வெளியிடப்பட்ட நேரம்: 22:11 (24/04/2017)

கடைசி தொடர்பு:22:11 (24/04/2017)

தமிழ்ப் பெண்களை இழிவாகப் பேசிய கேரள அமைச்சருக்கு எதிராக வெடித்தது போராட்டம்!

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், கேரளாவில் தமிழ்ப் பெண்கள் ஆவேசமாகப் போராட்டத்தில் குதித்துள்ளனர். கேரள மின்வாரியத் துறை அமைச்சர் மணி, தமிழ்ப் பெண்களை இழிவாகப் பேசியதால் மூணார் நகரம் கோபத்தில் கொந்தளித்துள்ளது. 

கேரளத்தில் தமிழ் பெண்கள் போராட்டம்

மூணார் மலைப் பகுதியில் உள்ள 'டாடா' நிறுவனத்துக்குச் சொந்தமான கண்ணன் தேவன் டீ நிறுவனத்தில்  நான்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். தேயிலைக் கொழுந்தைப் பறிக்கும் பணியில் ஈடுபடும் இவர்களில் 90 சதவிகிதம் பேர் தமிழ்ப் பெண்கள்.  `நாள் ஒன்றுக்கு 500 ரூபாய் கூலி உயர்வு வேண்டும்,  தினமும் 21 கிலோ தேயிலைதான் பறிக்க முடியும்'  போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 2015-ம் ஆண்டு போராட்டம் வெடித்தது. 

இந்தப் போராட்டத்துக்குத் தலைமை தாங்கியவர் பெண்கள் உரிமை அமைப்பின் தலைவர் கோமதி அகஸ்டின். பெண்கள் நடத்திய இந்தப் போராட்டத்தைத் தோல்வியடையச் செய்ய, தொழிற்சங்கங்கள் மறைமுகமாகப் பல வேலைகள் பார்த்தன. தொழிற்சங்க நிர்வாகிகள், நிர்வாகத்துடன் இணைந்துகொண்டு, கோமதி தலைமையிலான போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்ய என்னவெல்லாம் செய்ய முடியுமோ... அத்தனையும் செய்தனர். மலையாளப் பத்திரிகைகள், 'தமிழ்த் தீவிரவாதிகளின் போராட்டம்' எனச்  செய்திகள் வெளியிட்டன. ஆனாலும், கோமதி சளைக்கவில்லை. பெண்கள் நடத்திய இந்தப் போராட்டம் பெரும் வெற்றிபெற்றது. தொடர்ந்து, 'பெண்கள் உரிமை' என்ற பெயரில் அமைப்பைத் தொடங்கிய கோமதி, உள்ளாட்சித் தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றிபெற்றார். பின்னர், மார்க்ஸிஸ்ட் கட்சியில் சேர்ந்து அதிலிருந்து விலகினார். 

இந்த நிலையில், மூணார் அருகே உள்ள அடிமலையில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் கேரள மின்வாரிய அமைச்சர் எம்.எம்.மணி பேசினார். '' பெண்கள் உரிமை அமைப்பைச் சேர்ந்த பெண்கள், உள்ளுர் அதிகாரிகளுடன் சேர்ந்துகொண்டு சமூகத்துக்குப் புறம்பான செயல்களில் ஈடுபடுகின்றனர். காட்டுக்குள் என்னவெல்லாமோ நடக்கின்றன. எல்லாம் எனக்குத் தெரியும்'' என்றரீதியில் பேசினார். மணியின் இந்தச் சர்ச்சைக்குரிய பேச்சையடுத்து , மூணாரில் பெரும் போராட்டம் வெடித்திருக்கிறது. பெண்கள் உரிமை அமைப்பைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நகரில் பதற்றம் நிலவுகிறது. கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. போலீஸார் பாதுகாப்புக்காகக் குவிக்கப்பட்டுள்ளனர். 

அமைச்சரின் பேச்சுக்கு, பெண்கள் உரிமை அமைப்பின் தலைவர் கோமதி அகஸ்டின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளளார்.  '' அமைச்சர் மணி, மூணார் வந்து எங்கள் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்க வேண்டும். தேயிலை பறிக்கும் பெண்களைப் பற்றி அவருக்கு என்ன தெரியும்? எங்களைப் `பரத்தையர்' எனப் பேசும் அளவுக்கு  அவருக்குத் தைரியம் எங்கேயிருந்து வந்தது? எங்களை மட்டுமல்ல, ஒட்டுமொத்த பெண் சமூகத்தையே கேவலமாகப் பேசியுள்ளார் மணி. உரிமைக்காகப் போராடிய எங்களின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் அவர், பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்'' என்று எச்சரித்துள்ளார். 

அமைச்சர் மணியின் பேச்சு, கேரளத்தில் பெண்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பலதரப்பில் இருந்தும் அவருக்குக் கண்டனம் குவிந்துவருகிறது.

நடிகை மஞ்சுவாரியார் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், `அமைச்சர் மணி மன்னிப்புக் கேட்பதோடு, இனிமேல் பெண்கள் குறித்து கண்ணியமான வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்துவேன் என்று  உறுதியளிக்க வேண்டும். அமைச்சரின் இந்தப் பேச்சு, தேசத்துக்கே தலைக்குனிவு. பெண்களை இப்படி விமர்சிப்பதன் வழியே சமூகத்துக்கு அவர் என்ன சொல்ல வருகிறார்?' எனக் கண்டித்துள்ளார். 

அமைச்சர் மணி, ''இந்த விஷயத்தில் தான் மன்னிப்புக் கேட்கப்போவதில்லை. கட்சி, மன்னிப்புக் கேட்கச் சொன்னால்  எனது பதவியை ராஜினாமா செய்வேன்'' எனத் தெரிவித்துள்ளார். 

- எம்.குமரேசன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்