைகள்

மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில், இரண்டு வயதுக் குழந்தை சுஜித் வில்சன் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்து பலியான சம்பவத்தைத் தொடர்ந்து, பயனற்ற ஆழ்துளைக் கிணறுகளின் அபாயம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இத்தகைய கிணறுகளை மூடவும், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பாக மாற்றவும் மாவட்ட நிர்வாகம் மூலம் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. 

ஆழ்துளைக் கிணறு அருகே குழந்தை
ஆழ்துளைக் கிணறு அருகே குழந்தை

அதன்படி, வேலூர் மாவட்டத்தில் அலட்சியமாக விடப்பட்டிருந்த பயனற்ற 8,737 ஆழ்துளைக் கிணறுகள் விரைவாக மூடப்பட்டுள்ளன. இதுபற்றி கலெக்டர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ``ஆழ்துளைக் கிணறுகளை போர்க்கால அடிப்படையில் மூட வேலூர் மாநகராட்சி ஆணையர், 11 நகராட்சிகளின் ஆணையர்கள், 16 பேரூராட்சி செயல் அலுவலர்கள், 20 வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது. 

மாநகராட்சியில் 82, நகராட்சிகளில் 2,806, பேரூராட்சிகளில் 70, கிராமங்களில் 5,779 என மாவட்டம் முழுவதும் 8,737 ஆழ்துளைக் கிணறுகள் மூடப்பட்டுள்ளன. மூடப்படாத ஆழ்துளைக் கிணறுகள் காணப்பட்டால், என்னுடைய 9498035000 என்ற இந்த வாட்ஸ்அப் எண்ணில் பொதுமக்கள் எந்த நேரத்திலும் புகார் தெரிவிக்கலாம். புகார் அளிப்பவர்கள் உடனே அந்த ஆழ்துளைக் கிணற்றை கற்களை வைத்து தற்காலிகமாக மூடிவிட்டுச் செல்ல வேண்டும்.

கலெக்டர் சண்முகசுந்தரம்
கலெக்டர் சண்முகசுந்தரம்

தகவல் கிடைத்த சில மணிநேரத்தில், அந்தப் பகுதிக்கு அதிகாரிகள் நேரில் சென்று ஆழ்துளையை நிரந்தரமாக மூடுவார்கள். புதிதாகக் கிணறுகள் அமைக்கவும், ஏற்கெனவே உள்ள கிணறுகளை ஆழப்படுத்தவும் அனுமதி பெற வேண்டும். கிணறுகளை அமைக்கும் போர்வெல் நிறுவனங்கள் தங்களின் விவரங்களை கலெக்டர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். பாதுகாப்பு முன்னேற்பாடுகளையும் பின்பற்ற வேண்டும்.

பயன்பாடற்ற கிணறுகளை மூட வேண்டும். எக்காரணம் கொண்டும் திறந்த நிலையில் விடக் கூடாது. கிணறு அமைக்கும்போது, அந்த இடத்தைச் சுற்றிலும் முள் கம்பி வேலி அல்லது தகுந்த தடுப்புகளை அமைக்க வேண்டும். பணி இடைவேளையின்போது, துளையிடப்பட்ட குழி அல்லது கிணறு சரியாகவும், பாதுகாப்பான முறையிலும் மூடப்பட்டிருக்க வேண்டும். ஆழ் குழியின் மேற்புறத்தை பிளாஸ்டிக் அல்லது இரும்பு மூடியால் மூட வேண்டும்.

பிளாஸ்டிக் மூடியால் ஆழ்துளையை மூடும் அரசு அலுவலர்கள்
பிளாஸ்டிக் மூடியால் ஆழ்துளையை மூடும் அரசு அலுவலர்கள்

இந்த நடைமுறைகளைப் பின்பற்றாதவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும். அரசு அலுவலர்களும் உரிய விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். இல்லாவிட்டால், அலுவலர்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். ஆழ்துளை அமைக்கும்போது, அரசின் அனைத்து வழிகாட்டுதல்களைப் பொதுமக்கள் பின்பற்றுவதே சுஜித் வில்சனுக்கு நாம் செய்யும் அஞ்சலியாகும்’’ என்று கூறியுள்ளார்.