முட்டுக்கட்டைக்கு இதுதான் காரணம்! பழனிசாமி அணி குற்றச்சாட்டு

பேச்சுவார்த்தைக்கு முன்னரே ஓ.பன்னீர்செல்வம் அணியினர் நிபந்தனைகளை விதிப்பது, அ.தி.மு.க இணைப்புக்கு முட்டுக்கட்டையாக அமைவதாக, எம்.பி.,வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். 

Vaithiyalingam
 

’அ.தி.மு.க-வின் இரு அணிகளும் மீண்டும் சேர பேச்சுவார்த்தைக்குத் தயார்' என்று ஓ.பன்னீர்செல்வம் சில நாள்கள் முன் அறிவித்தார். இதையடுத்து, சசிகலா அணியைச்சேர்ந்த அ.தி.மு.க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தனர். ஆனால், 'சசிகலா குடும்பத்தினரை ஒதுக்கிவைக்க வேண்டும்' என்று ஓ.பன்னீர்செல்வம் நிபந்தனை ஒன்றை முன்வைத்தார். இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏ-க்களுடன் ஆலோசனை நடத்தினார். அதன்பின், டி.டி.வி.தினகரன் குடும்பத்தை ஒதுக்கிவைத்துவிட்டதாக அறிவித்தனர். 

தேர்தல் ஆணையத்தால் தற்காலிகமாக முடக்கிவைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க பெயர் மற்றும் இரட்டை இலைச் சின்னத்தை மீட்கும் முயற்சியில், இரு அணிகளும் இறங்கி உள்ளன. அதற்கு முன், கட்சி இணைப்பு, பதவிகள் குறித்து ஓ .பி.எஸ் அணி பல்வேறு நிபந்தனைகளை விதிப்பதாகக் கூறப்பட்டது. 

ஓ.பன்னீர்செல்வம் அணியினருடன் எடப்பாடி பழனிசாமி தரப்பு இன்று பேச்சுவார்த்தை நடத்துவதாக இருந்தது. இந்த நிலையில், அ.தி.மு.க இணைப்புகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பு எம்பி., வைத்திலிங்கத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த வைத்திலிங்கம், “ஓ.பி.எஸ் தரப்பு, பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்னரே பல்வேறு நிபந்தனைகளை விதிக்கிறது. இது, பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டையாக அமையும். மேலும், அவர்கள் கேட்டுக்கொண்டப்படி ஜெயலலிதா மரணம் பற்றி சிபிஐ விசாரணை நடத்தத் தயார். ஆனால், அதற்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயார் ” என்று ஓ.பி.எஸ் அணிக்கு மீண்டும் அழைப்புவிடுத்துள்ளார்.

படம் : ஜெரோம்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!