வெளியிடப்பட்ட நேரம்: 22:09 (24/04/2017)

கடைசி தொடர்பு:22:08 (24/04/2017)

வெயில் குடித்து வளரும் வணிகம்... காணாமல் போன தண்ணீர் பந்தல்கள்!

     இது   தண்ணீர்ப்பந்தல்  அல்ல, காலி குடங்கள்...                  

மிழகத்தில் சுட்டெரிக்கும் வெயிலின் கொடுமையில் இருந்து தப்பிக்க, காலை 11 மணிமுதல் பிற்பகல் 3 மணி வரை பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என்று கடந்த பத்து நாட்களாக எச்சரித்துக் கொண்டிருக்கிறது வானிலை ஆய்வு மையம். இது எந்த ஆண்டும் சொல்லாத அறிவிப்பு. எவ்வளவு வெயில் வாட்டினாலும், சாலையோரம் ஆங்காங்கே வைக்கப்படும் தண்ணீர்ப் பந்தல்கள், மக்கள் சுருண்டு விழுந்து சாகாமல், நிலைமையைக் கொஞ்சமாவது காப்பாற்றிக் கொண்டிருந்தது. அதுபோன்ற தண்ணீர்ப் பந்தல்கள் இந்த ஆண்டு எந்தவொரு கட்சிகளின் சார்பிலும் முற்றிலும் அமைக்கப்படவில்லை. வழக்கமாக, தலைநகர் சென்னை தொடங்கி தமிழகத்தின் அனைத்து மூலைகளிலும் 'அம்மா' பெயரிலும், 'அய்யா' பெயரிலும் இதர கட்சித் தலைவர்கள் பெயர்களிலும் வைக்கப்படும் தண்ணீர்ப்பந்தல்கள் இந்த ஆண்டு இதுவரை மிஸ்ஸிங்.அ.தி.மு.க. பொதுச்செயலாளராகவும், முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை, அதாவது கடந்த ஆண்டு கோடைக்காலம் வரை, அவரிடம் நல்லபெயர் எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில், கோடைக்கால தண்ணீர் பந்தல்களை அமைத்து, பத்திரிகைகளுக்கும், ஊடகங்களுக்கும் போஸ் கொடுத்த கழக உடன்பிறப்புகள் இந்த ஆண்டு ஏனோ, மக்களின் தாகத்தைத் தீர்க்கத் தவறிவிட்டார்கள். பொதுமக்களுக்கு தண்ணீர் என்பதையும் தாண்டி, கோடைக்கால தண்ணீர்ப் பந்தல்களில் தர்பூசணி, இளநீர், மோர் என்று வெயிலில் நின்று, கரைவேட்டிகளுடன் அமைச்சர்களும், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளும் இப்போது இல்லை. 

"அம்மாவே இல்லாதபோது, இதுபோன்ற பந்தல்களை அமைத்து யாரிடம் நல்ல பெயர் வாங்கப் போகிறோம்" என்று அவர்கள் நினைத்திருக்கலாம். சரி, அரசியல்வாதிகள்தான் இப்படியென்றால், திரைப்பட நடிகர்களுக்கு என்னவாயிற்று? சென்னையில் கடந்த ஆண்டு கோடைக்காலம் வரை முக்கிய சாலை சந்திப்புகள் உள்பட எங்கு பார்த்தாலும் தண்ணீர்ப் பந்தல்கள் கண்ணில் பட்டன. சூப்பர் ஸ்டார், விஷால், விஜய், அஜீத் தொடங்கி பவர் ஸ்டார் சீனிவாசன் வரை அவரவர் ரசிகர் மன்றங்கள் பெயரில் ஏற்படுத்தப்பட்ட தண்ணீர்ப் பந்தல்கள் இந்த ஆண்டு இல்லாமல் போனது ஏன்? கோயம்பேடு, பிராட்வே உள்ளிட்ட வணிக சந்தைப் பகுதிகளிலும், மக்கள் அதிகம்கூடும் இடங்களிலும் தண்ணீர்ப் பந்தல்கள் வைப்பதற்குக் கடும் போட்டி நிலவும். இப்போது  அந்தப் போட்டி வேறுபாதை நோக்கி பயணிக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. பெரிய கட்சிகள், பெரிய நடிகர்கள் எல்லோரும் மக்களின் தாகம் தீர்க்கும் தண்ணீர்ப் பந்தல்கள் அமைக்கும் பொதுத்தொண்டினை ஏனோ மறந்துள்ள நிலையில், மார்வாடி சங்கங்கள், ஜெயின் அமைப்புகள் மட்டும் வழக்கம்போல் இந்தச் சேவையை செய்து வருகின்றன. ஓரிரு இடங்களில் இந்துமுன்னணி, சிவசேனா, த.மு.மு.க, இந்திய தேசிய முஸ்லிம் லீக், தவ்ஹீத் ஜமாத், எஸ்.டி.பி.ஐ. போன்ற அமைப்புகளும் தண்ணீர்ப்பந்தலை ஆங்காங்கே அமைத்து, மக்களின் தாகம் தீர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. 

கடந்த காலங்களில் தண்ணீர்ப்பந்தல் வைத்த நடிகர்கள் பலரை தொலைபேசியில் தொடர்பு கொண்டோம். எந்தப் பலனும் இல்லை. அ.தி.மு.க., தி.மு.க., தே.மு.தி.க.,   போன்ற கட்சிகளையும் தொடர்பு கொண்டோம். தே.மு.தி.க. அலுவலகத்தில், "உங்கள் தகவலைப் பதிவு செய்து கொள்கிறோம். தலைவர் கவனத்துக்கு உடனே கொண்டு போகிறோம்" என்றனர். அ.தி.மு.க. அலுவலகத்தில் 'இணைப்பு' குறித்த பேச்சுவார்த்தையில் அனைவரும் பரபரப்பாக இருந்த நிலையிலும் பத்தாவது முறை முயற்சிக்குப் பலன் கிடைத்தது. "ஆமாங்க, நல்ல விஷயம்தான். இந்த வெய்யில் கொஞ்சம் கடுமைதான்,   தலைமைக் கழக நிர்வாகிகளிடம் உடனே தெரிவிக்கிறோம்"  என்றனர் அக்கறையுடன். "தி.மு.க. செயல்தலைவரான மு.க. ஸ்டாலினின் மக்கள் தொடர்பு எண்ணில் சொன்னால் உடனே நடவடிக்கை எடுக்கப் படும்" என்று அறிவாலய வட்டாரத்தில் தெரிவிக்கவே அந்த எண்ணான  07810878108-ல் தொடர்பு கொண்டு 'விகடன்' குரலாகவே தாகம் குறையாமல் பதிவு செய்தோம்.'நடவடிக்கை எடுப்பதாக' பதில் வந்திருக்கிறது... மக்கள் தாகம் தீர்ப்பதில் யாருக்குள் போட்டி இருந்தாலும் மகிழ்ச்சிதான்.

- ந.பா.சேதுராமன் 


டிரெண்டிங் @ விகடன்