தமிழக வீரர்கள் நான்கு பேரின் குடும்பத்தினருக்கு 80 லட்சம் நிதியுதவி- முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலால் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த நான்கு துணை ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு, தலா 20  லட்சம் ரூபாய்  உடனடியாக  வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில், இந்திய நாட்டின் உள்பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த  திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம், நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவரின் மகன் மு.பத்மநாபன், நீடாமங்கலம் வட்டம், காமராஜர் காலனியைச் சேர்ந்த நாராயணன் என்பவரின் மகன் நா.செந்தில்குமார், சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட்டம், நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த நல்லதம்பி என்பவரின் மகன் ந.திருமுருகன் மற்றும் மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், முத்துநாகலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த பிச்சைஅழகு என்பவரின் மகன் பி.அழகுபாண்டி ஆகிய தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய ரிசர்வ் காவல் படைத் துணை ராணுவ வீரர்கள் (CRPF), 24.4.2017 அன்று உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து,  மிகுந்த துயரமும் மன வேதனையும்  அடைந்தேன்.

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த துணை ராணுவ வீரர்களை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினருக்கு, எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்த துணை ராணுவ வீரர்கள் மு.பத்மநாபன், நா.செந்தில்குமார், ந.திருமுருகன் மற்றும் பி.அழகுபாண்டி ஆகியோரின் குடும்பத்தினருக்கு  தலா 20  லட்சம் ரூபாய்  உடனடியாக  வழங்க உத்தரவிட்டுள்ளேன்" என்று கூறியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!