'அ.தி.மு.க. எம்எல்ஏ-க்களுக்கு ரகசியத் தகவல்!' - அமைதியில் சசிகலா ஆதரவாளர்கள் #VikatanExclusive

ஓ.பன்னீர்செல்வம்

 

சசிகலா அணியில் இருந்த எம்எல்ஏ-க்களிடம் கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர். அதில், இக்கட்டான இந்த அரசியல் சூழ்நிலையில், மீதமுள்ள நான்கு ஆண்டு ஆட்சியை நடத்த சசிகலா, டி.டி.வி.தினகரனை கட்சியிலிருந்து ஒதுக்கிவைப்பதைத் தவிர வேறுவழியில்லை. இதற்கு, அனைவரும் சம்மதிக்க வேண்டும் என்று கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

 ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, ஓ.பன்னீர்செல்வம் முதல்வரானார். அடுத்து, சசிகலா, பொதுச் செயலாளராகத் தேர்வுசெய்யப்பட்டார். இந்தச் சூழ்நிலையில் சசிகலா, முதல்வராக முயற்சித்தபோது, சொத்துக்குவிப்பு வழக்கில் அவர் சிறைக்குச் சென்றுவிட்டார். அடுத்து, சசிகலா நியமித்த டி.டி.வி.தினகரனின் கட்டுப்பாட்டில் கட்சி வழிநடத்தப்பட்டது. முதல்வரான எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை செயல்பட்டுக்கொண்டுஇருக்கிறது. இதற்கிடையில், சசிகலாவுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில், அ.தி.மு.க.வில் மற்றொரு  அணி உதயமானது. 


இந்தச் சமயத்தில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சசிகலா அணி வேட்பாளராக கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் களமிறங்கினார். ஓ.பன்னீர்செல்வம் அணி வேட்பாளராக மதுசூதனன் போட்டியிட்டார். வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடாசெய்த விவகாரம் தொடர்பாக, தேர்தலை நிறுத்திவைத்தது தேர்தல் ஆணையம். இதற்கிடையில், அ.தி.மு.க-வின் இரண்டு அணிகளும் இரட்டை இலைச் சின்னத்துக்கு உரிமை கோரியதால், சின்னம் முடக்கப்பட்டது. சின்னம் தொடர்பான விசாரணை, தேர்தல் ஆணையத்திடம் நடந்து வருகிறது. இரண்டு அணிகளைச் சேர்ந்தவர்களும் சின்னத்தை மீட்டெடுக்க கடுமையாக முயற்சித்துவருகின்றனர். 


 இந்தச் சூழ்நிலையில், சசிகலா அணியைச் சேர்ந்த சிலர், சின்னத்தை மீட்டெடுக்க ஓ.பன்னீர்செல்வம் அணியுடன் சமரசப் பேச்சுவார்த்தைக்கு சம்மதித்தனர். பேச்சுவார்த்தைக்கான முயற்சிகளில், இரண்டு அணிகளைச் சேர்ந்தவர்களும் ஈடுபட்டுவருகின்றனர். இதற்கிடையில், சின்னத்தை மீட்டெடுக்க குறுக்குவழியில் கோடிக்கணக்கில் பணம் கொடுத்த விவகாரத்தில், டி.டி.வி.தினகரன் மீது டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவுசெய்துள்ளனர். இதுதொடர்பாக, அவரிடம் டெல்லி போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். 


 சசிகலா, டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட அவர்களது குடும்பத்தினரை கட்சியிலிருந்து விலக்க வேண்டும் என்ற தாரக மந்திரத்தை உச்சரிக்கும் ஓ.பன்னீர்செல்வம் அணியினரின் கோரிக்கைகளுக்கு சம்மதம் தெரிவித்துள்ளனர், சசிகலா அணியில் இருந்தவர்கள். இது, சசிகலா, டி.டி.வி.தினகரன் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழ்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் அணியினருடன் சமரசமாகச் செல்ல முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட சீனியர் அமைச்சர்கள் கிரீன் சிக்னல் கொடுத்துவிட்டனர். எல்லோரையும்விட இரண்டு அணிகளும் ஒருங்கிணைய தன்னுடைய நிதிஅமைச்சர் பதவியை ஓ.பன்னீர்செல்வத்துக்காக விட்டுக்கொடுக்கத் தயார் என்று வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார், அமைச்சர் ஜெயக்குமார். இதற்கு சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோரின் தீவிர ஆதரவாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றனர். அவர்களிடம் டி.டி.வி.தினகரன், 'நான்கு ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி தொடர, அமைதியாக இருங்கள்' என்று தெரிவித்துள்ளார். இதனால், ஆரம்பத்தில் டி.டி.வி.தினகரனுக்காக எதிர்ப்புக் குரல்கொடுத்த அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள் அமைதியாக இருக்கின்றனர். 

டி.டி.வி.தினகரன்


 ஓ.பன்னீர்செல்வம் அணியும், சசிகலா, டி.டி.வி.தினகரன் இல்லாத முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான புதிய அணியும் பேச்சுவார்த்தைக்குத் தயாராகிவருகிறது. இந்தப் பேச்சுவார்த்தையில், இரண்டு அணிகளும் பேசி ஒரு முடிவை எடுக்கப்போகிறது. அதற்குள், இரண்டு அணிகளைச் சேர்ந்தவர்களிடையே ஆயிரம் மனவருத்தங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஓ.பன்னீர்செல்வம் அணியினரின் பேச்சு, தங்களுக்கு கடும் வருத்தத்தை ஏற்படுத்துவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியினர் தரப்பில் சொல்லப்படுகிறது. இருப்பினும், அ.தி.மு.க ஆட்சி தொடரவும், சின்னத்தை மீட்டெடுக்கவும் அனைத்து மனவருத்தங்களையும் தாங்கிக்கொள்ளும் மனநிலைக்கு முதல்வர் பழனிசாமியின் அணியினர் மாறிவிட்டனர். 


 இதுகுறித்து கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் நம்மிடம், "கேப்டன் இல்லாத கப்பல்போல அ.தி.மு.க. தலைமை உள்ளது. தலைமைப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலா, சிறையில் இருக்கிறார். அடுத்து, கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் மீதுள்ள வழக்குகள் சூடுபிடித்துள்ளன. தற்போது, டெல்லி போலீஸாரின் விசாரணை வளையத்துக்குள் டி.டி.வி.தினகரன் இருக்கிறார். சின்னம் முடக்கப்பட்டதால், கட்சியினர் கவலையடைந்துள்ளனர். தொண்டர்களும் சசிகலா, டி.டி.வி.தினகரனை விரும்பவில்லை. இதையெல்லாம் கருத்தில்கொண்டுதான் சசிகலா, டி.டி.வி.தினகரனை கட்சியிலிருந்து ஓரங்கட்ட முடிவுசெய்யப்பட்டது. இந்த அறிவிப்பை ஓ.பன்னீர்செல்வம் அணியினர் வரவேற்றுள்ளனர். அடுத்து, இரண்டு அணிகளையும் ஒருங்கிணைக்கும் முயற்சிகள் நடந்துவருகின்றன. இதற்காக, இரண்டு அணிகளிலும் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் உள்ளவர்கள் கலந்துபேசி ஒரு முடிவை எடுப்பார்கள். மக்கள் வாக்களித்து, தொடர்ந்து இரண்டாவது முறையாக அ.தி.மு.க ஆட்சி மலர்ந்துள்ளது. அதை, அவ்வளவு எளிதாக தி.மு.க-விடம் கொடுத்துவிட மாட்டோம். இதுதொடர்பாக, கட்சியின் மூத்த நிர்வாகிகள், எம்எல்ஏ-க்களிடம் ஆலோசனை நடத்தியுள்ளனர். அதன்பிறகே சசிகலா, டி.டி.வி.தினகரனை கட்சியிலிருந்து ஓரங்கட்ட அனைவரும் சம்மதித்தனர். அடுத்து, அ.தி.மு.க. பிளவுப்பட்டுள்ளதால், கட்சியிலும் ஆட்சியிலும் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. இரண்டு அணிகளும் ஒருங்கிணைவதே ஒரே தீர்வு என்பது அ.தி.மு.க-வினருக்குத் தெரியும். இதுதொடர்பாக நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் சில அமைச்சர்களும், எம்எல்ஏ  -க்களும் ஓ.பன்னீர்செல்வம் அணியினருடன் பேச்சுவார்த்தை நடத்த சம்மதிக்கவில்லை. அவர்களிடம் அரசியல் சூழ்நிலைகளை விரிவாக எடுத்துச் சொல்லப்பட்டது. குறிப்பாக, வருமான வரிசோதனைகுறித்தும் விளக்கப்பட்டது. ஏன், டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக பேசியவர்கள்கூட இப்போது அமைதியாக இருப்பதற்குக் காரணம் இதுதான். கட்சியின் சீனியர்கள் சொன்ன விளக்கத்துக்குப் பிறகுதான் அனைவரும் ஓ.பன்னீர்செல்வம் அணியினருடன் பேச்சுவார்த்தைக்கு கிரீன் சிக்னல்கொடுத்தனர். இரண்டு அணிகளும் ஒன்றுசேர்ந்த பிறகு, அ.தி.மு.க-வில் மத்திய அரசின் தலையீடு இருக்காது என்று நம்புகிறோம். அதன்பிறகும் பா.ஜ.க. தலையிட்டால், ஜெயலலிதா பின்பற்றிய அஸ்திரத்தைக் கையில் எடுப்பதைத் தவிர வேறுவழியில்லை"என்றார். 

 
 பன்னீர்செல்வம் அணி தரப்பில் பேசியவர்கள், "இரண்டு அணிகளும் ஒருங்கிணைந்து செயல்படவே விரும்புகிறோம். ஒரு குடும்பத்தின் பிடியில் அ.தி.மு.க. இருப்பதை நாங்கள் விரும்பவில்லை. அதற்கு இப்போதுதான் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட சீனியர் அமைச்சர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர். சசிகலா குடும்பத்தினர் அ.தி.மு.க.வுக்காக எதுவுமே செய்யவில்லை. எங்களின் கோரிக்கைகளை அந்த அணியில் உள்ளவர்களிடம் சொல்லிவிட்டோம். பேச்சுவார்த்தைக்குப் பிறகு ஒரு நல்ல முடிவு எடுக்கப்படும். இரண்டு அணிகள் இணைய வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பம். அ.தி.மு.க-வில் பா.ஜ.க.தலையீடு எதுவுமே இல்லை. அது, தி.மு.க-வினர் சொல்லும் பொய்ப் பிரசாரம்"என்றனர். 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான புதிய அணியினர் கூறுகையில், "ஓ.பன்னீர்செல்வம் அணியிலிருந்து ஒவ்வொரு நாளும் புதிய நிபந்தனைகள் சொல்லப்படுகின்றன. அதுவே, பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டையாக இருந்துவருகிறது. இருப்பினும் பேச்சுவார்த்தை விரைவில் நடக்கும். ஓ.பன்னீர்செல்வம் அணியினருக்கு எங்கள் அணியிலிருந்து அழைப்புவிடுத்துள்ளோம். ஓ.பன்னீர்செல்வம் அணியினரும் ஆலோசனை நடத்திவருகின்றனர். இரண்டு அணிகள் இணைந்தவுடன் சின்னம் மீட்டெடுக்கப்பட்டுவிடும். அதன்பிறகு, அ.தி.மு.க உத்வேகத்துடன் மக்கள் பணியாற்றும். அப்போதுதான் பா.ஜ.க-வுக்கு நாங்கள் யாரென்று தெரியும்"என்றனர். 

எஸ்.மகேஷ் 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!