வெளியிடப்பட்ட நேரம்: 12:23 (25/04/2017)

கடைசி தொடர்பு:13:28 (25/04/2017)

‘விவேக்கை வீழ்த்துங்கள் வைத்திலிங்கம்!’ - அணிகள் இணைப்பில் பன்னீர்செல்வத்தின் கெடுபிடி #VikatanExclusive

பன்னீர்செல்வம்

அ.தி.மு.கவின் இரண்டு அணிகளும் முதற்கட்ட பேச்சுவார்த்தையை இன்னும் தொடங்கவில்லை. ‘பேச்சுவார்த்தையில் எதுவும் நிகழலாம்' என்பதால், நேற்று தலைமைக் கழகத்தில் பாதுகாப்பு அரண் அமைத்தது சென்னை மாநகர காவல்துறை. 'சசிகலாவை கட்சியில் இருந்து நீக்குவதைவிடவும், விவேக் ஜெயராமனை நீக்குவதைத்தான் மிக முக்கியமானதாகப் பார்க்கிறார் பன்னீர்செல்வம். இதற்கான அழுத்தத்தை எதிர்கொள்ள முடியாமல் தவித்து வருகிறார் எம்.பி.வைத்திலிங்கம்" என்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள்.

அண்ணா தி.மு.கவின் வரலாற்றில் மிக முக்கியமான காலகட்டத்தை எதிர்கொண்டு வருகின்றனர் அதன் தொண்டர்கள். 'அடுத்து என்ன நடக்கும்?' என்ற கேள்வியோடு அவர்கள் வலம் வந்தாலும், கட்சியின் எதிர்காலம் குறித்த கவலை அவர்களைப் பெரிதும் வாட்டியெடுக்கிறது. ‘இரண்டு பேரும் இணைந்து அம்மா பெயரைக் காப்பாற்றுங்கள்' என்பதுதான் அவர்களின் பெரு விருப்பமாக இருக்கிறது. அதற்கேற்ப, சில இழுபறிகளுக்குப் பிறகு இன்று முதற்கட்ட பேச்சுவார்த்தையைத் தொடங்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. "அணிகள் இணைவது என முடிவெடுத்த பிறகு, வைத்திலிங்கம் எம்.பி தலைமையில் குழு அமைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. இந்தக் குழு பேசத் தொடங்குவதற்கு முன்பே, பத்திரிகையாளர்களிடம் கொந்தளிப்பைக் காட்டத் தொடங்கிவிட்டார் பன்னீர்செல்வம் அணியின் கே.பி.முனுசாமி, 'அம்மா மரணத்துக்கு நியாயம் வேண்டும்; சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கிவிட்டு வந்து பேசுங்கள்' என அதிர வைக்க, 'நிபந்தனைகளைப் பற்றி குழுவிடம் பேசாமல் பத்திரிகையாளர்களிடம் பேசுவது நியாயமா?' என நிதானம் காட்டியது எடப்பாடி பழனிசாமி தரப்பு. ஆனால், நடைமுறைக்கு சாத்தியமில்லாத பல டிமாண்டுகளை பன்னீர்செல்வம் தரப்பில் முன்வைக்கின்றனர். குறிப்பாக, விவேக் ஜெயராமனை முழுமையாக ஒதுக்கி வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்" என விவரித்த அ.தி.மு.க தலைமைக் கழக நிர்வாகி ஒருவர், 

விவேக் ஜெயராமன்"அணிகள் இணைப்பு முயற்சி தொடங்கியபோது, 'சி.எம் யார் என்பதை கலந்தாய்வுக்குப் பிறகுதான் முடிவு செய்ய வேண்டும்' என பன்னீர்செல்வம் தரப்பினர் கூறினார்கள். அதற்கும் சரி என்று சொன்னோம். 'அம்மா மரணத்துக்கு சி.பி.ஐ விசாரணை வேண்டும். அதுவும் தமிழக முதல்வர் உடனே அறிவிக்க வேண்டும்' என்றார்கள். அதன்பிறகு, 'கட்சி அலுவலகத்தில் உள்ள சசிகலா படத்தை எடுக்க வேண்டும்' எனக் கூறியபோது, 'அந்த அம்மா நாலு வருஷம் ஜெயலில்தான் இருக்கப் போறாங்க. அவங்க தலையீடு எதுவுமே இருக்கப் போறதில்லை. கட்சியை வழிநடத்த துணைப் பொதுச் செயலாளர்கள் அடங்கிய கமிட்டியை உருவாக்குவோம். உங்கள் தரப்பில் இரண்டு பேரும் எங்கள் தரப்பில் இரண்டு பேரும் இருக்கட்டும்' என சமாதானம் பேசினார் வைத்தி. இதனை பன்னீர்செல்வம் தரப்பினர் ஏற்றுக் கொள்ளவில்லை.

ஒருகட்டத்தில், ‘தேர்தல் ஆணையமே சசிகலா நியமனம் செல்லாது என்று கூறிவிடும். உங்கள் நிபந்தனைகளால், சசிகலா தரப்புக்கு பரிதாபம்தான் தேடித் தரும். அமைதியாக இருங்கள்' எனக் கூறியும் ஏற்றுக் கொள்ளவில்லை. அதிலும், சசிகலா குடும்பத்தால் பன்னீர்செல்வம் பாதிக்கப்பட்டதைவிடவும், வைத்திலிங்கம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார். சொந்த தொகுதியான ஒரத்தநாடு தொகுதியில் அவரைத் தோற்கடிக்க வைத்தவர் திவாகரன். அந்தக் கோபம் அவருக்கு உண்டு. அது பன்னீர்செல்வத்துக்கும் தெரியும். அதனால்தான், 'பொதுச் செயலாளர் பதவியை வைத்திக்குக் கொடுங்கள்' என்றெல்லாம் எடப்பாடி பழனிசாமி தரப்பில் பேசினார்கள். இதைவிட, உச்சகட்டகமாக, விவேக்கை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்பது பன்னீர்செல்வத்தின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்று" என விவரித்தவர், 

"சசிகலா உறவினர்கள் அனைவரையும் கட்சியை விட்டு நீக்க வேண்டும் என முனுசாமி சொல்கிறார். தற்போது கட்சியில் திவாகரனும் அவர் குடும்பமும் கிடையாது. தினகரனும் வெங்கடேஷும் சசிகலாவால் கட்சிக்குள் கொண்டு வரப்பட்டவர்கள். 'சசிகலா நியமனம் செல்லாது' என்னும்போது, இவர்களை கட்சிக்குள் அனுமதித்ததும் செல்லாததாகிவிடும் என்பது ஒருபுறம் இருக்க, விவேக் மட்டும்தான் இவர்களது கண்களை உறுத்த ஆரம்பித்திருக்கிறார். கடந்த எட்டு வருடமாக கட்சியின் உறுப்பினராகவும் இருக்கிறார். அதுவும் 81, போயஸ்கார்டன் முகவரியிலேயே அவருக்கு உறுப்பினர் அடையாள அட்டை இருக்கிறது. ஜெயலலிதா கையால் உறுப்பினர் அட்டையை வாங்கியவர் அவர். போயஸ் கார்டன் முகவரியில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, விவேக் ஆகிய நால்வருக்குத்தான் அடையாள அட்டை இருக்கிறது. இந்தத் தகவல் பன்னீர்செல்வத்துக்கு மட்டும்தான் தெரியும். கட்சியின் அடையாளமாக ஜெயா டி.வி இருக்கிறது. தற்போது ஜெயா டி.வியின் நிர்வாகியாக விவேக் இருக்கிறார். 'விவேக்கை வீழ்த்தினால்தான் ஜெயா டி.வியைக் கைப்பற்ற முடியும். நமது எம்.ஜி.ஆரும் பெரிய தலைவலியாக இருக்கிறது' என பன்னீர்செல்வம் நினைக்கிறார். இந்தக் கோரிக்கையை வைத்திலிங்கத்திடம் வலியுறுத்தியபோது, 'எந்த அடிப்படையில் அவரை நீக்க வேண்டும் என்கிறீர்கள்? இந்தக் குடும்பத்துக்கு ஆதரவா...எதிர்ப்பா என்பதிலும் அவர் வெளிப்படையான கருத்தைச் சொன்னதில்லை. நேரடி அரசியலுக்கும் அவர் வந்ததில்லை. சசிகலா குடும்பத்தை அம்மா நீக்கி வைக்கும்போதுகூட, விவேக் பெயர் அதில் இடம்பெறவில்லை. சொந்த பந்தங்களை நீக்கிவிட்டுத்தான், ஜாஸ் சினிமாஸ் சி.இ.ஓ பதவியை அவருக்கு அளித்தார் ஜெயலலிதா' என விளக்கினார். 

வைத்திலிங்கம்இந்தக் கருத்தை பன்னீர்செல்வம் ஏற்றுக் கொள்ளவில்லை. காரணம். விவேக்கின் முழு ஜாதகத்தையும் அவர் அறிந்து வைத்திருக்கிறார். அ.தி.மு.க நிர்வாகிகள் யாரிடமும் பேசாத விவேக், பன்னீர்செல்வத்திடம் மட்டும் பேசுவார். அவருடைய சுபாவத்தை உணர்ந்து, தன்னுடைய இரண்டு மகன்களையும் விவேக்கிடம் பழக வைத்தார் பன்னீர்செல்வம். 'அந்தக் குடும்பத்திலேயே உறுப்பினராக இருக்கும் ஒரே நபர் விவேக் மட்டும்தான். விவேக்கை வீழ்த்தினால்தான் அனைத்தையும் முடிவுக்குக் கொண்டு வர முடியும்' என்பதால், கே.பி.முனுசாமியைப் பேச வைக்கிறார் பன்னீர்செல்வம். இந்தக் கோரிக்கைக்குப் பதில் சொன்ன எடப்பாடி பழனிசாமி தரப்பினர், 'இதை வெளியில் சொன்னால் சிரித்துவிடுவார்கள். அவரை நீக்க வேண்டும் என நீங்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் அபத்தமாக இருக்கிறது' எனக் கூறியுள்ளனர். ஆனால், இந்தக் கோரிக்கையில் உறுதியாக இருக்கிறார் பன்னீர்செல்வம்" என்றார் விரிவாக.

இதுகுறித்து விவேக் தரப்பில் பேசியபோது, " முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்த காலத்திலேயே, தீவிர அரசியலுக்கு வர அவர் விரும்பியதில்லை. அவருடைய நோக்கம் எல்லாம் பிசினஸ் மட்டும்தான். அந்த அடிப்படையில்தான் ஜெயா டி.வி நிர்வாகத்தை கவனித்து வருகிறார். அவரை நீக்கினால்தான் இணைப்பு சாத்தியம் என்றால், அதற்கும் அவர் தயாராகவே இருக்கிறார். அதேநேரம், எந்தக் குற்றச்சாட்டுக்கும் ஆளாகாத அவரை சீண்டுவதன் மூலம், தீவிர அரசியலை நோக்கி அவரை திசை திருப்புகிறார் பன்னீர்செல்வம்" என்கின்றனர் நிதானமாக.

பரப்பன அக்ரஹாரா சிறையில் ஜெயலலிதா அடைக்கப்பட்டபோது, மருந்து எடுத்துச் செல்லும் இளைஞனாக அமைச்சர்களின் கண்களில் தெரிந்தார் விவேக். ஜாஸ் சினிமாஸ் நிர்வாகியாக நியமிக்கப்பட்டபோது, தி.மு.க தலைவர் கருணாநிதியால் விமர்சிக்கப்பட்டார்.  அ.தி.மு.கவின் அணிகள் இணைப்பிலும் பன்னீர்செல்வத்துக்கு உறுத்தலாக இருக்கிறார் விவேக் ஜெயராமன். ' அரசியலில் உங்கள் எதிரி என நீங்கள் யாரையாவது தீர்மானித்துவிட்டால், அவர்களை முற்றாக அழித்துவிடுங்கள்' என்ற சாணக்கிய நீதியை நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறார் பன்னீர்செல்வம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.


டிரெண்டிங் @ விகடன்