வெளியிடப்பட்ட நேரம்: 22:14 (24/04/2017)

கடைசி தொடர்பு:10:23 (25/04/2017)

சத்தீஸ்கர் மாவோயிஸ்ட் தாக்குதலில் 3 தமிழர்களும் பலி!

சத்தீஸ்கரில், மாவோயிஸ்ட் நடத்திய தாக்குதலில்... தமிழகத்தைச் சேர்ந்த மூன்று சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் பலியாகியுள்ளனர்.

சத்தீஸ்கர் சுக்மா மாவட்டத்தில் இன்று, பணியில் ஈடுபட்டிருந்த சிஆர்பிஎஃப் படையினர் மீது மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, மாவோயிஸ்டுகளுக்கும் மத்திய ரிசர்வ் படை போலீஸாருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சூடு நடந்தது. இதில், 26 சிஆர்பிஎஃப் வீரர்கள் பலியாகினர். இந்தத் தாக்குதலில், மூன்று தமிழக வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த செந்தில் குமார், அழகுபாண்டி மற்றும் திருமுருகன் ஆகியோர் இந்தத் தாக்குதலில் பலியாகியுள்ளனர் என முதற்கட்டத் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, அவர்களின் உடல்களை தமிழகம் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. கடந்த மார்ச் 11-ம் தேதி அன்றும், சுக்மா மாவட்டத்தில் இதே போன்ற தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இதில், 12 வீரர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.