வெளியிடப்பட்ட நேரம்: 18:34 (24/04/2017)

கடைசி தொடர்பு:18:43 (24/04/2017)

நெல்லையில் தண்ணீர் சத்தியாக்கிரகம்! நதி காக்க பொங்கிய தோழர்கள்!

நெல்லை

தாமிரபரணி தண்ணீரைப் பன்னாட்டுக் குளிர்பான நிறுவனங்களுக்குத் தாரைவார்க்கும் அரசின் முடிவைக் கைவிடக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தண்ணீர் சத்தியாக்கிரகப் போராட்டம் நடத்தினர். இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக்குழு உறுப்பினரான பிருந்தா காரத் பங்கேற்றார்.

நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் பிரபல பன்னாட்டுக் குளிர்பான தயாரிப்பு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களுக்கு 1,000 லிட்டர் தண்ணீர், வெறும் 37.50 ரூபாய் என்கிற அளவில் வழங்கப்படுகிறது. இதனால், இந்த நிறுவனங்கள் தினந்தோறும் 24 லட்சம் லிட்டர் தண்ணீரை உறிஞ்சுகின்றன. இதன் காரணமாகப் பொதுமக்களின் குடிநீர் தேவைக்கும், விவசாயத்துக்கும் தண்ணீர் கிடைக்காத நிலைமை உருவாகி உள்ளது. இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றக் கிளையில் தொடரப்பட்ட வழக்கில், தாமிரபரணி ஆற்றில் இருந்து குளிர்பான நிறுவனங்கள் தண்ணீர் எடுக்கத் தடை விதிக்க மறுத்துவிட்டது.

இது, பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சியினரிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. குடிநீருக்குக்கூடத் தண்ணீர் கிடைக்காத நிலையில், தாமிரபரணி ஆற்றில் இருந்து குளிர்பான நிறுவனங்களுக்குத் தண்ணீர் எடுக்கப்படுவதைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக ஆற்றுக்குள் இறங்கி முற்றுகைப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்குப் பொதுமக்களிடம் ஆதரவைத் திரட்டும் வகையில், பல்வேறு கிராமங்களுக்கும் சென்று மார்க்சிஸ்ட் கட்சியினர் விளக்கக் கூட்டங்கள் நடத்தியதுடன் துண்டுப் பிரசுரங்களையும் விநியோகித்தனர். 

இந்த நிலையில், தாமிரபரணி ஆற்றுக்குள் இறங்கிப் போராட்டம் நடத்த போலீஸார் அனுமதி மறுத்துவிட்டனர். இதையடுத்து, தாமிரபரணி நதிக்கரையில் ‘தண்ணீர் சத்தியாக்கிரகம்’ நடத்தப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்டச் செயலாளர் கே.ஜி.பாஸ்கரன் தலைமையில் நடந்த இந்தப் போராட்டத்தில், கட்சியின் மாநிலச் செயலாளரான ஜி.ராமகிருஷ்ணன், மையக்குழு உறுப்பினர் உ.வாசுகி மற்றும் பிருந்தா காரத் ஆகியோர் பங்கேற்றனர்.

''தண்ணீருக்கான சுதந்திரப் போராட்டம்!''

ஆர்பாட்டத்தில் பேசிய கே.ஜி.பாஸ்கரன், ‘‘தாமிரபரணி ஆற்றில் இறங்கி முற்றுகைப் போராட்டம் நடத்துவதற்கு போலீஸார் அனுமதிக்க மறுத்துவிட்டதால், இந்தச் சத்தியாக்கிரகப் போராட்டத்தை நடத்துகிறோம். இந்த நதிக்கரை, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இடம். இந்தியச் சுதந்திரத்துக்காக இதே இடத்தில் வ.உ.சி-யும் சுப்பிரமணிய சிவாவும் பேசி இருக்கிறார்கள். அப்படிப்பட்ட இடத்தில் இந்தப் போராட்டம் நடப்பது முக்கியத்துவம் வாய்ந்தது. இது, தண்ணீருக்கான சுதந்திரப் போராட்டம். பிரபல பன்னாட்டுக் குளிர்பான நிறுவனம் நெல்லைக்குள் காலடி எடுத்து வைத்தபோதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்த்தது. இந்தக் கம்பெனியை இங்கு அனுமதிக்கக் கூடாது என்பதற்காக 2005-லிருந்து நாங்கள் போராடி வருகிறோம். இப்போது விடுதலைப் போராட்ட வீரர்கள் பேசிய இடத்தில் இருந்து இந்தப் போராட்டத்தை நடத்துகிறோம். தண்ணீருக்கான எங்களின் சுதந்திரத் தாகம் அடங்கும் வரையிலும் இந்தப் போராட்டம் தொடரும்’’ என்று கொந்தளித்தார். 

மாநிலச் செயலாளரான ஜி.ராமகிருஷ்ணன், ‘‘தாமிரபரணி ஆற்றில் இருந்து குளிர்பான நிறுவனங்களுக்குத் தண்ணீர் எடுத்துக்கொள்ள நீதிமன்றம் அனுமதி அளித்திருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது. நீதிமன்றத்தில் அரசின் சார்பாக அளிக்கப்பட்ட அறிக்கையில், ஆற்றில் இருந்து உபரிநீர் கிடைப்பதாகத் தவறான தகவல் கொடுக்கப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையிலேயே இந்தத் தீர்ப்பு வெளியாகி இருக்கிறது. தாமிரபரணியைச் சுற்றிலும் உள்ள பல இடங்களுக்கு மாதத்துக்கு ஒருமுறை அல்லது இருமுறை மட்டுமே தண்ணீர் கிடைக்கிறது. அதனால் உபரிநீர் என்கிற பேச்சுக்கே இடமில்லை. இதுபோன்ற தவறான தகவல்கள் கொடுத்ததைக் கண்டிக்கிறோம். தாமிரபரணி ஆற்றில் இருந்து குடிநீர், விவசாயம் தவிர்த்து, குளிர்பான நிறுவனங்களுக்கு வழங்குவதைக் கண்டிக்கிறோம். இதனைக் கண்டித்து நாங்கள் தொடர் போராட்டங்களை நடத்துவோம்’’ என்றார்.

''சொட்டுத் தண்ணீர்கூடக் கொடுக்காதீர்!''

இதில் பேசிய பிருந்தா காரத், ‘‘இங்கு நீதிக்கான போராட்டம் நடக்கிறது. இங்கே, நாம் பல்லாயிரக்கணக்கில் திரண்டிருக்கும் சூழலில், நதிக்கரையில் ஏராளமான போலீஸார் கூடியிருக்கிறார்கள். நாம் நதியின் உள்ளே சென்று போராட்டம் நடத்த அவர்கள் அனுமதிக்கவில்லை. ஆனால், இந்த ஆற்றில் இருந்து பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தண்ணீர் கொடுப்பதைப் பற்றியும் மக்கள் தண்ணீருக்காகத் தவிப்பது குறித்தும் அவர்களுக்கு எந்தக் கவலையும் கிடையாது. இதுதான் இந்த அரசாங்கத்தின் மனநிலை. இந்த நாட்டில் இயற்கை வளங்கள் கொள்ளைபோகின்றன. ஆனால், அவற்றைப் பாதுகாக்க நாம் தொடர்ந்து குரல்கொடுத்து வருகிறோம். இப்போதுகூட இயற்கை வளம், பன்னாட்டு நிறுவனத்துக்குக் கொள்ளைபோய்விடக் கூடாது என்பதற்காகவே இந்தச் சத்தியாக்கிரகப் போராட்டத்தை நாம் நடத்துகிறோம். பிரதமர் மோடி அடிக்கடி, ‘மேட் இன் இண்டியா’ பற்றிப் பேசி வருகிறார். ஆனால், இங்கே உள்நாட்டில் உருவாகும் தண்ணீரை அமெரிக்க நிறுவனத்துக்குக் கொடுக்கிறார்கள். அதனை நாம் எதிர்ப்பதால், நாட்டின் கவனம் முழுவதும் இந்தப் போராட்டத்தின் பக்கமாகத் திரும்பியிருக்கிறது. தண்ணீர் எங்கள் உரிமை என்பதை வெளிப்படுத்தும் விதமாக இந்தப் போராட்டம் நடக்கிறது. நாடு முழுவதும் பிரபல பன்னாட்டுக் குளிர்பான நிறுவனத்துக்கு 27 இடங்களில் ஆலைகள் உள்ளன. இதுதவிர, பல்வேறு இடங்களில் உப நிறுவனங்களும் இருக்கின்றன.

நெல்லையில் போராட்டம்

லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீரை இந்த நிறுவனங்கள் கொள்ளையடித்துக் கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றன. ராஜஸ்தான் மாநிலத்தில் குடிப்பதற்கே தண்ணீர் கிடையாது. ஆனால், அங்கும் பன்னாட்டுக் குளிர்பான நிறுவனம் செயல்பட அனுமதி கொடுக்கப்பட்டு இருக்கிறது. இப்படி நமது நிலம், தண்ணீர் எல்லாம் கொள்ளை போகிறது. இதுபோன்று மக்களின் அனுமதி இல்லாமல் இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும். இதற்காக மக்கள் அனுமதி இல்லாமல் தண்ணீர் எடுக்கக்கூடாது என தனிச்சட்டம் இயற்றப்பட வேண்டும். இந்த ஆலைகள் தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்க மக்களிடம் கேட்கவில்லை; கிராமசபைக் கூட்டம் எதுவும் கூட்டப்படவுமில்லை; விவசாயிகளின் கருத்துகள் கேட்கப்படவுமில்லை. பன்னாட்டுக் குளிர்பான நிறுவனங்களுக்குத் தாமிரபரணி ஆற்றிலிருந்து ஒரு சொட்டுத் தண்ணீர்கூடக் கொடுக்கப்படக் கூடாது. நீதிமன்றத்தில் அ.தி.மு.க அரசு தவறான தகவலைக் கொடுத்துவிட்டது. நீதிபதிகளும் எந்த ஆய்வும் செய்யாமல் தீர்ப்பு வழங்கி இருப்பது வேதனை அளிக்கிறது. இதுபோன்ற விவகாரங்களில் நீதிபதிகள் உரிய ஆய்வு செய்து தீர்ப்பு வழங்க வேண்டும். இதை எல்லாம் அரசுக்கும் நீதிமன்றத்துக்கும் தெரிவிக்கும் வகையிலேயே இந்தச் சத்தியாக்கிரகப் போராட்டம் நடக்கிறது. நமது நிலத்தையும் நமது தண்ணீரையும் பாதுகாக்க இந்தப் போராட்டம் நடக்கிறது. விவசாயிகளும் பெண்களும் திரண்டுவந்து நடத்தும் இந்தப் போராட்டத்தின் மூலமாக வெற்றிகிடைக்கும்’’ என்றார் ஆவேசத்துடன். 

சுட்டெரிக்கும் வெயிலில் நடந்த இந்தப் போராட்டத்தில் ஏராளமான விவசாயிகளும் பெண்களும் பங்கேற்றதன் மூலமாக தாமிரபரணியைப் பாதுகாக்க பொதுமக்களிடம் மேலோங்கிவரும் ஆர்வத்தை வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தது.