“சசிகலா ஜெயில்ல.. தினகரன் இல்ல.. பன்னீர்செல்வம் வெல்கம்!” - வளர்மதியின் அழைப்பு

வளர்மதி

திமுகவை தனியொருவராக தாங்கி வந்தவர் ஜெயலலிதா. அவருடைய போர்க்குணத்துக்கு பம்மிப் பதுங்கியவர்கள் பலர். ஆனால் அவையெல்லாம் தலைகீழாகப்போனது அவருடைய மரணத்துக்குப் பிறகு.

அதிமுகவைச் சேர்ந்தவர்கள், பலரும் ஜெயலலிதாவின் சமாதிக்கு வந்து சத்தியம் செய்வது, தியானம் செய்வது, பிராத்திப்பது என்று பரபரப்பை ஏற்படுத்தினர். மீடியாக்களுக்கு முன்பு தான் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் சிலர் சகட்டு மேனிக்கு பேட்டி கொடுத்தார்கள்.

அதில் முக்கியமானவர் முன்னாள் அமைச்சர் வளர்மதி.

வளர்மதி என்றாலே நெற்றியில் மிகப்பெரிய பொட்டும், ஜெயலலிதா இருந்தவரை கொண்டாட்டமோ, சோகமோ மீடியாவைப் பார்த்து செய்யும் மெயின் ஆளாக வலம் வந்தவர். அதிமுக ஓ.பி.எஸ் அணி, சசிகலா அணி என்று இரண்டாக பிரிந்தபோது சசிகலாவின் பின்னால் நின்று ஓ.பன்னீர்செல்வத்தைப் பற்றி கூறுகையில், ‘இல்லாதவரைப் பற்றி இங்கு என்னப் பேச்சு?’ என ஆவேசமாக வசைப்பாடினார்.

ஓ.பி.எஸ்க்கு பிடித்தமானவர்களை சகட்டு மேனிக்கு வார்த்தைகளால் வறுத்தெடுத்தவர். இப்போது எப்படியிருக்கிறார்... ஓ.பி.எஸ் கட்சியில் இணைவதை எப்படி பார்க்கிறார் என்று அறிய கால் செய்தோம்

வளர்மதி

கேள்விகளுக்கு நிதானமாக பதில் தந்தார்

“என்னைப் பொறுத்தவரை ஓ.பி.எஸ், எடப்பாடி அணி இரண்டு ஒன்றாக இணைய வேண்டும். இதுதான் மக்களின் விருப்பமும், தொண்டர்களின் விருப்பமும். எனது எண்ணமும் செயல்பாடும் இரண்டு அணிகளும் இணைவது பற்றிதான்.

அ.தி.மு.க. மிகப்பெரியக்கட்சி. ஜெயலலிதா அம்மா மரணத்துக்குப் பிறகு கட்சியை ஒ.பி.எஸ் தன்னுடைய பேட்டியால் நடத்தையால் உடைத்ததைக் கண்டு ஆவேசமானேன். அதனால் அவரை வசைபாடினேன். அதெல்லாம் கட்சியில் இருக்கும் ஒருவரால் கட்சி உடைவதை காண முடியாத ஆதங்கமே. ஆனால் கோபமும் ஆதங்கமும் நிரந்தரமாக தங்கியிருக்காது அல்லவா. இப்போது பக்குவப்பட்ட மனிஷியாகிவிட்டேன். கட்சிக்கு எது நல்லதோ அதுவே என் எண்ணமும் செயல்பாடும்.

இப்போது எங்களின் முக்கிய குறிக்கோளே கட்சியின் இரட்டை இலைச் சின்னத்தை மீட்க வேண்டும் என்பதுதான். ஓ.பி.எஸ்., ஜெயலலிதா மரணத்தில் ஒளிந்திருக்கும் உண்மைகளை வெளிக்கொண்டுவர வேண்டும் என்கிறார். அவரின் நிபந்தனைகளுக்கு பேச்சுவார்த்தை குழுத்தலைவர் வைத்தியலிங்கம் 'நீதிமன்றம் ஆணையிட்டால் விசாரணை நடத்த நாங்கள் தயார் என்றிருக்கிறார். ஓ.பி.எஸ்ஸின் இரண்டாவது நிபந்தனை... சசிகலா மற்றும் தினகரன் கட்சியை விட்டு ஒதுங்க வேண்டும் என்பதே...

தற்போது சசிகலா ஜெயிலில் இருக்கிறார்... தினகரன் கட்சியை விட்டே ஒதுங்கி விட்டார் என்பது நாடறிந்தது. ஓ.பி.எஸ்ஸின் இரண்டு நிபந்தனைகளுக்கும் நாங்கள் செவிசாய்த்திருக்கிறோம். தாரளமாக ஓ.பி.எஸ் உள்ளே வரலாம். அவர் கட்சியில் இணைவதையே நானும் விரும்புகிறேன்.

ஜெயலலிதா எங்களைப் போன்ற பெண்களுக்கு இயக்கத்தில் முக்கியத்துவம் கொடுத்ததால்தான் இன்றளவும் என்னால் சிறப்பாக பணிபுரிய முடிகிறது. அம்மாதான் இப்போது இருப்பவர்களுக்கும் பிரிந்து போனவர்களுக்கும் தெய்வம். அவர் காட்டிய வழியில்தான் நாங்கள் பயணித்துக்கொண்டிருக்கிறோம்.

அப்படிப்பட்ட கட்சியில் தினகரன் தொடர்ந்து நீடிக்கிறார் என்று அறிக்கை விடுவதெல்லாம் கற்பனை. அவர் தலையீடு என்றுமே தொடராது. கட்சியில் அனைவரும் இணைந்து ஒன்றாக சிறப்பான ஆட்சியை தரவேண்டும் என்பதே என்னுடைய எண்ணம்'' என்று முடித்துக்கொண்டார் வளர்மதி .

Do you like the story?

Please Appreciate the Author by clapping!