’கூடங்குளம் அணுமின்நிலையத்தில் நான்கு அலகுகளுக்கு ஒப்புதல் அளித்தது எப்படி?- உச்சநீதிமன்றம் கேள்வி

’கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள 3 முதல் 6 அலகுகள் வரை ஒப்புதல் அளிக்கப்பட்டது எப்படி’ என மத்திய அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது உச்சநீதிமன்றம்.

கூடங்குளம்

கூடங்குளம் அணுமின் நிலையத்தில், 3 முதல் 6 அலகுகளுக்கான கடற்கரை மேலாண்மைக்கான ஒப்புதல் வழங்கப்பட்டது குறித்து உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு, தேசிய எரிசக்தி ஆணையம் மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்து அமைப்புகளுக்கும் உச்சநீதிமன்றம் விளக்கம் கோரியுள்ளது.

அணுமின் நிலையத்தின் 3 முதல 6 அலகுகளுக்கான ஒப்புதலை நீக்குவதுகுறித்தும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ’பூவுலகின் நண்பர்கள்’ சார்பில், ஒப்புதலின் உண்மைத்தன்மையின் விசாரணை கோரி வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இதில், ’கூடங்குளம் அணு உலையில் 3 முதல் 6-வது அலகுகளுக்கு கடற்கரை மேலாண்மை ஒழுங்குமுறை மண்டலத்துக்கான ஒப்புதலுக்குப்  பரிந்துரைத்த நிறுவனம் ( Engineers India ltd), ஒரு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் இல்லை என்பதால், கடற்கரை மேலாண்மை ஒழுங்குமுறை ஒப்புதல் செல்லாது’ எனக் கூறப்பட்டுள்ளது.

இதனால், தற்போது உச்சநீதிமன்றம் ’இந்த ஒப்புதலை நிராகரித்தால் என்ன’ என மத்திய அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது. முன்னதாக பூவுலகின் நண்பர்கள் தொடர்ந்த வழக்கை, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தள்ளுபடி செய்திருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கில் மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளது உச்சநீதிமன்றம். இதற்கான விசாரணை, வரும் ஜூலை மாதம் நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!